Sunday 30 November 2014

பெருந்தலைவர்-சாதிக்கு பலியாகி விடாதீர்கள்!

பெருந்தலைவர் காமராஜர் பேச்சிலிருந்து தொகுத்தது


1. ஏழைகள் மானம் மரியாதையுடன் வாழ்வதைப் பணத் திமிங்கிலங்கள் விரும்பவில்லை. ஏழைகள் என்றும் அமைகளாகவேதான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறவர்கள். ஏழை மக்கள் இந்தப் பணக்காரர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது.
2. நம்மை சாதிச் சண்டையில் திருப்பிவிடுகிறார்கள். என் ஜாதிக்காரர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்கிறார்கள். யார் மந்திரியாக இருப்பது என்பது பிரச்சினையல்ல. மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை.
3. நான் கூட பத்தாண்டுகளாகப் பெரிய மந்திரியாக இருந்தேன். நான் மந்திரியாக இருந்ததற்காக நாடார்கள் எல்லாம், ‘நாடார் மந்திரியாக இருக்கிறார்; நாங்கள் எல்லாம் உழைக்கமாட்டோம்; உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவோம்’ என்று சொன்னால் முடியுமாண்ணேன்…
4. நான் மந்திரியாக இருந்தேன். எனக்கு அரசாங்கத்தில் வீடும் காரும் கொடுத்தார்கள். இதனால் மற்ற நாடார்களுக்கு என்ன லாபம்? ஆகையால் ஜாதியைச் சொல்லி ஏமாற்றுகிறவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பலியாகிவிடக் கூடாது.
5. “நான் தேர்தலில் தோல்வியடைந்தவன். என் மக்களை மீண்டும் சந்திக்கிறேன்? யார் தயவும் எனக்குத் தேவையில்லை. நான் மக்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால்தான் பணக்காரர்கள் என்னைத் தோற்கடித்தார்கள்.
6. யார் தாழ்த்தப்பட்டவர்?
அரிஜனங்கள் ஏன் தாழ்த்தப்பட்டவர் என்று புரியவில்லை!
தாழ்த்தப்பட்டவர்கள், உயர்ந்தோர்கள் என்று சமுதாயத்தில் இருக்கக் கூடாது என்றெண்ணித்தான் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓட்டுரிமை கொடுத்துள்ளோம்.
முன்பு ராஜா மகன்தான் ராஜா ஆக முடியும். அப்படிப்பட்ட ராஜாக்களை நாம் போகச் சொல்லிவிட்டோம். மக்களிடம் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அவர் மந்திரியாக வரத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நான் மந்திரியாவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
7. ஏன் சமுதாயத்தில் சிலர் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்? காரணம், அவர்கள் பொருளாதாரத் துறையில் பின்னடைந்திருப்பதுதான்.
பொருளாதாரத் துறையில் முன்னேற்றமடைந்த ஒருவர், தாழ்த்தப்பட்டவராக இருந்தபோதிலும் அவரிடம் வேலை செய்ய உயர்ந்தவர் என்று கூறிக் கொள்பவரும் தானாகவே வருகிறார்.
ஆகவே பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தை தன்னாலேயே மறைந்து உயர்ந்தவர் என்றாகிவிடும்.
8. கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால் ஜாதி வித்தியாசம் தன்னாலேயே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டர் ஆகிவிட்டால் ‘நான் உயர்ந்த ஜாதி, ஆகையால் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன்’ என்று யாரும் கூற முடியாது.
உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொள்பவன் தானாகவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்கிறான். ஆகவே கல்வியே இந்த ஜாதிய கொடுமையைப் போக்க வழி வகுக்கும்.”

No comments: