Tuesday 30 December 2014

குரு-சிஷ்யன்

மதுரையில் தீரர் சத்தியமூர்த்தி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன், சுறுசுறுப்புடன் செயல்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் சத்தியமூர்த்தி அவர்களின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அவனை மேடைக்கு அழைத்த அவர் உனது பெயர் என்ன என்று கேட்க, அச்சிறுவன் தனது பெயர் காமராஜர் என்று பணிவுடன் கூறினான். அதற்கு சத்தியமூர்த்தி அவர்கள் அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார் என்று கூறி விட்டு பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டார்.
சில காலம் கழித்து சென்னை வந்த காமராஜரை தீரருக்கு மிகவும் பிடித்துவிட்டது. காமராஜரின் பணிவு சத்தியமூர்த்தியை வெகுவாக கவர்ந்தது. காமராஜர் அவரை குருநாதராகவும், தன்னை சீடராகவும் நினைத்து பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் தீரருக்கு மிகவும் பிடித்ததால் அவரது நம்பிக்கைக்கு உரியவராக காமராஜர் தேர்வானார்.
1940-ம் ஆண்டு காங்கிரசில் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும், சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர் செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிட செய்தார். தீரர் தன்னுடைய சீடரான காமராஜரை நிறுத்த முடிவு செய்தார்.
இதை காமராஜரிடம் சொன்னபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் தொண்டன் நான். நான் தலைவராவதா? என்று காமராஜர் உருக்கமாக தீரரிடம் கேட்டார். உடனே தீரர் அவரிடம், நாட்டின் நன்மையை கருதி நீங்கள் தான் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காமராஜரிடம் திட்டவட்டமாக கூறினார்.



தீரர் கூறியதை தட்ட முடியாத காமராஜர் தேர்தலில் போட்டியிட்டார். தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் தேர்தல் நடந்தது. இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் தீரர் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களை கைகூப்பி வணங்கியபடி, "நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராஜருக்கு ஓட்டு போடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
தலைவர் தேர்தலில் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் காமராஜர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். தீரர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனார். தன்னை குருவாக நினைத்த காமராஜரை தலைவர் ஆக்கி அவருக்கு கீழ் செயலாளர் பதவி வகித்த தீரரின் தியாகத்தை அரசியல் வரலாற்றில் இது வரை யாரும் செய்ததில்லை.
காமராஜர் எப்போதும் நாடு, நாட்டு மக்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தீரர் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தனது 55-வது வயதில் இறந்து விட்டார். தீரரின் மரண செய்தியை கேட்ட காமராஜர் துடியாய் துடித்தார். துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

No comments: