Sunday 14 December 2014

பெருந்தலைவர்-கம்பீரம்

பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றையும் நிகழ்வுகளையும் பார்க்கும் பொழுது அவர் யாருக்காகவும் எதற்காகவும் தன் கடமைகளையும் சேவைகளையும் திட்டங்களையும் ஒத்தியோ நிறுத்தியோ வைத்ததில்லை!! யாரை எந்த நேரங்களில் கண்டிக்கவேண்டுமோ அப்போதெல்லாம் தவறியதுமில்லை!! அவரது கம்பீரம் மற்றவர்களை கட்டிப் போடது என்றுதான் சொல்லவேண்டும்!!

காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர். பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு. கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.

கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் “பெருந்தலைவராகத் தம்மைக் கருதுவார்கள் என பல அரசியல் தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உணரும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி காமராஜர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்தது.

சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்மவீர்ர் கலந்து கொண்டார் கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் சிவாஜி கணேசன் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வரவில்லை. மிகவும் தாமதமாக வந்தார். நடிகர் சிவாஜிகணேசன் வந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இதனை மேடையிலிருந்த காமராஜர் கவனித்தார். சிவாஜி கணேசனை அருகில் அழைத்தார். “நீங்கள் கூட்டத்திற்கு வருவதாக இருந்தால் முதலிலேயே வந்து விடுங்கள். அல்லது கூட்டம் முடிந்தபின் வாருங்கள்.”
“இப்படி இடையில் வருவதை நிறுத்திவிடுங்கள்” என்றார் பெருந்தலைவரின் சீரிய சிந்தனை கலந்த அறிவுரையை ஏற்ற நடிகர் திலகம் அதன் பிறகு எல்லாக் கூட்டத்திற்கும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரம்பித்தார்.

எனக்குத் தெரியும், உட்கார்!
பெருந்தலைவர் நல்ல உயரம். களையான முகத்தில் தீட்சண்யமான, புடைபரந்த கண்களோடு கம்பீரமாக இருப்பார். தேனாம் பேட்டை மைதானக் கூட்டமொன்றில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கக்கனை காமராஜர் அறிவித்தார். 

கூட்டத்தின் பின் பகுதியிலிருந்து மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி ஒரு சலசலப்பு. “எனக்குத் தெரியும், உட்கார்” என்று அவர்களை அமர்த்தினார். பார்ப்பவர்கள் அவரது கம்பீரத்துக்கு அடிபணியாமல் இருக்க முடியாது. மேடைப் பேச்சிலும் நெஞ்சைத் தொடும் உண்மையின் தொனியும், அந்த உண்மை மட்டுமே கோத்துத்தரும் சொற்களின் அழகும் அவரது பேச்சைக் கேட்டவர்களின் அனுபவம். அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு இருந்ததில்லை!


எதிர்கொள்வது, வெற்றிகாண்பது!
பிரச்சினைகளுடன் சமாதானம் செய்துகொள்வது அவருக்குப் பழக்கமில்லை. அரசியலானாலும் நிர்வாக மானாலும் உள்கட்சிப் பூசலானாலும் எதிர்கொண்டு சந்திப்பார். பிரச்சினை என்று வந்துவிட்டால், அதைத் தீர்க்கும்வரை அவர் தூங்குவதில்லை. இப்படி விடாப்பிடியாக இருப்பவர்கள் அரசியலில் வெற்றி காண்பது அரிது. ஆனால், காமராஜர் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார். அன்றைய மத்திய உள்துறை அமைச் சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி தலைமையில், காமராஜரைப் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், “காமராஜரின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பிரச்சினைகளை எதிர்கொள்வது, வெற்றிகாண்பது என்று கூறிவிடலாம்” என்றார். காமராஜரின் தன்னம்பிக்கையும் துணிவும் நிகரற்றவை.

சுட்டது, விட்டோம் என்று கையை உதறிவிடுவது அவர் வழக்கமல்ல. தீர்வே இல்லை என்றிருந்த தமிழ்நாட்டு நெசவாளர் பிரச்சினைக்கு, நூல் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்செய்து, தீர்வுக்கு முயற்சி செய்தார். இதற்காக அப்போது ஐந்தரை லட்சம் ரேஷன் அட்டைகள் இருந்தனவாம். நெசவாளர்கள் பட்டினி கிடந்தபோது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உணவளிப்பதில் பிடிவாதமாகச் செயல்பட்டார்.

No comments: