Friday 5 December 2014

பெருந்தலைவர் படிக்காத மேதையா?

காமராஜருடன் ஒரு நாள்:மறைந்த எழுத்தாளர் சாவி


, "காமராஜருடன் ஒரு நாள்' கட்டுரையில் எழுதுகிறார்.இரண்டு மாதங்களுக்கு முன், காமராஜரை டில்லியில் சந்தித்தேன். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராகவே வந்திருந்தார்.மெட்ராஸ் ஹவுசில் ரிசப்ஷன் ஆபீசர் தீனதயாளிடம் பேசியபோது, "இங்கே அவர் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு, படுக்கப்போவதற்கு, மணி 12 ஆகிவிடும். அதற்கு மேல் அரை மணி, முக்கால் மணி நேரம் புத்தகம் படிப்பார். எவ்வளவு நேரமானாலும் படிக்காமல் மட்டும் உறங்குவதில்லை' என்றார்.


அவை என்ன புத்தகங்கள் என்பதை, எப்படியாவது தெரிந்துகொண்டு விடவேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. மறுநாள் காலை, காமராஜர் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். சோபாவில் சப்பணமிட்டு உட்கார்ந்து, பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.மேஜை மீது அன்றைய ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் - இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "தங்களை, கூடவே இருந்து கவனிக்கப்போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை' என்றேன்."ஓ! தாராளமாக இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க...' என்று கூறிவிட்டு, பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைத்தார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.


ஜான் கூன்தர் எழுதிய, "இன்சைடு ஆப்ரிக்கா,' ஆல்டவுஸ் ஹக்ஸ்லி எழுதிய, "எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்,' டைம் மேகசின், நியூஸ் வீக், வி.ச.காண்டேகரின், "சிந்தனைச் செல்வம்' ஆகிய புத்தகங்கள் இருந்தன. தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து, அதற்குரிய இடத்தில் கொண்டு போய் வைத்தார்."ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?'"இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை குளித்து முடித்ததும், சலவை சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்' என்றார்."குளிர் காலத்தில் டில்லியிலிருக்கும்போது கம்பளி சட்டை, கோட்டு ஏதாவது போட்டுக் கொள்வதுண்டா?'"அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போதுள்ளபடி தான். எப்பவாவது தேவையானால், சால்வை போட்டுக்கொள்வேன்!'"



தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து காத்திருக்கிறார்களே... அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பர்?'"சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை, எளிய மக்கள் கேட்கிற உதவிகளெல்லாம் சுலபமாக செய்யக் கூடியதாயிருக்கும். முடிந்ததை நானும் செய்துவிடுவேன். படிச்சவங்க வந்து கேட்கிற காரியங்களில் தான் சிக்கலெல்லாம் இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து, இப்படிச் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை சொல்வாங்க... நான், "ஆகட்டும், பார்க்கலாம்' என்பேன்."யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். "நீ வாங்கியிருக்கும் மார்க்கை விட குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது, "அட்மிஷன்' கொடுத்திருந்தால் சொல்' என்பேன். அப்படி இருக்காது, ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், "ஆமாம். நீ சொன்னது உண்மை தான்' என்று ஒப்புக்கொள்வேன். அவன் அதிலேயே திருப்பதி அடைந்து போய்விடுவான்!'- ஆனந்த விகடன் 1963.

No comments: