Saturday 6 December 2014

விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு... நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக் கண்ணு...

மக்களை பெற்ற மகராசி படத்தில் கவிஞர் மருதகாசி அவர்களின் பிரபலமான வரிகள் இவைகள். இன்றும் மும்பை ஸ்டாக் மார்க்கட் நிலவரம் போல் மளிகை பொருட்களில் விருதுநகர் சந்தை நிலவரம் மிகவும் பிரபலம்.  இவை வந்த விதம் சுருக்கமாக பார்ப்போம்:

வணிகத்தில் விருதுநகர் நாடார்கள்
கல்லடைக்குறிச்சி கல்வெட்டின்படி சோழர், பாண்டியர் காலத்தில் நாடார்கள் உயர் பதவிகளை வகித்து பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தனர். நாயக்கர்களின் காலத்தில் நாடார்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைவு அடைந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வியக்கத்தக்க வகையில் விருதுநகர் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. கி.பி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுக்காரச் செட்டியார் சமுகத்தினரும் நாடார் சமுகத்தினரும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.1825ஆம் ஆண்டு முதல் விருதுநகருக்கு எல்லாப் பொருட்களும் விளையும் இடங்களில் இருந்து கொணர்ந்து விற்பனை செய்யப்பட்டது.வணிகத்தில் போட்டி காரணமாக விருதுநகர் நாடார்கள் பல ஊர்களில் தங்கள் நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யத்தொடங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துள்ளனர்.


விருதுநகர் நாடார் பெருமக்கள் காபி, ஏலக்காய் எஸ்டேட்களை ஏற்காடு, பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் நிறுவியுள்ளனர். 1940ஆம் ஆண்டு வரை விருதுநகர் தென் பிராந்தியங்களின் விளைபொருள்களுக்கு வணிக மையமாக இருந்தது. “பஞ்சு” ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சு வணிகத்தில் விருதுநகர் நாடார்கள் சிறப்பான இடம் வகித்தனர். 150 ஆண்டுக்கு முன்னர் விருதுநகர் பாக்கு வணிகத்தின் பெரிய சந்தையாக இருந்தது. இலங்கையில் இருந்து பாக்கு கொள்முதல் செய்யப்பட்டது. புகையிலையும் இங்கிலாந்து, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. காபி வணிகத்தில் அகில இந்திய அளவில் இன்றும் விருதுநகர் நாடார்கள் சிறப்பிடம் வகிக்கிறார்கள். சிக்கரி வணிகத்தில் விருதுநகர் நாடார்கள் இந்தியா முழுவதற்குமான உரிமம் பெற்றுள்ளனர். ஏலக்காய் விருதுநகரில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மல்லி மற்றும் மிளகாய் வற்றல் வணிகத்திலும் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளனர் விருதுநகர் மக்கள்.


 நாடார் பெருமக்கள் எண்ணெய் வணிகத்திலும் ஈடுபட்டனர். இன்று மாநில அளவில் 75% எண்ணெய் விருதுநகரில் தயார் செய்யப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதியிலும் சிறப்பிடம் வகிக்கிறது. பருப்பு வணிகம் 1857ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.இங்கு தயாராகும் பருப்பு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.


வணிகத்தில் நாடார் பிரபலங்கள்:

1. M.S.P. குடும்பத்தினர் காப்பி ஏற்றுமதி செய்வதில் அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது.

2. சிக்கரி வணிகத்தில் P.M.A.NarayanaNadar குடும்பத்தினர் தென்னிந்தியாவில் முன்னனியில் உள்ளனர். 1975ஆம் ஆண்டு ஏற்றுமதியில் இந்திய அளவில் பெரும்பங்கு அம்பாள்காபி நிறுவனத்தினருடையதாகும்.

3. இந்திய அரசின் சிறந்த ஏலக்காய் ஏற்றுமதிக்கான விருதுனை ஒன்பது முறை பெற்றுள்ளனர் S.P.G. இராமசாமி நாடார் வணிக நிறுவனம்.

4. அகில பாரத அளவில் மிளகாய் வற்றல் ஏற்றுமதியில் முன்னனியில் இருந்து வருகின்றனர் V.P.S.A. நிறுவனமாகும். V.P.S.A.ஜெயகர் சைனாவுக்கு மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யும் முதல் விருதுநகர்காரர்.

5. P.C. கண்ணன் & கோ நிறுவனம் மல்லி ஏற்றுமதியில் அகில இந்திய அளவில் முதன்மையான ஏற்றுமதியாளர் விருதினை பெற்றுள்ளனர்.

No comments: