Monday 1 December 2014

காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சாரம் மற்றும் பெரிய அணைத் திட்டங்கள்

பெரிய அணைத் திட்டங்கள் பின் வருமாறு:- 


1. கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்டம் - 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1957-ஆம் ஆண்டு (கிருஷ்ணகிரி அணைத் திட்டம்) முடிவுற்றது. பொன்னி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தால் 7500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. 

2. அமராவதி நீர்த்தேக்கத் திட்டம் - அமராவதி ஆற்றின் குறுக்கே (1958-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தின் பயனாக புதியதாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 

3. சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டம் - ஆற்காடு மாவட்டத்தில் பொன்னி ஆற்றின் குறுக்கே (1957-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தால் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 

4. புள்ளம்பாடி கால்வாய்த் திட்டம் - காவிரியின் மேல், அணைக்கட்டிலிருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, உடையார்பாளையம் தாலுகாவில் 24,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், புள்ளம்பாடி கால்வாய்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 

5. வீடுர் நீர்த்தேக்கத் திட்டம் - திண்டிவனம் அருகில் உள்ள வீடுர் கிராமத்தில் 1958-ல் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தினால் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இதில் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள 1000 ஏக்கர் நிலமும் அடங்கும். 

6. புதிய கட்டளை மேல்நிலைக் கல்வாய் திட்டம் - 86 மைல் நீளம் கொண்ட புதிய கட்டளைக் கால்வாய் திட்டத்தின் மூலமாக 8622 ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன. 

7. கீழ்பவானி திட்டம் - பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தினால் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. 1957-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடைந்தன. 

8. மணிமுத்தாறு திட்டம் - இத்திட்டம் 1958-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோடு, மணிமுத்தாறு சேரும் இடத்திற்கு முன்பாக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணைத்திட்டத்தோடு, மழைநீரை நம்பி விவசாயம் செய்து வரும் 20,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் விதத்தில், அணையின் வலதுபுறத்தில் 28 மைல் நீளக் கால்வாயும் வெட்டப்பட்டது. 

இந்த திட்டத்தின் மூலமாக தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி அவதிப்படும், தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் 83,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் தொடர்ந்து கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

9. ஆரணி ஆறு திட்டம் - ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், புதிதாக 3,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றதோடு, 13,600 ஏக்கருக்கு பாசன வசதி உறுதி செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 1958-ஆம் ஆண்டு முழுமையடைந்தது. 

10. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் - தமிழ்நாடு கேரள மாநிலங்களின் கூட்டு திட்டமாக அன்றே 32 கோடி ரூபாய் செலவில் பல துணை திட்டங்களையும் கொண்டதாக இத்திட்டம் அமைந்திருந்தது. அதற்கான ஒப்பந்தமும் கேரள அரசோடு போடப்பட்டிருந்தது. 

இந்தத் திட்டத்தின்படி மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்ற பரம்பிக்குளம் நதி மற்றும் சாலக்குடி துணை நதிகளினுடைய நீரை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோழியாறு நதியில் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரிபள்ளம், தனுக்கடவு மற்றும் தேக்கடி ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத் திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். 

இது தவிர ஆழியாறு நதியின் பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். இதுதவிர ஆழியாறு நதியின் ஒரு நீர்த்தேக்கமும் பாலாறு நதியில் ஒரு நீர்த்தேக்கமும், இது தவிர பல மைல் நீளத்துக்கு மலைக்குடைவுகளையும் கொண்டதாக இந்த திட்டம் தீட்டப்பட்டிருந்தது. 1963 வரை இந்த திட்டம் பலமுனைகளில் முடக்கி விடப்பட்டு தீவிரமாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 

சோழியாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு, நவமலைமலைக் குடைவு, திருமூர்த்தி அணை, வேடைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், சேதுமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் என்று ஏறக்குறைய திட்டத்தினுடைய பெரும்பகுதி முடிவடையும் நிலையை 1963-ஆம் ஆண்டு எட்டியிருந்தது. 

11. வைகை நீர்த்தேக்கத் திட்டம் - மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 1959-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திட்டத்தினால் புதிதாக 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. 

12. மேட்டூர் கால்வாய் திட்டம் - 1958-ல் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 




மின்சாரம்: 

காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, 156 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தி திறன், 571 மெகா வாட்டுகளாக உயர்ந்தது. இதற்காக நீர்மின் நிலையங்களும் அனல்மின்நிலை யங்களும் புதியதாக உருவாக்கப்பட்டன. இது மட்டுமல்ல ஏற்கனவே இயங்கி வந்த நீர், அனல் மின்நிலையங்கள் திறன் அதிகரிக்கப்பட்டது. 

காமராஜர் காலத்தில் ஏற்பட்ட ஏற்படுத்தப்பட்ட மின்உற்பத்தி திட்டங்கள் பின்வருமாறு:- 

குந்தா நீர்மின்திட்டம் - பன்னாட்டு திட்டங்களோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும். 1956-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் கனடா நாட்டு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. 

1960-ஆம் ஆண்டு செயல்பட தொடங்கிய இத்திட்டத்தின் மொத்த உற்பத்தி திறன் 1,40,000 கிலோவாட் ஆகும். மோயாறு நீர்மின் திட்டம் - பைகாரா நீர்மின் உற்பத்தி திட்டத்திலிருந்து வெளியாகக்கூடிய நீரை அந்த திட்டத்திலிருந்து 10 மைல்கல் தொலைவில் உள்ள மோயாறு பள்ளத்தாக்கில் விழச் செய்து 130 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியாக செய்து நீர்மின் திட்டம் அமைக்கப்பட்டது. 

இதனுடைய மொத்த உற்பத்தி திறன் 36,000 கிலோ வாட் ஆகும். கூடலூர் நீர்மின் திட்டம் - மதுரை மாவட்டம் கூடலூருக்கு அருகில் பெரியாறு நீரை பயன்படுத்தி இந்த நீர்மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டது. 1955-ல் தொடங்கப்பட்டு 1958-ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இத்திட்டத்தின் உற்பத்தி அளவு 1,40,000 கிலோ வாட் ஆகும். 

சென்னை அனல்மின்நிலையம் - ஏற்கனவே இயங்கி வந்த சென்னை அனல்மின்நிலையத்தில் மூன்றாவது மின்உற்பத்தி பிரிவு 1958 -ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது. சமயநல்லூர் அனல்மின்நிலையம் - மதுரைக்கு அருகே சமயநல்லூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. அதனுடைய உற்பத்தி திறன் 14,000 கிலோ வாட் ஆகும். 

மேட்டூர் புனல் மின்உற்பத்தி திட்டம் - மேட்டூர் அணையிலிருந்து விடப்படும் விவசாய கழிவு நீரை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சுரங்க நீர்மின்திட்டமாகும் இது. இந்த நீர்மின் திட்டத்தினுடைய திறானது ஒரு லட்சம் கிலோவாட் ஆகும். நெய்வேலி அனல்மின் திட்டம் - நெய்வேலியில் பெறப்பட்ட பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி நான்கு லட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது.

இந்த வகையில், தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின்திட்டங்கள் மூலமாக, மின்சக்தித் திறன் 1963 ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 6,30,700 கிலோவாட்டாக உயர்ந்தது. இதில் நெய்வேலி அனல்மின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 70,000 கிலோ வாட்டும் அடக்கம்

No comments: