Friday 26 December 2014

பெருந்தலைவர்-நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே

1940_ல் த.நா. காங் கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராசர் இருந்தார். அவரது குரு சத்தியமூர்த்தி த.நா.காங்கிர சின் செயலாளர்.


வெள்ளைக்கார அதிகாரிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருந்த காலம் அது.
சென்னை மாநகர மேயராக இருந்த சத்தியமூர்த்தி சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினைக் காகப் பெரிய பெரிய திட்டங் களை எல்லாம் கொண்டு வந் தார். பூண்டி நீர்த்தேக்கத் திட்டம் அப்போது உருவானதுதான்.
மாநில அரசு அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. எனவே அப்போது சென்னை கவர்ன ராக இருந்த ஆர்தர் ஹோம் பூண்டி நீர்த்தேக்கத் திட்டத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் சத்திய மூர்த்தியும் விழாவில் கலந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி மீது காமராஜுக்கு வருத்தம் ஏற்பட்டது. சத்தியமூர்த்தியைப் போய் சந்தித்தார். “வெள்ளைக்கார கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டது ஏன்?'’ என்று கேட்டார்.
தண்ணீர் பிரச்சினை மிக முக்கியமானது. மேலும் நான் மேயர் என்ற முறையில்தானே கவர்னர் விழாவில் கலந்து கொண்டேன்'’ என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.
“மேயராக இருந்தாலும் காங்கிரஸ்காரர்தானே. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுதான் எனக்கு முக்கியம்'’ என்றார் காமராஜ்.
“நீ என்னப்பா சொல்ற? நடந்தது நடந்து போச்சு இப்போது என்னை என்ன செய்யச்சொல்ற'’ பதறினார் சத்தியமூர்த்தி.
“நீங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டு த.நா. காங்கிரஸ் கமிட்டிக்கு உங்கள் கைப்பட எழுதிகொடுங்கள் மன்னிப்புக்கேட்டும் நீங்கள் எழுத வேண்டும்'’ காமராஜ் குரலில் உறுதி இருந்தது.
சற்று நேர அமைதிக்குப் பின் காமராஜ் கேட்டது போலவே ஒரு கடிதம் எழுதி சத்தியமூர்த்தி காமராஜ் கையில் கொடுத்தார். அதை காமராஜ் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்.
சில நாட்களில் டெல்லியில் இருந்து காமராஜருக்கு ஒரு தபால் வந்தது. காங்கிரசின் மேலிடத் தபால். சத்தியமூர்த்தி கவர்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது அது பற்றி எழுதவும்'’ என்பதுதான் சாராம்சம்.
“உண்மைதான்! ஆனால் மேயர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்திருக் கிறார் என்று த.நா.கா.க. தலைவர் என்ற முறையில் காமராசர் பதில் எழுதினார்.
அந்தப் பதிலோடு அந்த விஷயம் அப்படியே அமுங்கிப் போய் விட்டது.

No comments: