Tuesday 9 December 2014

பெருந்தலைவர் - ஏன் பெருந்தலைவர்

“இப்போதுள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பிடுகையில் காமராஜர் எப்படிப்பட்ட தலைவர்?”
“இப்போதுள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் காமராஜர். அரசியல்வாதி என்றால் மக்களுக்கு சேவை செய்பவர் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் காமராஜரிடம், “நீங்க முதல்வரா இருக்கீங்களே. உங்களுக்கு அந்தப் பதவி பிடித்திருக்கிறதா” என்று கேட்டுள்ளார். அதற்கு காமராஜர், “யாருக்குப்பா வேணும் அந்த பதவி? தொரட்டி பிடிச்ச வேலை அது. எவன் பார்ப்பான் அதை. ஒரே தொந்தரவு. என்ன, இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுது. அதனால் மட்டுமே அந்த வேலையில் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.
காமராஜர் என்றைக்குமே பதவியைத் தேடிப் போனதில்லை. அவர் ஒரு கட்சியின் அடையாளம் அல்ல, சாதியின் அடையாளம் அல்ல. தூய்மையின் அடையாளம். அவரிடம் காங்கிரஸ்காரர், தமிழன் இப்படி எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
தூய்மையான அரசியலின் வடிவம்தான் காமராஜர். இனி வரும் அரசியல்வாதிகளும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பணிக்காக உருவாக்கப்பட்டதுதான் முதல்வர் பதவி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்”  – ‘காமராஜர்’ திரைப்பட இயக்குனர் திரு.பாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறியது இது.


மின்சிக்கனம் முதல்வரிடம் தொடங்க வேண்டும்
ஹலோ fm.இல் ஒரு முறை திரு. குமரி அனந்தன் அவர்கள் பேசியதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறியதில் ஒரு பகுதியை தொகுத்து இருக்கிறேன்.
காமராஜர் இரவு தூங்கும்முன்பு தனது உதவியாளர்களிடம் பேசிவிட்டு, அவர்களை வழி அனுப்பும்போது அனைவரும் சென்ற பின்னர் தானே மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு செல்வது வழக்கம். குமரி அனந்தன் தினமும் இதை கவனித்து விட்டு “ஐயா, உங்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச மாட்டோமா என்று பல முதலமைச்சர்கள் காத்துக்கொண்டிருக்க, நீங்கள் நாங்கள் செல்லும் வரை காத்திருந்து, இந்த மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை அணைத்து விட்டு தான் செல்லவேண்டுமா? நாங்களே இதை செய்ய மாட்டோமா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நீங்க மறந்துட்டு போயிட்டீங்கன்னா, இரவு முழுதும் மின்சாரம் வீணாகும். அந்த மின்சாரத்தை ஒரு விவசாயிக்கு கொடுத்தால் அவனாவது பயன்படுத்திக்கொள்வான் அல்லவா?” என்று திருப்பி கேட்டார்.

சேவைக்காகவே முதல்வர் பதவி, அறிவுறை கூறும் முன் தான் முன்னுதாரணம் ஆவது, மக்கள் பணத்தில் எக்கணமும் சிக்கனம், சீரான தலைமை!!  இனி நான் எங்கே போவேன் இப்படி ஒரு வெள்ளந்தி தலைவருக்கு?? 

No comments: