Thursday 18 December 2014

பெருந்தலைவர்-சாணக்கியரை வென்றெடுத்த எளிமை

1954 ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழ்நிலையில் ராஜாஜி ராஜினாமா செய்தார். அன்றைய நிலைமையை ஆராய மறுநாள் சட்டமன்ற காங்கிரஸ்கட்சிக் கூட்டம் நடந்தது. சி.சுப்பிரமணியத்தை தற்காலிக முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று ராஜாஜி யோசனை தெரிவித்தார். அதை காமராஜர் ஏற்கவில்லை. "தற்காலிக முதல்மந்திரி தேவை இல்லை. அடுத்த தேர்தல் வரை பதவி வகிப்பதற்கான முதல்மந்திரியைதேர்ந்தெடுப்போம்" என்றார், காமராஜர். புதிய முதல்மந்திரி தேர்தலை மார்ச் 30ந்தேதி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. "முதல்மந்திரி பதவியை நீங்களே ஏற்க வேண்டும்" என்று வரதராஜீலு நாயுடுவும், பல எம்.எல்.ஏ.க்களும் காமராஜரிடம் வற்புறுத்தினார்கள்.

கட்சியை நடத்துவதில் கை தேர்ந்தவரான காமராஜர், முதல்வர் பதவியை ஏற்கத் தயங்கினார். காமராஜர் ஆங்கிலத்தை நன்கு புரிந்து கொள்வார் என்றாலும், காந்தி, நேரு, பட்டேல், சத்தியமூர்த்தி போன்றவர்களின் ஆங்கில உரையாடல்களை எல்லாம் நேரில் பார்த்திருந் காரணத்தால், "ஐ.ஏ.எஸ். படித்த பெரிய அதிகாரிகளை எப்படி சமாளித்து வேலை வாங்குவது?" என்று யோசித்தார். வரதராஜீலு நாயுடுவின் வீட்டில் காமராஜரும், பெரியாரும் சந்தித்தனர். முதல்வர் பொறுப்பை ஏற்கும்படி காமராஜரிடம் பெரியார் கேட்டுக்கொண் டார். காமராஜர் ஆட்சிக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். தினமும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டமாக வந்து காமராஜரை சந்தித்தனர்.

"முதல்அமைச்சர் பொறுப்பை நீங்கள்தான் ஏற்கவேண்டும்" என்று மன்றாடினார்கள். தீர ஆலோசனை செய்த பிறகு, முதல்அமைச்சர் பதவியை ஏற்பது என்று காமராஜர் முடிவு செய்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஒரு நிபந்தனையையும் விதித்தார். "மந்திரி பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து யாரும் கேட்கக்கூடாது. அரசாங்க நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதித்தால் முதல்அமைச்சர் பதவியை ஏற்கிறேன்" என்று கூறினார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் சம்மதித்தனர்.

சி.சுப்பிரமணியத்தை முதல்அமைச்சர் ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜாஜி கோஷ்டியினருக்கு, "முதல் அமைச்சர் பதவியை ஏற்க காமராஜர் சம்மதித்துவிட்டார்" என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது. எனினும், காமராஜரை எதிர்த்து சி.சுப்பிரமணியத்தை நிறுத்த அவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்டபடி, மார்ச் 30_ந்தேதி முதல்அமைச்சரை தேர்ந்தெடுக்க சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடினார்கள். காமராஜர் பெயரை வரதராஜீலு நாயுடு முன்மொழிந்தார். என்.அண்ணாமலைப்பிள்ளை வழிமொழிந்தார். சி.சுப்பிரமணியத்தின் பெயரை, பக்தவச்சலம் முன் மொழிந்தார். டாக்டர் கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.




வாக்கெடுப்பு நடந்தது. காமராஜருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. காமராஜர் புதிய முதல்அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13_ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவர் பெயரை முன்மொழிந்த பக்தவச்சலம் ஆகியோரையும் தன் மந்திரிசபையில் காமராஜர் சேர்த்துக்கொண்டார். மற்றும் மாணிக்கவேலர், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, "ராமநாதபுரம்ராஜா" சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ஏ.பி.ஷெட்டி, பரமேசுவரன் ஆகியோரும் மந்திரிசபையில் இடம் பெற்றனர்.

ராஜாஜி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர் நீங்கலாக மற்ற எல்லோரும் காமராஜர் மந்திரிசபையில் இடம் பெற்றனர். எட்டு பேர் மட்டுமே கொண்ட மந்திரிசபையை காமராஜர் அமைத்தது, அகில இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியது. முதல் அமைச்சராக பதவி ஏற்றதும், தன் அரசியல் குரு சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு காமராஜர் சென்றார். சத்திய மூர்த்தி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சத்திய மூர்த்தியின் மனைவி பாலசுந்தரம்மாளிடம் வாழ்த்து பெற்றார். காமராஜர் முதல் அமைச்சரானதை பெரும்பாலான பத்திரிகைகள் வரவேற்றன. ஒரு சில பத்திரிகைகள், "ராஜாஜி வகித்த பதவியை மற்றவர்கள் வகிப்பது எளிதல்ல. காமராஜருக்கு அரசியல் அனுபவம் அதிகம் உண்டு என்றாலும், அமைச்சரவை அனுபவம் இல்லை. அவர் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை எதிர்காலம் தான் நிர்ணயிக்கும்" என்று எழுதின. ஆனாலும், அனைவரும் வியக்கத்தக்க முறையில் காமராஜர் ஆட்சி புரிந்தார். 


காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை, ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்தது தான். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவர்களைச் சேர்க்க, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை, 50 ஆக ராஜாஜி குறைத்திருந்தார். 
இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்ணை மீண்டும் 150 ஆக காமராஜர் உயர்த்தினார். இவ்வாறு காமராஜர் செய்த சீர்திருத்தங்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரசியலில், ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர், காமராஜர்.

மிகவும் படித்தவரும், ராஜதந்திரியும், மேலிடத் தலைவர்களிடம் செல்வாக்கு பெற்றவருமான ராஜாஜியின் எதிர்ப்பையும் சமாளித்து முன்னேறி, முதல் அமைச்சர் ஆனார். எனினும், ராஜாஜி கோஷ்டியினரை வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்து சென்றார். "எதிரிகளை ஒழிக்க நினைப்பதை விட, அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது சிறந்தது" என்பது காமராஜரின் கொள்கை. அதனால்தான் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரை மந்திரிகளாக்கியதுடன், முக்கிய இலாகாக்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். 


காமராஜரின் சிறிய மந்திரிசபை, "சிறந்த மந்திரிசபை" என்று விரைவிலேயே பெயர் எடுத்தது

No comments: