Tuesday 16 December 2014

பெருந்தலைவர்-பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்

தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர்களை பெரும்பாலும் மக்களே தேர்ந்தெடுத்தார்கள் என்று சொல்லலாம். பொதுத்தேர்தல் நடைபெறும்போதே இன்னார்தான் முதலமைச்சராக வருவார் என்று மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தலைமை தாங்கும் கட்சிக்கு வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். மக்களின் எண்ணத்தை தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் எதிரொலிப்பார்கள். இதே ரீதியில்தான் அண்ணா, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முதன் முதலில் காமராஜர் முதல்வரானதும், முதன் முதலாக கருணாநிதி முதல்வரானதும் அன்றைய சூழ்நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுக்கப்பட்டே. ஆகும் . அதன் பின் நடந்த தேர்தல்களில் இவர்கள் மக்கள் ஆதரவும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர். 

அந்த வகையில் பார்த்தால் காமராஜர் முதல்வரானது ஒரு நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் . காமராசருக்கு முன்பு இராஜாஜிதான் தமிழ் நாட்டின் முதலமைச்சர். இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித்திட்டம் அவரது பதவிக்கு வேட்டு வைத்தது. குலக் கல்வித்திட்டம் என்பது கிட்டத்தட்ட மனு நீதியோடு தொடர்புடையது. இராஜாஜி ஒரு பிராமணர் என்பதால் சாதிய அடிப்படையில் மற்றும் தொழில்களின் அடிப்படையில் கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தார். அதாவது எந்தத் தொழில் செய்பவர்கள் ஆனாலும்            செய்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள்  காலை ஒரு நேரம் பள்ளிக்கூடம் போய் படித்துவிட்டு மலை நேரங்களில் அவரவர் சாதி, குல , இனத்துக்குரிய தொழில்களைச் செய்யப்  பழகிக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் கல்வித்திட்டம் அமைக்கப் பட்டது. அதாவது குயவர் இனத்தில் பிறந்த பிள்ளை மாலை வேளைகளில் சட்டி பானை செய்யப் போகவேண்டும் செருப்புத்தைக்கும் இனத்தில் பிறந்த பிள்ளைகள் சக்கிலியத் தொழிலையும் தோட்டிகளின் பிள்ளைகள் தோட்டி வேலைக்கும்  தச்சர் வீட்டில் பிறந்த பிள்ளைகளும் செல்ல வேண்டுமென்பதே குலக்கல்வித்திட்டம். பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் இரு நேரமும் கல்வி கற்கும் வழி இது.  



மனுநீதி கூறிய வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் இந்தத்திட்டம் இருப்பதாகக் கூறி  நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இராஜாஜி பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரே கொந்தளித்தனர். பெரியார் உட்பட்ட திராவிட இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவர் காமராசர். அதனால்  இராஜாஜியை  சந்தித்து குலக்கல்வித்திட்டத்தை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்டு முதல்வர் பதவியில் தொடரும்படி கோரினார். ஆனால் இரத்தத்தின்  அணுக்களில் பார்ப்பனீயம் கலந்துவிட்ட   இராஜாஜி , காமராஜரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனால் பிரச்னை,  பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவிடம் சென்றது. நேரு இராஜாஜியை அழைத்து பதவி விலகி விடும்படியும்  வேறொரு முதல்வரைத் தேர்ந்தெடுக்க வழிவிடும்படியும் கட்டளை இட்டார். இதனால் இராஜாஜி பதவி விலக நேரிட்டது. 

அடுத்த  முதல்வராக வேண்டுமென்று காமராஜர் விரும்பவில்லை. ஆனால் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியினர் அவரே முதல்வராக வேண்டுமென்று ஒருமித்த குரலில் கூறினர். இருந்தாலும் இராஜாஜி கடைசி நிமிடம் வரை தனது இடத்தில் சி. சுப்ரமணித்தைக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று சட்டமன்றக் கூட்டத்தில் சுப்ரமணியத்தின் பெயரை முன் மொழிந்தார். ஆனால் போதுமான ஆதரவு இல்லாமல் சுப்ரமணியம் காமராசரிடம் தோற்றுப் போனார். இதே  இராஜாஜி  காமராஜர் முதல்வராக வருவதை விரும்பவில்லை. ஆனால் 1952 – ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ்  கட்சிக் கூட்டத்தில் ராஜாஜி பெயரை காமராஜர் முன்மொழிய ராஜாஜி முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  காமராஜரின் முயற்சியால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு துவங்கிய ராஜாஜியின் ஆட்சி, ராஜாஜின் வீண் பிடிவாத்த்தால் குலக்கல்வித் திட்டம் வழியாக 1954 – இல் முடிவுக்கு வந்தது. அதுதான் காமராஜரின் ஆட்சிக் காலத்தை தமிழகம் காண முதல் துவக்கமாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டில் (1903 ஆம் ஆண்டு) பிறந்து பதவியை ஏற்ற முதலாமவர் காமராஜர்தான். இவருக்கு முன்பிருந்தவர்கள் அத்துணை பேரும் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழ்நாட்டின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது நினைத்தப் பார்த்திட முடியாத நிலையில், முதலமைச்சராக உயர்ந்தவர் காமராஜர். சென்னை மாகாணப் பிரதமராகப் பதவிப் பொறுப்பை ஏற்ற டி. பிரகாசமும் ஏழ்மையான குடும்பதில் பிறந்து, தன்னுடைய தனிப்பட்ட உழைப்பின் காரணமாக உயர்ந்தவர்தான். ஆனால், தன்னுடைய பொருளாதார நிலை உயர்ந்து, வாழ்க்கை மேம்பட்ட பின்னர் பொது வாழ்க்கைக்கு வந்தவர் டி. பிரகாசம். மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னுடைய பொருளாதார நிலை உயர்வைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.

No comments: