Sunday 21 December 2014

பெருந்தலைவர்-அமைச்சரவை-கக்கன்

பெருந்தலைவரின் அமைச்சரவை

தமிழக சட்டசபை மற்றும் அரசு நிர்வாகம் என்கிற எண்ணங்களில் நாம் எண்ணிப் பார்க்கிறபோது ஒரு சில தனிப்பட்ட உயர்ந்த குணசீலர்கள் மற்றும் தன்மையாளர்கள் நமது எண்ண அலைகளின் மேல்  மட்டத்தில் எழுந்து வருவதை தவிர்க்க முடியாது. காமராஜர் தனது அமைச்சரவையில் வெறும் எட்டு பேர்களை மட்டுமே வைத்து இருந்தார். அவர்கள் அனைவரும் தலை சிறந்த நிர்வாகிகள். அவர்களுள் சி. சுப்பிரமணியம், வெங்கட் ராமன், கக்கன் ஆகியோர் என்றுமே நினைவில் நிற்பார்கள். கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரும் முஸ்லிம்களுடைய பிரதிநிதியாக காமராசரின் அமைச்சரவையில் பங்கேற்று இருந்தார்.  இவர்களிலும்        சி. சுப்ரமணியம் காமராசரை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர் என்றாலும் அவரையும் அமைச்சரவையில் சேர்த்து கல்வியமைச்சர் பொறுப்புக் கொடுத்து அரவணைத்தது காமராசரின் கரங்கள். 

அதேபோல் வெங்கட் ராமன் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகள் அளிக்கப்பட்டு சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார். ஆனால் இவரது பிறந்த  ஊரான இராஜாமடத்துக்கோ அல்லது அதை அடுத்து இருக்கிற அதிராம்பட்டினத்துக்கோ தனது பதவி காலத்தில் எந்த நன்மையையும் செய்யவில்லை. சேதுரோடு என்பது  வேதாரணியத்தில் இருந்து இராமேஸ்வரம் வரை கடற்கரை வழியாக செல்வதுதான். வெங்கட்ராமன் மனது வைத்து இருந்தால் கருங்குளம் அருகில் நசுவினி ஆற்றிலும் இராஜமடம் அருகில் அக்கினி ஆற்றிலும் அன்றே பாலங்கள் கட்டி  சேதுரோட்டை போக்குவரத்துக்கு திறந்து விட்டு இருக்கலாம். ஆனால் தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் இருந்து அதிரை நோக்கி வந்திருக்க வேண்டிய சேது சாலையை பட்டுக்கோட்டைக்கு உள்ளே திருப்பிவிட்டு பிறகு அதை சேதுபாவா  சத்திரத்தில் கொண்டுபோய் இணைத்த செயல் நம்மைப் பொருத்தவரையில் இவரது சாதனைப் பட்டியலில் ஒரு கரும்புள்ளி.  ஆனால் தமிழகமெங்கும் தொழில் மயமாவதில் காமராசருக்கு வலதுகரமாகத் திகழ்ந்தார். 

காமராசர் அவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகித்த பக்தவத்சலம் மக்களின் நினைவில் இருந்து மறைந்துவிட்டார். 1967 தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தில்      தி. மு. க வின் வெற்றியைப் பார்த்துவிட்டு “நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்று சொல்லிய அவரின்  வார்த்தைகள் மட்டுமே இன்றும்  நிற்கின்றன. 



இவர்களுள் திரு. கக்கன் அவர்களைப் பற்றி தனி அத்தியாயம் எழுதலாம். கக்கன் அவர்களுக்கு அவருடைய சாதி இனம் பாராமல்   மிகப் பெரும் பொறுப்புகளை எல்லாம் காமராசர் அளித்து இருந்தார். கக்கனுக்குப் பிறகு அவரது இனத்தை அல்லது தலித் இனத்தை சார்ந்தவர்களுக்கெல்லாம் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை , மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை  போன்ற  முக்கியத்துறைகள் எந்த முதலமைச்சரின் அமைச்சரவையிலும்  வழங்கப்படவில்லை. பால் வளம், செய்திதுறை, பிறபட்டோர் நலம் போன்ற பெரும் அதிகாரமற்ற  துறைகளே வழங்கப்பட்டன/ பட்டிருக்கின்றன. ஆனால் திரு. கக்கன் காமராசரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் இன்னொரு காமராசராகவேத் திகழ்ந்தார். 

கக்கன் அவர்கள்

கக்கன் அவர்களைப் பற்றி சொல்லத் தொடங்குமுன் காஞ்சியில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். அன்றைய காஞ்சி மடாதிபதி சந்திர சேகரப் பெரியவர் ஒரு முறை கக்கன் அவர்களை சந்தித்து ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது , ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தார் என்பது ஒரு களங்கம் நிறைந்த வரலாறு. அதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.   அப்பாவியான அமைச்சர் கக்கனின் எளிமையும், நேர்மையும் அவருடைய சுயமரியாதையைக் காப்பதற்குக் கூட பயன்படவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறேன். பார்ப்பனீயமும் சாதீயமும் வேரூன்றிய இந்த மண்ணில் இத்தகைய வேதனையான விஷயங்கள் நடப்பது வழக்கமே. 

கக்கன் என்கிற பெயர் நிகழ் காலம் முற்றிலுமாக  மறந்துவிட்ட பெயர். இவரை நினைவூட்ட சில வரிகளை  இங்கே எழுதுவது அவசியமாகிறது.  மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டுக்கு மேலாகிறது.  காமராஜரையே மறந்துவிட்ட மக்கள்  கக்கனையா நினைவில் நிறுத்திப் போற்றப் போகிறார்கள்? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.

சத்தியமூர்த்தி காமராஜரை தவிர்க்க முடியாமல் தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். பொது உடைமைக் கட்சியின் புகழ்பெற்ற  தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.

காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். (இன்று குறைந்த காலம் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பணியாற்றியவர்கள் தனியாக தொலைகாட்சி தொடங்கும் அளவுக்கு தனிப்பட்ட வசதி பெறுகிறார்கள்.) 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு,  அறநிலையத்துறை போன்ற பல்வேறு முக்கிய இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.


இன்னொரு காமராஜர்

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 -
தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். 

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘ உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி’  என்று கைகூப்பினார் கக்கன்.

திரு.  கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 

இன்று அந்த இடம் 5  கோடிக்கு  மேல் மதிப்புள்ளதாகும். 

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மா பேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. யார் யாருக்கோ நினைவுச் சின்னம் அமைக்கும் அரசுகள் கக்கனையும் அவரது நினைவையும் அம்போவென்று விட்டுவிட்டன.  ‘இன்று கக்கனை நினைப்போர் யாருமில்லை.  அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் காலத்தில். அதுவும் தோட்டியின்  மகனாகப் பிறந்ததுதான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். ஏழையாகப் பிறந்து எளிமையாக வாழ்ந்து உயர்ந்த பதவிகளை பலகாலம் வகித்த போதும் ஏழையாகவே மறைந்த திரு. கக்கனை  இன்றைய உலகம் பிழைக்கத் தெரியாதவர்  என்றே பட்டம் தந்து பழி தூற்றும். மூன்று வருடம் வட்டச் செயலாளராக இருக்கும் ஒருவர் வாழும் ஆடம்பர வாழ்வை இன்று நாம் கட்சிக் கொடி தாங்கி ஓடும் கார்களின் வனப்பில்  காணலாம். அறுந்து போன செருப்பைத் தைக்க அரை ரூபாய் இல்லாமல் இருந்தவர்கள் அரசியலில் பதவி பெற்றுப் போடும் ஆட்டம் காண சகிக்கவில்லை. பத்து தலைமுறைக்கு சொத்து தேடி வைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? தனது தலைமுறையிலேயே தரையில் படுத்துக் கொண்டு மருத்துவம் பார்த்த கக்கனைப் போன்றவர்கள் எங்கே? பொது வாழ்வுக்கு வந்த பின் எளிமையும் நேர்மையும் வாழ்வில் அங்கமாக இருக்க வேண்டுமென்று கக்கன் காமராசரிடம் கற்றுக் கொண்டு செயல் படுத்தினார்.


கற்பனை

இது  போன்ற நிகழ்வுகள் எல்லாம் அதீகபடுத்தப் பட்ட கற்பனை என்ற ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இன்னொரு பெருந்தலைவரையோ இல்லை கக்கனையோ இந்த் தமிழ் சமூகம் பார்க்குமா என்பது சந்தேகமே?!! கக்கனும் காமராஜரும் ராமன் இலக்குவன் போல இதிகாச பாத்திரங்களே இனி வரும் சந்ததியருக்கு!!

No comments: