Tuesday, 23 December 2014

நேர்மை, எளிமை, ஏழ்மை, தூய்மை-கக்கன்

கக்கனும், காமராஜரும் ஏழையாக வந்தார்கள். ஏழையாகவே இருந்தார்கள். ஏழையாகவே இறந்தார்கள். பதவியையும், அதிகாரத்தையும் தம் சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் மக்களுக்காகவே வாழ்ந்த பிழைக்க தெரியாதவர்கள் இவர்கள். ராமர் , மகாவீரர், புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்ற மகான்களை நம் கண் முன் நிஜமாக நிறுத்தி வாழ்ந்து காட்டிய மகான்கள் இவர்கள். இதிகாசங்களை மத நூல்களையும் படிப்பதை விட இவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை இளைஞர்களும் இளைஞிகளும் படித்தால் போதும்  நாடும் ,அரசியலும் முன்னுக்கு வந்துவிடும். கக்கன் அவர்களின் நினைவு நாள் பதிவு இது!

25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.
நன்றி : ஆனந்த விகடன்.



”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத்தான் நான் முதன்முதலில் பெரியவரைப் பார்த்தேன்.
திரு.வெங்கடாசலபதி என்பவரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்கமாக நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, எதிரில் சற்றுத் தள்ளி, பெரியவரும் அவரோடு இரண்டு மூன்று பேரும் வந்துகொண்டு இருந்தார்கள்.
”இவர்தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்பர். காங்கிரஸ் ஊழியர்கள் எல்லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சிவயப்பட்டு புகழ்ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக இருப்பதாகச் சொல்வார்கள். ஆகையால், அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்தது.
இப்போது பெரியவரே எதிரில் நடந்து வந்துகொண்டு இருக்கிறார். அவரிடம் வலியச் சென்று பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. மேலும் அவரோ, தன் சகாக்களுடன் எதையோ, தீவிரமாக விவாதித்துக்கொண்டு வந்தார். ‘அறிமுகத்துக்கு இது ஏற்ற தருணம் அல்ல’ என்று எண்ணி, பெரியவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே நடந்து சென்றுவிட்டேன்.
இது நடந்தபோது எனக்கு 27 வயது இருக்கும். 1936 என்று நினைக்கிறேன்… மதுரையில், சேவாலயம் ஹாஸ்டலில் அப்போது நான் வார்டனாக இருக்கி றேன். ஹரிஜன மாணவர்களுக்காக, ஹரிஜன சேவா சங்கம் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் காங்கிரஸ் கட்சியில் நாலணா மெம்பர். ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்டது இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தேன். இங்கிலீஷில் ஒரே ஒரு மார்க் குறைந்ததால், ஃபெயில் ஆகிவிட்டேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால், இந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வந்து சேர்ந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, மேலூரில் இருந்த ஹாஸ்டலை பார்த்துக்கொள்ளச் சொல்லி என்னை அனுப்பினார்கள். அங்கே ஹாஸ்டல் வார்டனாக இருந்துகொண்டு, கட்சி வேலைகளிலும் ஈடுபட்டேன். அந்த தாலுக்கா காங்கிரஸ் கமிட்டிக்கு நான்தான் தலைவர்.
படிப்படியாக எனது கட்சி வேலைகள் அதிகரித்தன. பெரியவரும் அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தார். என்னைப்பற்றி அவரிடம் பலரும் கூறிஇருக்கிறார்கள். இருப்பினும், பெரியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமலேயே இருந்தது.
1942 போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறைக்குப் போய், ஒன்றரை வருஷம் ஜெயில்வாசம் முடித்துவிட்டு, மறுபடியும் மேலூருக்கு வந்து ஹாஸ்டல் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
இந்தச் சமயத்தில்தான் பெரியவருக்கும் – உயர்திரு ராஜாஜி அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரியவரோ ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஊழியராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் நானும் ஓர் ஊழியன். அதனால், ஓர் ஊழியரின் ஆதரவு, மற்றோர் ஊழியருக்குத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அசைக்க முடியாமல் ஏற்பட்டுவிட்டது.
1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அந்தச் சமயத்தில்எல்லாம் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பராகிவிட்டேன். அந்த மகாநாட்டில்தான், நான் முதன்முதலில் பெரியவரைச் சந்தித்துப் பேசினேன். நண்பர் ஒருவர் என்னை பெரியவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.
‘உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!’ என்றார் பெரியவர்.
‘உங்களை நெடு நாட்களாகவே சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல். இப்போதுதான் வாய்ப்பு கிட்டியது!’ என்று கூறிய நான், ‘என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியர்களுக்குத்தான் கிடைக்கும்!’ என்றேன்.
‘ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் வேற்றுமை பாராட்டிப் பேச வேண்டாம். நியாய உணர்ச்சியுடன் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, உறுதியுடன் பணிபுரியுங்கள்!’ என்று பெரியவர் ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
அந்த வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன. காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலும் அவர் பொறுமையோடும் – நிதானத்தோடும் நடந்துகொண்டது இப்போதும்கூட என் மனக் கண்களில் தெளிவாகத் தெரிகிறது.
இதெல்லாம் நடந்து இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழியராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற்றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித்துப் போற்றுகிறேன். ஆனால் பெரியவரோ, அன்றும் சரி – இன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
எங்களிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பு, சாதாரணமானதாக இருந்தாலும், எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்கமும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத்தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரார்த்திக்கிறேன்!”




சுதந்திர போராட்டம்
காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

தமிழக அரசியல்தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு க்க்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது.அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

அதிகாரத்திலும் எளிமைகக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 
விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். 

ஏழ்மையிலும் நேர்மை
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.
டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

இயற்கை விஞ்ஞானி-நம்மாழ்வார் (இன்று விசாயிகள் தினம்)

விவசாயிகள் தின வாழ்த்துக்கள்

மண்ணோடும், மண்ணுக்கு போகாத அரசியல்வாதிகளோடும், மண்ணுக்கும் உதவாத அதிகாரிகளோடும் போராடும் எம் விவசாய சகோதர சகோதரிகளுக்கு விவசாயிகள் தின வாழ்த்துக்கள். எத்தனை சோதனைகள்தான் நம் விஞ்ஞானிகளுக்கு! ரியல் எஸ்டேட், மீன் பண்ணை, ஆலைகழிவு, சாய நீர் கழிவு, மீத்தேன், ஒட்டு விதைகள், பி.டி கத்திரிக்காய்.... போதும்யா சாமி!! இப்போவெல்லாம் விவசாயம் பார்ப்பவருக்கு கையும் காலும் கூட மிச்சமில்லை!! இதற்கெல்லாம் விவசாயிகளுக்கு தோள் குடுத்து போராடியவர் ஐயா நம்மாழ்வார் அவர்கள். இந்நாளில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் பற்றி சிறு குறிப்பு.

வரலாறு

நம்மாழ்வார் , தஞ்சை மாவட்டத்தில் 1938 ல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா(Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.



எதிர்த்துப் போராடியவை

  • பூச்சி கொல்லிகள்
  • மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
  • மரபணு சோதனைகள்
  • பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
  • வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
  • விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

களப்பணிகள்

  • சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
  • இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
  • 60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டத்தில் நிறுவியுள்ளார்.
  • மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
  • "தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிடுகிறார்.
  • இயற்கை உழவாண்மைகாக 2002-இல் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.

நடைப் பயணங்கள்

  • 1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
  • 2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
  • 2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்

உருவாக்கிய அமைப்புகள்

  • 1979ல் குடும்பம்
  • 1990 லிசா (1990 – LEISA Network)
  • 1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
  • இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
  • நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
  • வானகம் (பண்ணை)
  • தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்

படைப்புகள்

  • தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
  • உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
  • தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
  • நெல்லைக் காப்போம்
  • வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
  • இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
  • நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
  • எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
  • பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
  • நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
  • மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
  • களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்




தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.

Sunday, 21 December 2014

பெருந்தலைவர்-அமைச்சரவை-கக்கன்

பெருந்தலைவரின் அமைச்சரவை

தமிழக சட்டசபை மற்றும் அரசு நிர்வாகம் என்கிற எண்ணங்களில் நாம் எண்ணிப் பார்க்கிறபோது ஒரு சில தனிப்பட்ட உயர்ந்த குணசீலர்கள் மற்றும் தன்மையாளர்கள் நமது எண்ண அலைகளின் மேல்  மட்டத்தில் எழுந்து வருவதை தவிர்க்க முடியாது. காமராஜர் தனது அமைச்சரவையில் வெறும் எட்டு பேர்களை மட்டுமே வைத்து இருந்தார். அவர்கள் அனைவரும் தலை சிறந்த நிர்வாகிகள். அவர்களுள் சி. சுப்பிரமணியம், வெங்கட் ராமன், கக்கன் ஆகியோர் என்றுமே நினைவில் நிற்பார்கள். கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரும் முஸ்லிம்களுடைய பிரதிநிதியாக காமராசரின் அமைச்சரவையில் பங்கேற்று இருந்தார்.  இவர்களிலும்        சி. சுப்ரமணியம் காமராசரை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர் என்றாலும் அவரையும் அமைச்சரவையில் சேர்த்து கல்வியமைச்சர் பொறுப்புக் கொடுத்து அரவணைத்தது காமராசரின் கரங்கள். 

அதேபோல் வெங்கட் ராமன் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகள் அளிக்கப்பட்டு சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார். ஆனால் இவரது பிறந்த  ஊரான இராஜாமடத்துக்கோ அல்லது அதை அடுத்து இருக்கிற அதிராம்பட்டினத்துக்கோ தனது பதவி காலத்தில் எந்த நன்மையையும் செய்யவில்லை. சேதுரோடு என்பது  வேதாரணியத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை கடற்கரை வழியாக செல்வதுதான். வெங்கட்ராமன் மனது வைத்து இருந்தால் கருங்குளம் அருகில் நசுவினி ஆற்றிலும் இராஜமடம் அருகில் அக்கினி ஆற்றிலும் அன்றே பாலங்கள் கட்டி  சேதுரோட்டை போக்குவரத்துக்கு திறந்து விட்டு இருக்கலாம். ஆனால் தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் இருந்து அதிரை நோக்கி வந்திருக்க வேண்டிய சேது சாலையை பட்டுக்கோட்டைக்கு உள்ளே திருப்பிவிட்டு பிறகு அதை சேதுபாவா  சத்திரத்தில் கொண்டுபோய் இணைத்த செயல் நம்மைப் பொருத்தவரையில் இவரது சாதனைப் பட்டியலில் ஒரு கரும்புள்ளி.  ஆனால் தமிழகமெங்கும் தொழில் மயமாவதில் காமராசருக்கு வலதுகரமாகத் திகழ்ந்தார். 

காமராசர் அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த பக்தவத்சலம் மக்களின் நினைவில் இருந்து மறைந்துவிட்டார். 1967 தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில்      தி. மு. க வின் வெற்றியைப் பார்த்துவிட்டு “நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்று சொல்லிய அவரின்  வார்த்தைகள் மட்டுமே இன்றும்  நிற்கின்றன. 



இவர்களுள் திரு. கக்கன் அவர்களைப் பற்றி தனி அத்தியாயம் எழுதலாம். கக்கன் அவர்களுக்கு அவருடைய சாதி இனம் பாராமல்   மிகப் பெரும் பொறுப்புகளை எல்லாம் காமராசர் அளித்து இருந்தார். கக்கனுக்குப் பிறகு அவரது இனத்தை அல்லது தலித் இனத்தை சார்ந்தவர்களுக்கெல்லாம் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை , மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை  போன்ற  முக்கியத்துறைகள் எந்த முதலமைச்சரின் அமைச்சரவையிலும்  வழங்கப்படவில்லை. பால் வளம், செய்திதுறை, பிறபட்டோர் நலம் போன்ற பெரும் அதிகாரமற்ற  துறைகளே வழங்கப்பட்டன/ பட்டிருக்கின்றன. ஆனால் திரு. கக்கன் காமராசரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் இன்னொரு காமராசராகவேத் திகழ்ந்தார். 

கக்கன் அவர்கள்

கக்கன் அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்குமுன் காஞ்சியில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். அன்றைய காஞ்சி மடாதிபதி சந்திர சேகரப் பெரியவர் ஒரு முறை கக்கன் அவர்களை சந்தித்து ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது , ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தார் என்பது ஒரு களங்கம் நிறைந்த வரலாறு. அதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.   அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறேன். பார்ப்பனீயமும் சாதீயமும் வேரூன்றிய இந்த மண்ணில் இத்தகைய வேதனையான விஷயங்கள் நடப்பது வழக்கமே. 

கக்கன் என்கிற பெயர் நிகழ் காலம் முற்றிலுமாக  மறந்துவிட்ட பெயர். இவரை நினைவூட்ட சில வரிகளை  இங்கே எழுதுவது அவசியமாகிறது.  மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டுக்கு மேலாகிறது.  காமராஜரையே மறந்துவிட்ட மக்கள்  கக்கனையா நினைவில் நிறுத்திப் போற்றப் போகிறார்கள்? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.

சத்தியமூர்த்தி காமராஜரை தவிர்க்க முடியாமல் தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். பொது உடைமைக் கட்சியின் புகழ்பெற்ற  தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.

காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். (இன்று குறைந்த காலம் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பணியாற்றியவர்கள் தனியாக தொலைகாட்சி தொடங்கும் அளவுக்கு தனிப்பட்ட வசதி பெறுகிறார்கள்.) 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு,  அறநிலையத்துறை போன்ற பல்வேறு முக்கிய இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.


இன்னொரு காமராஜர்

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 -
தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். 

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘ உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி’  என்று கைகூப்பினார் கக்கன்.

திரு.  கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 

இன்று அந்த இடம் 5  கோடிக்கு  மேல் மதிப்புள்ளதாகும். 

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மா பேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. யார் யாருக்கோ நினைவுச் சின்னம் அமைக்கும் அரசுகள் கக்கனையும் அவரது நினைவையும் அம்போவென்று விட்டுவிட்டன.  ‘இன்று கக்கனை நினைப்போர் யாருமில்லை.  அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் காலத்தில். அதுவும் தோட்டியின்  மகனாகப் பிறந்ததுதான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். ஏழையாகப் பிறந்து எளிமையாக வாழ்ந்து உயர்ந்த பதவிகளை பலகாலம் வகித்த போதும் ஏழையாகவே மறைந்த திரு. கக்கனை  இன்றைய உலகம் பிழைக்கத் தெரியாதவர்  என்றே பட்டம் தந்து பழி தூற்றும். மூன்று வருடம் வட்டச் செயலாளராக இருக்கும் ஒருவர் வாழும் ஆடம்பர வாழ்வை இன்று நாம் கட்சிக் கொடி தாங்கி ஓடும் கார்களின் வனப்பில்  காணலாம். அறுந்து போன செருப்பைத் தைக்க அரை ரூபாய் இல்லாமல் இருந்தவர்கள் அரசியலில் பதவி பெற்றுப் போடும் ஆட்டம் காண சகிக்கவில்லை. பத்து தலைமுறைக்கு சொத்து தேடி வைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? தனது தலைமுறையிலேயே தரையில் படுத்துக் கொண்டு மருத்துவம் பார்த்த கக்கனைப் போன்றவர்கள் எங்கே? பொது வாழ்வுக்கு வந்த பின் எளிமையும் நேர்மையும் வாழ்வில் அங்கமாக இருக்க வேண்டுமென்று கக்கன் காமராசரிடம் கற்றுக் கொண்டு செயல் படுத்தினார்.


கற்பனை

இது  போன்ற நிகழ்வுகள் எல்லாம் அதீகபடுத்தப் பட்ட கற்பனை என்ற ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இன்னொரு பெருந்தலைவரையோ இல்லை கக்கனையோ இந்த் தமிழ் சமூகம் பார்க்குமா என்பது சந்தேகமே?!! கக்கனும் காமராஜரும் ராமன் இலக்குவன் போல இதிகாச பாத்திரங்களே இனி வரும் சந்ததியருக்கு!!

Saturday, 20 December 2014

நாடார்-நாடாள்வார்

22-10-2006 ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட ரவிகுமார் MLA அவர்களின் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து அ.கணேசன் என்பவரால் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) பக்கத்தில் பதியப்பட்ட பதிவு இது:

 நாடார் என்ற சொல் நாடாள்வார் என்ற சொல்லின் திரிபாகும். நாட்டை ஆள்பவர்கள் என்று பொருள்படும் இச்சொல் காலப்போக்கில் நாடாவார், நாடவார், நாடார் எனத் திரிந்துள்ளது. இதற்கான சில ஆதாரங்களாகக் கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி வட்டம் வடகாடு கோயிலூர் கல்வெட்டு (Annual Report on Epigraphy 191/1908, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1978ஆம் ஆண்டில் பதிப்பித்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் தொடர் எண் 198, வரி 253), கி.பி. 1507ஆம் ஆண்டைச் சேர்ந்த நாகர்கோவில் ஆதிமூல விநாயகர் கோயில் கல்வெட்டு (Travancore State Manual, திவான் பேஷ்கர் நாகமையா) மற்றும் கி.பி. 1644ஆம் ஆண்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மடத்து அச்சம்பாடு கல்வெட்டு (வரலாறு இதழ் 9-10, பக்கம் 5-10, 1999-2000, இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம், திருச்சி - 17) ஆகியவற்றைக் காட்டமுடியும்.

மேற்குறித்த நாகர்கோவில், மடத்து அச்சம்பாடு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் நாடாள்வார் குடும்பங்கள் இன்றைக்கும் நாடான் என்ற பட்டத்துடன் உள்ளன. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்கள் ஒன்றுக்குப் பிரதியாக மற்றொன்று பயன்படுத்தப்பட்டதற்கு 19ஆம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. எனவே, நாடார்கள் என்ற பட்டத்தை இச்சமூகத்தவர் அண்மைக் காலத்தில்தான் பயன்படுத்தத் தொடங்கினர் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

மேலும், சாணார்கள் என்ற சொற்பிரயோகம் காலகாலமாக இழிவானதாகக் கருதப்பட்டது என்ற செய்தியும் தவறானதாகும். சான்றோர் அல்லது சான்றார் என்ற சாதிப்பெயர் பேச்சு வழக்கில் சாணார் எனத் திரிந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. சான்றாண்மை என்ற பண்பு அனைத்து வகை நற்குணங்களையும் ஆளும் தன்மை என்று திருக்குறள் உரையாசிரியர்களால் பொருள்படுத்தப்பட்டுள்ளது. வீரயுகப் பண்புகள் மிகுந்திருந்த சங்க காலத்தில் நாட்டை ஆண்ட தலைமக்கள் அறப்போர் முறையில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த உயர் வர்க்கப் போர்வீரர்களாக இருந்தனர்; அவர்கள் சான்றோர்கள் என அழைக்கப்பட்டனர்.

அத்தகைய பயிற்சி பெற்ற அறப்போர் முறைக்குப் பெரியபுராணம் குறிப்பிடும் ஏனாதி நாதரின் போர் முறையை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஏனாதி நாதர் சான்றார் குலத்தவர் ஆவார். சான்றோர் சமூகத்தவரின் குலத் தொழில் என்பது அறப்போர் மரபு, போர்ப் பயிற்சி, நாட்டை ஆள்தல், வருவாய்க் கணக்கு பராமரித்தல், நீதி நிர்வாகம் போன்றவை ஆகும். இதற்கும் ஏனாதி நாதர் புராணத்தில் ஆதாரம் உள்ளது. கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை பெருமாள் ராஜாக்கள் காலத்தில் (கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை) வழக்கிலிருந்த மூழிக்களக்கச்சம் என்ற நிர்வாக நடைமுறைச் சட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவர்கள் சான்றார் குலத்தவரே ஆவர். கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் பலவற்றில் இதற்கான ஆதாரம் உள்ளது.

சான்றோர் சமூகப் போர்வீரர்களில் பனையேறிச் சான்றோர் என்ற பிரிவும் இருந்துள்ளது என்பது உண்மையே. இவர்கள் கள் இறக்கி நேரடியாகக் கொண்டு சென்று விற்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கள்விலைஞர்களாக வலையர் குலப் பெண்டிரையே இலக்கிய உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்குலத்தவருக்குப் பழையர் என்று பெயர். ("பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்" என்ற மலைபடுகடாம் வரி 459க்கான நச்சினார்க்கினியர் உரை, பக்கம் 650, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1974.) இந்தப் பனையேறிச் சான்றோர் பிரிவினர், போர்த் தொழில் தவிரப் பதநீர் இறக்குதல், கருப்புக்கட்டி காய்ச்சுதல் போன்றவற்றை உபதொழிலாகச் செய்திருக்கலாம். இவர்களில் சிலர் காலப்போக்கில் கள்ளிறக்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே, கள்ளிறக்கும் தொழிலில் சான்றார் சமூகத்தினர் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றோ, அந்த அடிப்படையிலேயே இழிவுபடுத்தப்பட்டனர் என்றோ கருதுவது மிகவும் தவறான ஒரு வாதமாகும்.

சாணார் என்ற சொல் இழிவாகக் கருதப்பட்டதற்கு என்ன காரணம்? சில சொற்கள் தொனிப்பொருளிலேயே பிறரால் இழிவாகக் கருதிப் பயன்படுத்தப்பட்டு இழிவுச் சுமையுடன் வழக்கில் நிலைத்து விடுவதுண்டு. பறையர் என்ற சொல்லே கூட அப்படிப்பட்டதுதான். இன்றைக்கு Pariah என்ற வழக்கு ஆங்கில அகராதியில்கூட இழிவான பொருளில் நுழைந்து குந்திக்கொண்டது. ஆனால், சங்க இலக்கியமான புறநானூற்றில் பறையர் குடி முதன்மையான குடிகளுள் ஒன்றாகவே சொல்லப்படுகிறது. "துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்நான்கல்லது குடியும் இல்லை" (புறம். 335). இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், சங்க காலத் தமிழகத்தில் தாய்வழிச் சமூக அமைப்பிலேயே நீடித்து வந்த பல சமூகங்கள் ஓரிடத்தில் குந்தி அமர்வதற்குக்கூட வாய்ப்பின்றி அலைந்துகொண்டிருந்த நிலையில், தந்தை வழிச் சமூகமாக (குடியும் குடித்தனமுமாக) நிலைத்து வாழ்ந்த சமூகத்தவர்கள் பறையர்கள் ஆவர். அந்தச் சாதியின் பெயரே ஆண்பாலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், திருவள்ளுவர் போன்ற ஒரு மாமனிதர் இச்சமூகத்தில் உருவாக முடிந்தது.

பறையன் என்ற சொல் சங்க காலத்தில் இழிவுத் தொனியுடன் பயன்படுத்தப்பட்டது அன்று என்பதையும், காலப்போக்கில் இழிவுத் தொனிப்பொருள் அந்தச் சொல்லுக்குள் குடியேறிவிட்டது என்பதையும் குறிப்பிடுவதற்காகவே இதனை எழுதுகிறோம். அது போன்றதுதான், சாணார் என்ற வழக்கும். தென்மாவட்டங்களில் பல சாதியினரைப் பற்றிக் குறிப்பிடும்போது சாதிப் பெயரைக் குறிப்பிடாமல், சாதிக்குரிய உயர்வான பட்டப்பெயர் சொல்லியே குறிப்பிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. பறையர் என்று சொல்லாமல் சாம்பவர் அல்லது சாம்பாக்கமார் என்றே குறிப்பிடுவர். சாம்பவர் என்பது சாதிப் பட்டமே தவிர சாதிப் பெயர் அன்று. இதே போன்றுதான் குடும்பமார் என்று தேவேந்திர குலத்தார் (பள்ளர்) சாதியினரையும், கோனார் அல்லது கோங்கமார் (கோன்கள்மார்) என்று இடையர் சமூகத்தவரையும், தேவமார் என்று மறவரையும், ஐயர்மார் என்று பிராமணர்களையும் குறிப்பிடுவதை இன்றும் வழக்கில் காணலாம். சாதிப் பெயரைச் சொல்வது அவ்வளவு உயர்வானதாகக் கருதப்படுவதில்லை. எனவே, சாணார் என்பதைவிட நாடாவார் (நாடார்) எனக் குறிப்பிடப்படுவதை இச் சாதியினர் ஏற்றனர்.

"சாணார் சமூகத்துப் பெண்கள் மேலாடை போடக்கூடாது என்றிருந்த சமூகக் கொடுமை அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தால் ஒழிக்கப்பட்டது. அதை ஒழித்ததில் கிறிஸ்தவ மத போதகர்களுக்கு முக்கியமான பங்குண்டு" என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். இதுவும் ஓர் அரைகுறை உண்மையாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய ஆதிக்க சக்தியாக விளங்கிய நாயர்-வேளாளர் கூட்டணியினர் தங்கள் சமூகத்துப் பெண்டிரைப் போலவே மார்பிலிருந்து கணுக்கால் வரை மறைக்கும் வண்ணம் ஒற்றை ஆடையான முண்டு மட்டுமே சான்றார் சமூகத்துப் பெண்களும் உடுத்த வேண்டும் என்று அடக்குமுறையில் ஈடுபட முனைந்தனர். அல்லது இடுப்பு வரை முண்டு, மார்புப் பகுதியில் ரவிக்கை அணிந்து கொள்ளலாம். ரவிக்கைக்கு மேல் முன்தானை அணிவதாக இருந்தால்கூட அதனை (இன்றைக்கு அணிவது போல) தோளுக்கு மேல் குறுக்காக அணியக்கூடாது என்றும், தோளுக்குக் கீழேயே (கட்கத்துக்குக் கீழே மார்பைச் சுற்றிவரும் வண்ணம்) ரவிக்கையைச் சுற்றி அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ரவிக்கையும் அதன்மேல் தோளுக்குக் குறுக்காக முன்தானையும் அணிந்த சான்றோர் சாதிப் பெண்களை இழிவுபடுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மிஷனரிமார் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சான்றோர் சமூகத்தவரை பெரும் எண்ணிக்கையில் மதம் மாற்றினர். இதுவே உண்மை வரலாறு ஆகும்.

தோள்சீலைப் போராட்டம் என்று சொல்வதை அரைகுறையாகப் புரிந்து கொண்டு சான்றோர் சமூகத்துப் பெண்டிர் மார்பை மறைக்காமலேயே இருந்தனர் என்றும், அவர்கள் கிறிஸ்தவ மத போதகர்கள் போதனையால் விழிப்புணர்ச்சி பெற்று மார்பை ஆடையால் மறைக்கத் தொடங்கினர் என்றும் பொருள்படும் வண்ணம் பலர் எழுதி வருகின்றனர். இது ஒரு கருத்து மோசடியாகும். Samuel Mateer என்ற புராடஸ்டண்ட் பாதிரியார் (ஆங்கிலேயர்) The Land of Charity - A descriptive account of Travancore and its people with especial reference to Missionary Labor என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் 1870ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள John Snow & Companyயால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் தோள்சீலைக் கலவரம் பற்றிய மேற்குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சை அரண்மனையில் சரபோஜி மன்னர் காலத்தில் (1798-1832) வரையப்பட்ட ஓவியம் ஒன்றின் நிழற்படம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியிடப்பட்டுள்ளது. (நிழற்படப் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) அரை நூற்றாண்டு கடந்த பின்னர் தீபாவளி நேரத்தில் இதை நினைவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோள்சீலைக் கலவரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தஞ்சையில் சரபோஜி மன்னரின் ஆட்சியில் நாடார் சமூகத்துப் பெண்டிர் இன்றைய பெண்டிரைப் போலவே முழுமையாக உடையணிந்திருப்பதைக் காணலாம். இந்தப் படத்தின் தலைப்பாக "பண்டாரி (கள் இறக்குவோர்)" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் தஞ்சைப் பிரதேசத்தில் சாணார் சமூகத்தவர் என்றால் கள்ளிறக்குவோர் என்றுதான் பொருள்கொள்ளப்பட்டது என்பது உண்மையே. அதனால்தான் படத்தின் தலைப்பில் இப்பெயர் இடம்பெற்றுள்ளது.





17ஆம் நூற்றாண்டில்கூட திருவாரூர், முகந்தனூர் ஆகிய இடங்களில் சான்றோர் சமுகத்தவரால் பண்டாரி என்ற சாதிப் பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னர் காலத்தில் இந்த சாதிப் பட்டம் தஞ்சாவூர்ப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. பண்டாரி என்பது மராட்டிய மாநிலத்தில் சான்றோர் சமூகத்தவருக்கு இன்றளவும் வழங்குகின்ற பட்டப் பெயராகும். தஞ்சை மராட்டியர்கள் தங்களுடைய முன்னோர்களின் பிரதேசமாகிய மராட்டிய மாநிலத்தில் வழங்கி வருகின்ற ஒரு வழக்காற்றினைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். பண்டாரி என்ற சொல்லின் நேர்ப்பொருள் அரசு கருவூல அதிகாரி என்பதாகும். அரசு நிதித் துறை மற்றும் கருவூலத் துறைச் செயலருக்குச் சமமான பதவி பண்டாரி ஆகும். அரசின் கருவூலத்தில் வருவாய் ஈட்டும் இனங்களில் கள் என்பதும் முதன்மையான ஒன்றாகும். கள்ளினைச் சேகரித்து விற்கும் அரசுத்துறையின் பொறுப்பாளர் பண்டாரி எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அந்த அடிப்படையில் பண்டாரி என்றால் கள் இறக்குவோர் என்ற தொடர்பு ஏற்பட்டிருவும் வாய்ப்புண்டு. 1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். ஒப்பீட்டளவில் திருவிதாங்கூர் பகுதி போல சான்றோர் சமூகத்துக்கு எதிரான இயக்கங்கள் எவையும் நடைபெறாத தஞ்சாவூர்ப் பிரதேசத்தில் சான்றோர் சமூகத்தவர் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர் என்றால் அது சமூக கொடுமைகளின் விளைவு என்று குறிப்பிடுவது சரிதானா? இதில் அரசியல் காரணங்களே முதன்மையான பங்கு வகித்துள்ளன என்பது உறுதி. இதுபோன்ற ஏராளமான சான்றுகளையும், ஆய்வுக் குறிப்புகளையும் குறிப்பிட முடியும்.

Thursday, 18 December 2014

பெருந்தலைவர்-சாணக்கியரை வென்றெடுத்த எளிமை

1954 ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழ்நிலையில் ராஜாஜி ராஜினாமா செய்தார். அன்றைய நிலைமையை ஆராய மறுநாள் சட்டமன்ற காங்கிரஸ்கட்சிக் கூட்டம் நடந்தது. சி.சுப்பிரமணியத்தை தற்காலிக முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று ராஜாஜி யோசனை தெரிவித்தார். அதை காமராஜர் ஏற்கவில்லை. "தற்காலிக முதல்மந்திரி தேவை இல்லை. அடுத்த தேர்தல் வரை பதவி வகிப்பதற்கான முதல்மந்திரியைதேர்ந்தெடுப்போம்" என்றார், காமராஜர். புதிய முதல்மந்திரி தேர்தலை மார்ச் 30ந்தேதி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. "முதல்மந்திரி பதவியை நீங்களே ஏற்க வேண்டும்" என்று வரதராஜீலு நாயுடுவும், பல எம்.எல்.ஏ.க்களும் காமராஜரிடம் வற்புறுத்தினார்கள்.

கட்சியை நடத்துவதில் கை தேர்ந்தவரான காமராஜர், முதல்வர் பதவியை ஏற்கத் தயங்கினார். காமராஜர் ஆங்கிலத்தை நன்கு புரிந்து கொள்வார் என்றாலும், காந்தி, நேரு, பட்டேல், சத்தியமூர்த்தி போன்றவர்களின் ஆங்கில உரையாடல்களை எல்லாம் நேரில் பார்த்திருந் காரணத்தால், "ஐ.ஏ.எஸ். படித்த பெரிய அதிகாரிகளை எப்படி சமாளித்து வேலை வாங்குவது?" என்று யோசித்தார். வரதராஜீலு நாயுடுவின் வீட்டில் காமராஜரும், பெரியாரும் சந்தித்தனர். முதல்வர் பொறுப்பை ஏற்கும்படி காமராஜரிடம் பெரியார் கேட்டுக்கொண் டார். காமராஜர் ஆட்சிக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். தினமும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டமாக வந்து காமராஜரை சந்தித்தனர்.

"முதல்அமைச்சர் பொறுப்பை நீங்கள்தான் ஏற்கவேண்டும்" என்று மன்றாடினார்கள். தீர ஆலோசனை செய்த பிறகு, முதல்அமைச்சர் பதவியை ஏற்பது என்று காமராஜர் முடிவு செய்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஒரு நிபந்தனையையும் விதித்தார். "மந்திரி பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து யாரும் கேட்கக்கூடாது. அரசாங்க நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதித்தால் முதல்அமைச்சர் பதவியை ஏற்கிறேன்" என்று கூறினார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் சம்மதித்தனர்.

சி.சுப்பிரமணியத்தை முதல்அமைச்சர் ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜாஜி கோஷ்டியினருக்கு, "முதல் அமைச்சர் பதவியை ஏற்க காமராஜர் சம்மதித்துவிட்டார்" என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது. எனினும், காமராஜரை எதிர்த்து சி.சுப்பிரமணியத்தை நிறுத்த அவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்டபடி, மார்ச் 30_ந்தேதி முதல்அமைச்சரை தேர்ந்தெடுக்க சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடினார்கள். காமராஜர் பெயரை வரதராஜீலு நாயுடு முன்மொழிந்தார். என்.அண்ணாமலைப்பிள்ளை வழிமொழிந்தார். சி.சுப்பிரமணியத்தின் பெயரை, பக்தவச்சலம் முன் மொழிந்தார். டாக்டர் கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.




வாக்கெடுப்பு நடந்தது. காமராஜருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. காமராஜர் புதிய முதல்அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13_ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவர் பெயரை முன்மொழிந்த பக்தவச்சலம் ஆகியோரையும் தன் மந்திரிசபையில் காமராஜர் சேர்த்துக்கொண்டார். மற்றும் மாணிக்கவேலர், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, "ராமநாதபுரம்ராஜா" சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ஏ.பி.ஷெட்டி, பரமேசுவரன் ஆகியோரும் மந்திரிசபையில் இடம் பெற்றனர்.

ராஜாஜி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர் நீங்கலாக மற்ற எல்லோரும் காமராஜர் மந்திரிசபையில் இடம் பெற்றனர். எட்டு பேர் மட்டுமே கொண்ட மந்திரிசபையை காமராஜர் அமைத்தது, அகில இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியது. முதல் அமைச்சராக பதவி ஏற்றதும், தன் அரசியல் குரு சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு காமராஜர் சென்றார். சத்திய மூர்த்தி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சத்திய மூர்த்தியின் மனைவி பாலசுந்தரம்மாளிடம் வாழ்த்து பெற்றார். காமராஜர் முதல் அமைச்சரானதை பெரும்பாலான பத்திரிகைகள் வரவேற்றன. ஒரு சில பத்திரிகைகள், "ராஜாஜி வகித்த பதவியை மற்றவர்கள் வகிப்பது எளிதல்ல. காமராஜருக்கு அரசியல் அனுபவம் அதிகம் உண்டு என்றாலும், அமைச்சரவை அனுபவம் இல்லை. அவர் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை எதிர்காலம் தான் நிர்ணயிக்கும்" என்று எழுதின. ஆனாலும், அனைவரும் வியக்கத்தக்க முறையில் காமராஜர் ஆட்சி புரிந்தார். 


காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை, ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்தது தான். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவர்களைச் சேர்க்க, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை, 50 ஆக ராஜாஜி குறைத்திருந்தார். 
இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்ணை மீண்டும் 150 ஆக காமராஜர் உயர்த்தினார். இவ்வாறு காமராஜர் செய்த சீர்திருத்தங்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரசியலில், ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர், காமராஜர்.

மிகவும் படித்தவரும், ராஜதந்திரியும், மேலிடத் தலைவர்களிடம் செல்வாக்கு பெற்றவருமான ராஜாஜியின் எதிர்ப்பையும் சமாளித்து முன்னேறி, முதல் அமைச்சர் ஆனார். எனினும், ராஜாஜி கோஷ்டியினரை வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்து சென்றார். "எதிரிகளை ஒழிக்க நினைப்பதை விட, அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது சிறந்தது" என்பது காமராஜரின் கொள்கை. அதனால்தான் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரை மந்திரிகளாக்கியதுடன், முக்கிய இலாகாக்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். 


காமராஜரின் சிறிய மந்திரிசபை, "சிறந்த மந்திரிசபை" என்று விரைவிலேயே பெயர் எடுத்தது

Tuesday, 16 December 2014

பெருந்தலைவர்-பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்

தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர்களை பெரும்பாலும் மக்களே தேர்ந்தெடுத்தார்கள் என்று சொல்லலாம். பொதுத்தேர்தல் நடைபெறும்போதே இன்னார்தான் முதலமைச்சராக வருவார் என்று மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தலைமை தாங்கும் கட்சிக்கு வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். மக்களின் எண்ணத்தை தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் எதிரொலிப்பார்கள். இதே ரீதியில்தான் அண்ணா, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முதன் முதலில் காமராஜர் முதல்வரானதும், முதன் முதலாக கருணாநிதி முதல்வரானதும் அன்றைய சூழ்நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுக்கப்பட்டே. ஆகும் . அதன் பின் நடந்த தேர்தல்களில் இவர்கள் மக்கள் ஆதரவும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர். 

அந்த வகையில் பார்த்தால் காமராஜர் முதல்வரானது ஒரு நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் . காமராசருக்கு முன்பு இராஜாஜிதான் தமிழ் நாட்டின் முதலமைச்சர். இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித்திட்டம் அவரது பதவிக்கு வேட்டு வைத்தது. குலக் கல்வித்திட்டம் என்பது கிட்டத்தட்ட மனு நீதியோடு தொடர்புடையது. இராஜாஜி ஒரு பிராமணர் என்பதால் சாதிய அடிப்படையில் மற்றும் தொழில்களின் அடிப்படையில் கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தார். அதாவது எந்தத் தொழில் செய்பவர்கள் ஆனாலும்            செய்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள்  காலை ஒரு நேரம் பள்ளிக்கூடம் போய் படித்துவிட்டு மலை நேரங்களில் அவரவர் சாதி, குல , இனத்துக்குரிய தொழில்களைச் செய்யப்  பழகிக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கல்வித்திட்டம் அமைக்கப் பட்டது. அதாவது குயவர் இனத்தில் பிறந்த பிள்ளை மாலை வேளைகளில் சட்டி பானை செய்யப் போகவேண்டும் செருப்புத்தைக்கும் இனத்தில் பிறந்த பிள்ளைகள் சக்கிலியத் தொழிலையும் தோட்டிகளின் பிள்ளைகள் தோட்டி வேலைக்கும்  தச்சர் வீட்டில் பிறந்த பிள்ளைகளும் செல்ல வேண்டுமென்பதே குலக்கல்வித்திட்டம். பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் இரு நேரமும் கல்வி கற்கும் வழி இது.  



மனுநீதி கூறிய வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் இந்தத்திட்டம் இருப்பதாகக் கூறி  நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இராஜாஜி பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரே கொந்தளித்தனர். பெரியார் உட்பட்ட திராவிட இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவர் காமராசர். அதனால்  இராஜாஜியை  சந்தித்து குலக்கல்வித்திட்டத்தை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்டு முதல்வர் பதவியில் தொடரும்படி கோரினார். ஆனால் இரத்தத்தின்  அணுக்களில் பார்ப்பனீயம் கலந்துவிட்ட   இராஜாஜி , காமராஜரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனால் பிரச்னை,  பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவிடம் சென்றது. நேரு இராஜாஜியை அழைத்து பதவி விலகி விடும்படியும்  வேறொரு முதல்வரைத் தேர்ந்தெடுக்க வழிவிடும்படியும் கட்டளை இட்டார். இதனால் இராஜாஜி பதவி விலக நேரிட்டது. 

அடுத்த  முதல்வராக வேண்டுமென்று காமராஜர் விரும்பவில்லை. ஆனால் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியினர் அவரே முதல்வராக வேண்டுமென்று ஒருமித்த குரலில் கூறினர். இருந்தாலும் இராஜாஜி கடைசி நிமிடம் வரை தனது இடத்தில் சி. சுப்ரமணித்தைக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று சட்டமன்றக் கூட்டத்தில் சுப்ரமணியத்தின் பெயரை முன் மொழிந்தார். ஆனால் போதுமான ஆதரவு இல்லாமல் சுப்ரமணியம் காமராசரிடம் தோற்றுப் போனார். இதே  இராஜாஜி  காமராஜர் முதல்வராக வருவதை விரும்பவில்லை. ஆனால் 1952 – ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ்  கட்சிக் கூட்டத்தில் ராஜாஜி பெயரை காமராஜர் முன்மொழிய ராஜாஜி முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  காமராஜரின் முயற்சியால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு துவங்கிய ராஜாஜியின் ஆட்சி, ராஜாஜின் வீண் பிடிவாத்த்தால் குலக்கல்வித் திட்டம் வழியாக 1954 – இல் முடிவுக்கு வந்தது. அதுதான் காமராஜரின் ஆட்சிக் காலத்தை தமிழகம் காண முதல் துவக்கமாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டில் (1903 ஆம் ஆண்டு) பிறந்து பதவியை ஏற்ற முதலாமவர் காமராஜர்தான். இவருக்கு முன்பிருந்தவர்கள் அத்துணை பேரும் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழ்நாட்டின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது நினைத்தப் பார்த்திட முடியாத நிலையில், முதலமைச்சராக உயர்ந்தவர் காமராஜர். சென்னை மாகாணப் பிரதமராகப் பதவிப் பொறுப்பை ஏற்ற டி. பிரகாசமும் ஏழ்மையான குடும்பதில் பிறந்து, தன்னுடைய தனிப்பட்ட உழைப்பின் காரணமாக உயர்ந்தவர்தான். ஆனால், தன்னுடைய பொருளாதார நிலை உயர்ந்து, வாழ்க்கை மேம்பட்ட பின்னர் பொது வாழ்க்கைக்கு வந்தவர் டி. பிரகாசம். மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னுடைய பொருளாதார நிலை உயர்வைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.

Sunday, 14 December 2014

பெருந்தலைவர்-கம்பீரம்

பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றையும் நிகழ்வுகளையும் பார்க்கும் பொழுது அவர் யாருக்காகவும் எதற்காகவும் தன் கடமைகளையும் சேவைகளையும் திட்டங்களையும் ஒத்தியோ நிறுத்தியோ வைத்ததில்லை!! யாரை எந்த நேரங்களில் கண்டிக்கவேண்டுமோ அப்போதெல்லாம் தவறியதுமில்லை!! அவரது கம்பீரம் மற்றவர்களை கட்டிப் போடது என்றுதான் சொல்லவேண்டும்!!

காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர். பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு. கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.

கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் “பெருந்தலைவராகத் தம்மைக் கருதுவார்கள் என பல அரசியல் தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உணரும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி காமராஜர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்தது.

சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்மவீர்ர் கலந்து கொண்டார் கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் சிவாஜி கணேசன் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வரவில்லை. மிகவும் தாமதமாக வந்தார். நடிகர் சிவாஜிகணேசன் வந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இதனை மேடையிலிருந்த காமராஜர் கவனித்தார். சிவாஜி கணேசனை அருகில் அழைத்தார். “நீங்கள் கூட்டத்திற்கு வருவதாக இருந்தால் முதலிலேயே வந்து விடுங்கள். அல்லது கூட்டம் முடிந்தபின் வாருங்கள்.”
“இப்படி இடையில் வருவதை நிறுத்திவிடுங்கள்” என்றார் பெருந்தலைவரின் சீரிய சிந்தனை கலந்த அறிவுரையை ஏற்ற நடிகர் திலகம் அதன் பிறகு எல்லாக் கூட்டத்திற்கும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரம்பித்தார்.

எனக்குத் தெரியும், உட்கார்!
பெருந்தலைவர் நல்ல உயரம். களையான முகத்தில் தீட்சண்யமான, புடைபரந்த கண்களோடு கம்பீரமாக இருப்பார். தேனாம் பேட்டை மைதானக் கூட்டமொன்றில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கக்கனை காமராஜர் அறிவித்தார். 

கூட்டத்தின் பின் பகுதியிலிருந்து மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி ஒரு சலசலப்பு. “எனக்குத் தெரியும், உட்கார்” என்று அவர்களை அமர்த்தினார். பார்ப்பவர்கள் அவரது கம்பீரத்துக்கு அடிபணியாமல் இருக்க முடியாது. மேடைப் பேச்சிலும் நெஞ்சைத் தொடும் உண்மையின் தொனியும், அந்த உண்மை மட்டுமே கோத்துத்தரும் சொற்களின் அழகும் அவரது பேச்சைக் கேட்டவர்களின் அனுபவம். அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு இருந்ததில்லை!


எதிர்கொள்வது, வெற்றிகாண்பது!
பிரச்சினைகளுடன் சமாதானம் செய்துகொள்வது அவருக்குப் பழக்கமில்லை. அரசியலானாலும் நிர்வாக மானாலும் உள்கட்சிப் பூசலானாலும் எதிர்கொண்டு சந்திப்பார். பிரச்சினை என்று வந்துவிட்டால், அதைத் தீர்க்கும்வரை அவர் தூங்குவதில்லை. இப்படி விடாப்பிடியாக இருப்பவர்கள் அரசியலில் வெற்றி காண்பது அரிது. ஆனால், காமராஜர் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார். அன்றைய மத்திய உள்துறை அமைச் சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி தலைமையில், காமராஜரைப் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், “காமராஜரின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பிரச்சினைகளை எதிர்கொள்வது, வெற்றிகாண்பது என்று கூறிவிடலாம்” என்றார். காமராஜரின் தன்னம்பிக்கையும் துணிவும் நிகரற்றவை.

சுட்டது, விட்டோம் என்று கையை உதறிவிடுவது அவர் வழக்கமல்ல. தீர்வே இல்லை என்றிருந்த தமிழ்நாட்டு நெசவாளர் பிரச்சினைக்கு, நூல் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்செய்து, தீர்வுக்கு முயற்சி செய்தார். இதற்காக அப்போது ஐந்தரை லட்சம் ரேஷன் அட்டைகள் இருந்தனவாம். நெசவாளர்கள் பட்டினி கிடந்தபோது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உணவளிப்பதில் பிடிவாதமாகச் செயல்பட்டார்.