Thursday 6 November 2014

வர்மம் மறந்த சான்றோர்கள்

வர்மம் மறந்த சான்றோர்கள்



வர்ம சிகிச்சையின் வரலாறு 

பதினெண் சித்தர்களால் குறிப்பாகப் பொதியில் முனிவர் அகத்தியரால் கற்பிக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் வர்மசிகிச்சை என்பது ஒரு பிரிவாகும். மனித உடலின் மேற்பரப்பிலுள்ள நரம்புமுனைகள் சிலவற்றை வர்ம ஸ்தானங்கள் எனச் சித்த மருத்துவர்கள் குறிப்பிடுவர். இந்நரம்பு முனைகளில் அடி விழுந்தால் உடலுள்ளுறுப்புகளுக்கு ஊறு நேருமென்றும் உயிருக்கே ஆபத்து விளையக் கூடுமென்றும் கருதப்படுகின்றன. இது குறித்த அறிவியலே வர்மக்கலை ஆகும். வர்மக்கலையைக் கற்றறிந்து அதனைப் பிரயோகிக்கும் நிபுணத்துவம் உடையோரை வர்மாணி ஆசான் என அழைப்பது வழக்கம். கேரள மாநிலத்திலும் திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலும் வர்மாணி ஆசான் பரம்பரையைச் சேர்ந்தோர் பலர் உள்ளனர். வர்மக்கலை என்பது களரிப் பயிற்று எனப்படும் போர்முறைக் கல்விப் பயிற்சிப் புலத்தின் உயர் கல்விப் பிரிவைச் சேர்ந்ததாகும். ஆயினும், இதன் ஆக்கபூர்வமான பயன்பாடே - வர்ம சிகிச்சை என்ற மருத்துவச் செயல்பாடே - பரவலாக அறியப்பட்டுள்ளது. சீன நாட்டு அக்குபங்க்சர் சிகிச்சை முறை அண்மைக் காலமாக நம் நாட்டில் பிரபலமடைந்துள்ளதாலும், அச்சிகிச்சை முறையிலும் வர்மஸ்தானங்களுக்கு இணையான நரம்பு முனைகள் குறிப்பிடப்படுவதாலும் வர்ம சிகிச்சை குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அவ்வகையிலும் வர்மக்கலை என்பது மருத்துவ அறிவியலாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 

வன்மம் = வர்மம்


வெளித்தோற்றத்தில் புலப்படாமல் மர்மமாக (இரகசியமாக) ஒளிந்திருக்கும் நரம்புமுனைகள் மர்ம ஸ்தானங்கள் என வழங்கப்பட்டுக் காலப்போக்கில் வர்மஸ்தானங்கள் என மருவியதாகக் கருதப்படுகிறது. இது சரியான விளக்கமாகத் தெரியவில்லை. வர்மம் என்பது வன்மம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகவே இருக்க வேண்டும். வன்மை, வலிமை முதலிய சொற்களைப் போன்றே வன்மம் என்ற சொல்லுக்கும் ‘வல்' என்ற வேர்ச் சொல்லுடன் வலிமையான தொடர்பு உள்ளது. கம்ப ராமாயணம் யுத்த காண்டம் அதிகாயன் வதைப் படலத்தில், நீலன் என்ற வானரப் படைவீரன், உன்மத்தன் (அல்லது போர்மத்தன்) எனும் அரக்கர் படைவீரனைக் கொல்வது விவரிக்கப்படுகிறது. அந்நிகழ்வைக் குறிப்பிடும் பாடலையடுத்துப் பின்வரும் பாடல் இடம் பெற்றுள்ளது: 

உன்மத்தன் வயிரமார்பின் உரும் ஒத்த கரம் சென்றுற்ற 
வன்மத்தைக் கண்டும் வீழ்ந்த மதமத்த மலையைப் பார்த்தும் 
சன்மத்தின் தன்மையானும் தருமத்தைத் தள்ளி வாழ்ந்த 
கன்மத்தின் கடைக் கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் 

‘உன்மத்தனின் வஜ்ரம் போன்ற மார்பில் நீலனது கையானது இடி போன்ற வன்ம அடியைச் செலுத்தியதன் விளைவாக உன்மத்தனின் மலை போன்ற உடல் உயிரற்று வீழ்ந்ததைக் கண்கூடாகப் பார்த்தபின்னரும் அரக்கப் பிறவியின் தன்மைக்கேற்பவும் தர்ம நெறியை விட்டு விலகி வாழ்ந்த கர்ம வினையின் பயன் விளையப்போகிற நேரம் வந்துவிட்டதாலும் வயமத்தன் என்ற அரக்கர் படைவீரனும் நீலனுடன் போர் புரிய விரைந்து வந்தான்' என்பது இப்பாடலின் பொருளாகும். வன்மம் என்பது ‘ஆழமான பகையுணர்ச்சி' என்ற பொருளில் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனவே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஆழமாகப் பாதிக்கக்கூடிய பகை நரம்புமுனைகள் வன்மத்தானங்கள் என்றும் அவற்றை நுட்பமாகத் தாக்கும் பயிற்சியே வன்ம அடி முறை என்றும் குறிப்பிடப்பட்டன எனத் தெரியவருகின்றது. 

வன்ம அடிமுறை = அங்கவெட்டு 


வன்மத்தானங்களைத் தாக்கும் அடிமுறை, பழங்காலத் தமிழகத்தில் ‘அங்கவெட்டு' எனப்பட்டது. இது ‘அங்கை வெட்டு' என்பதன் திரிபாகும். விரிந்த உள்ளங்கையை அகங்கை அல்லது அங்கை எனக் குறிப்பிடுவது வழக்கம். எந்த ஆயுதமும் ஏந்தாமல் வெறும் அங்கையைப் பயன்படுத்தி எதிரியை வெட்டி வீழ்த்துகிற போர் முறையா தலால் இது அங்கைவெட்டு எனப்பட்டது. மொத்தம் நூற்றெட்டு அங்கவெட்டு முறைகள் இருந்தன எனக் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி எனப்பட்ட வேம்பத்தூராரால் இயற்றப்பட்ட திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் அங்கம் வெட்டிய படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (‘‘அங்க நூற்றெட்டும் வென்றான்'' - பா. 16) படுவர்மம் பன்னிரண்டு, தொடு வர்மம் தொண்ணூற்றாறு - ஆக மொத்தம் நூற்றெட்டு வர்மஸ்தானங்கள் மனித உடலில் உள்ளன என்பது சித்த மருத்துவக் கோட்பாடு. இந்நூற்றெட்டு வன்மத்தானங்களை அங்கையால் தாக்கி எதிரியை வீழ்த்தும் தொழில் நுட்பமே ‘அங்க வெட்டு' எனப்பட்டது. 

அங்கக்காரர்கள் 


கி.பி. 12 முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான பல தமிழ்க் கல்வெட்டுகளில் ‘அங்கக்காரர்', ‘அங்கக் களரி' என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன.(கி.பி. 14ஆம் நூற்றாண்டைய வரலாற்று நிகழ்வு தொடர்பான) கி.பி. 15 - 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஐவர் ராசாக்கள் கதை' என்ற வில்லுப்பாட்டு இலக்கியத்தில் ‘அங்கஞ் சிரமிகள்' என்று அழைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. அங்கம், சிரமம் என்ற இரு வகைப் போர் முறைகளிலும் தேர்ந்தவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டனர். அங்கைப் போர்முறை அங்கம் என்று வழங்கப்பட்டதெனில் வாள்வீச்சு, கோல் சுழற்றுதல் ஆகியவையே சிரமம், சிரம்பம், சிலம்பம் என்றெல்லாம் வழங்கப்பட்டன. தமிழ்க் கல்வெட்டுகளைப் பொருத்தவரை, கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குரிய வணிகக் குழுவினர் (ஐந்நூற்றுவர்) கல்வெட்டுகளிலிருந்து வணிகக் குழுவினரின் பாதுகாப்புப் படைவீரர்களுள் அங்கக்காரர்களும் இருந்தனர் என்ற செய்தி தெரிய வருகிறது. கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலிருந்து ‘வலங்கை உய்யக் கொண்ட வாள்வீரர்' எனப்பட்ட சான்றோர் (நாடார்) குலப்பிரிவினருள்ளும், ‘வெட்டுமாவலி அகம் படியர் எனப்பட்ட அகம்படிய மறவர் குலப்பிரிவினருள்ளும் சிலர் ‘அங்கக்காரன்' என்ற பட்டத்தைப் புனைந்திருந்தனர். என்ற விவரம் தெரியவருகிறது. எனவே கி.பி. 11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் அங்கக்காரர்கள் மேற்குறித்த சமூகத்தவராகவே இருந்திருக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் எப்போதும் வென்றான் என்ற ஊருக்கருகில் சோழபுரம் என்ற ஊரிலுள்ள அணைந்தான் கோயில் என வழங்கும் சுடலைமாட சுவாமி கோயிலின் வாயிலில் கற்பலகையொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அக்கற்பலகையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மல்லன் குடியான உத்தம சோழபுரத்து நகரத்தார் (வணிகர்கள்) வசம், அவ்வூரின் பரிக்ரகத்தைச் (போர் அவை Military Academy) சேர்ந்த தேவேந்திர வல்லவன் அங்கக்காரர்களில், கொற்றன் குடியனான கலங்காத கண்டப் பேரையன் என்பவர் நிலம் ஒன்றை விலைக்கு வாங்கி, இறந்து போன தமது மகன் குறுமன் இரட்டை என்பவனின் நினைவாகச் சிலையேற்றி, அச்சிலையின் வழிபாட்டுக்கு இறையிலியாக (அரசுக்குரிய வரியைச் செலுத்தாமல் அனுபவிக்கும் நிலமாக) அந்நிலத்தை வழங்கியுள்ளார். என்ற செய்தி அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் அரசர் பெயர், ஆட்சியாண்டு முதலிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லையாயினும், சடையவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1250 - 1284) பட்டப் பெயரான "தேவேந்திர வல்லபன்' என்பதைத் தங்களுடைய குழுவின் பட்டப் பெயராகச் சூட்டிக்கொண்ட அங்கக்காரர்கள் தொடர்பான கல்வெட்டாதலால் அது சடையவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென முடிவு செய்யலாம்.  மேற்குறித்த அங்கக்காரர், இறந்து போன தமது மகனுக்காகச் ‘சிலை' எனப்படும் கல் நாட்டியுள்ளார். அக்கல்லே, அணைந்தான் எனத் தற்போது வழங்கும் சுடலைமாட சுவாமியாக இருக்க வேண்டும்.  தற்போது இக்கோயில் நாடார் சமூகத்தவர்க்குரியதாக உள்ளது. 

கிட்டதட்ட இதற்குச் சமகாலத்தில் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்துள்ள அங்கமங்கலம் என்ற ஊரிலும் அங்கக்காரர்கள் மிகுந்த அதிகாரத்துடன் வாழ்ந்துள்ளனர். அவ்வூரிலுள்ள நரசிம்மேஸ்வரர் கோயில் எனப்படும் சிவன் கோயில் கல்வெட்டுகளில், சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலம் (கி.பி. 1216 - 1239) தொடங்கி, "அங்கைமங்கலமான வீரபாண்டியன் மடிகை (மளிகை) மாநகரத்து நரசிங்க ஈஸ்வரம்'' என அக்கோயில் குறிப்பிடப்படுகிறது. அங்கைப் போர்வீரர்களுக்கு இறையிலி மானியமாக வழங்கப்பட்டிருந்த அங்கைமங்கலத்தின் இறைவன், சிவபிரானாக - சிவலிங்க வடிவினனாக - இருந்தபோதிலும் நரசிங்க ஈஸ்வரன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளான் எனில், எவ்வித ஆயுதமுமின்றி இரணியனைக் கொன்ற நரசிம்மருக்கு இணையான அங்கைப் போர் வீரர்களை இவ்வகையில் அரசர் கெளரவித்துள்ளார் என்று நாம் பொருள்கொள்வது தவறாகாது. இவ்வூரிலும் தற்போது நாடார் சமூகத்தவரே பெரும்பான்மையோராக உள்ளனர். இவ்வூரையடுத்துப் ‘பணிக்க நாடான் குடியிருப்பு' என்ற ஊர் உள்ளது. பணிக்கன் என்பது போர்க்கலை கற்பிக்கும் ஆசானைக் குறிக்கும் பட்டமாகும். இப்பகுதியிலுள்ள ஆறுமுகனேரியைச் சேர்ந்த சான்றோர் சமூகத்தவர்கள் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே ”தட்சிண மாற நாடுசீமை ஆயிரம் நாடாக்கள்” என்ற பெயரில் வணிகப் பேட்டைகள் அமைத்தல் போன்ற சுயச்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தங்கள் நலன்களைக் காத்துக் கொண்டனர் என்பதற்குச் செப்பேட்டு ஆதாரம் உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் அங்கமங்கலம், மளிகைப் பொருள்களைச் சேமித்து மொத்த விற்பனையில் ஈடுபட்டுவந்த ‘மடிகை மாநகர'மாக இருந்துவந்த வரலாற்றை நாம் கவனத்தில் கொண்டால், நாடார்களின் பாரம்பரியப் பின்னணியை உணர இயலும். 

களரிப்பயிற்று :

இன்றைய காலத்தில் கேரளாவில் பெரிதும் பயிற்றுவிக்கப்படும் கலையான களரிப்பயிற்று பண்டைய தமிழர்களின் ஒரு தற்பாதுகாப்புக் கலையாகும். இந்தகலை தமிழர்களின் கலை என்பது தமிழ் ஏடுகளின் மூலம் தெளிவாகிறது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம், பயிற்று என்பது பயிற்றவித்தல் என்னும் பொருளில் அமைகிறது. வீர விளையாட்டுக் கலையான களரி எதிரியை தாக்கவும் மடக்கவும் உதவுகிறது.
களரி உருவாகிய இடங்களுக்கமைய வடக்கன் களரி, தெக்கன் களரி, கடத்தநாடன் களரி, துளுநாடன் களரி என நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாக தெரிய வருகிறது. ஆதிகாலங்களில் போர் வீர்ர்களும் அரச பரம்பரையினரும் கற்ற இக்கலையானது பிற்காலங்களில் அனைத்து தரப்பினரும் பயிலும் தற்காப்புக்கலையாக தோற்றம் கண்டது.
வாய்மொழியாகக் குரு பாடலைப் பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்துப் பயிற்சியினை மேற்கொள்ளும் வாய்த்தாரி, உடம்பைப் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் சுவடு முறைகளைக் குறிக்கும் மெய்த்தாரி , ஆயுதங்கள் வைத்துச் செய்யும் பயிற்சி முறையான அங்கதாரி, கோல்த்தாரி எனும் கம்பு வைத்து செய்யும் பயிற்சி மற்றும் கை கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் வெறுங்கைப்பிரயோகம் எனபனவே களரிப்பயிற்சி வகைகளாகும்.
சிவன் அல்லது விஷ்ணுவை களரி தெய்வமாக வைத்து இரு புறங்களிலும் ஆயுதங்களை நிரப்பிவைத்து பயிற்சி நடக்கும் களரிப் பயிற்சியில் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும் ஆசனப்பயிற்சிகளும் இடம்பெறும்.
அனேக களரி ஆசிரியர்கள் வர்மக்கலையும் அறிந்திருந்தனர். சிலம்பத்தில் பாவிக்கப்படும் ஆயுதங்கள் களரியிலும் பாவிக்கப்படுகின்றன.

அனந்தபத்மநாபன் நாடார்

வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசருமானவர் பால மார்த்தாண்டன் (1728-1758). கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட யோகக்காரர்களும் மாடாம்பிகளும் முயற்சி செய்த வேளையில் தச்சன் விளை அனத்தன் என்னும் அனந்தபத்மநாபன் நாடாரின் தலைமையில் 108 களரி ஆசான்களும் முயற்சி செய்து மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். [தமிழினி, மே 2008 இதழில் வெளிவந்த கட்டுரை எனது (குமரன் ந.பா தோலாண்டி) ஆய்வுகளுக்கு பின் சில மாற்றங்களுடன் .


No comments: