Friday 26 December 2014

பெருந்தலைவர்-தீண்டாமைக்கு எதிராக இளம் வயதிலேயே குரல்...

காமராஜரின் இளம் வயது நண்பர் குமரன். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்.
ஒரு தடவை குமரன் மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுத்து வந்தார். அவரை சாதியை சொல்லி கோவிலுக்குள் விட மறுத்தனர். இதை கண்டு கோபம் அடைந்த காமராஜர், குமரனை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றார்.



ஓடோடி வந்த ஞானம்பிள்ளை என்பவர் காமராஜரின் கையை எட்டிப் பிடித்தார். "இதென்ன தம்பி வம்பு! இது ஊர்க்கட்டுப்பாடு ஆச்சே அவங்களுக்குத்தான் தனி இடம் ஒதுங்கி இருக்கே...'' என்றார்.
அவரைத் திரும்பிப் பார்த்த காமராஜ், என்னங்க அய்யா? நீங்கக் கூட இப்படிச் சொல்றீங்க.. காந்திஜி தீண்டாமையை அடியோடு ஒழிக்கணும்னு சொல்லியிருக்கார்னு நீங்கதானே சொன்னீங்க.
இப்ப இவங்களைக் கோவிலுக்குள் போகக் கூடாதுன்னு சொல்றது எந்த வகையில் நியாயம்? ஆவாரங்காட்டுப் பொட்டல் நிலத்தை தாழ்த்தப்பட்ட தெருக்காரர்கள் ஏர்கட்டி உழுத போதுதானே இந்த அம்மன் சிலை கிடைத்தது? மாமா கூடச் சொல்லி இருக்காறே இந்த அம்மன் கிட்டப் போய் இவங்களை நேர்த்திக் கடன் செய்யக் கூடாது என்றால், அது எப்படி நியாயமாகும்?'' என்று கூறினார் காமராஜர்.
"நீ சொல்றது சரிதான் தம்பி. அவங்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை அவங்களுக்குக் கிடைச்சாகணும். ஆனால் ஊர்க்காரர்கள் மனம் மாறணுமே அதுக்குள்ளே இப்படி அவசரப்படலாமாப ஊர்க்கட்டுப்பாட்டை நாட்டாமை வீட்டுப் பிள்ளையே மீறலாமா? வேண்டாம் தம்பி! சொல்றதைக் கேளு'' என்றார் ஞானம்பிள்ளை.
ஆனால் காமராஜர் மனம் தளரவில்லை. ஞானம் பிள்ளையைக் கனிவோடு பார்த்து, "என்னை மன்னிச்சிடுங்க அய்யா! நியாயம்னா அது உடனே கிடைக்கணும். ஊர்க்காரங்க மனம் மாறுகிற வரைக்கும் அநியாயம் தொடர்ந்து நடக்கக் கூடாது'' என்றார்.
காமராஜர் குமரனை இழுத்துச் சென்று எல்லோரையும் போலத் தீச்சட்டியையும் காணிக்கையையும் செலுத்தச் செய்தார்.

No comments: