Sunday 2 November 2014

விருதுநகர் என்ற விருதைவெற்றி

விருதுநகர் என்ற விருதைவெற்றி

விருதுநகர் தல வரலாறு






விருதுநகர் என்றால் வணிகம் என்று பொருள் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது. "Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்புடன் கூறப்படுகிறது.

“பொதியை ஏத்தி வண்டியிலே, பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு – நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு”
என்று கவிஞர் மருதகாசி பாடியுள்ளார்.

அரசியலில் காமராசரின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரிலும் பின் தமிழகத்தை உருவாக்குவதிலும் காமராசர் வழிகாட்டியாக இருந்தார். காமராசரின் அட்சி “பொற்காலம்” என்று கூறலாம். இலவச ஆங்கில வழிக்கல்வி அனைவருக்கும் வேறுபாடின்றி அளித்த முதல் பள்ளி 1889ஆம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீருடையை முதலில் விருதுநகர் பள்ளிகள் தான் கடைபிடித்தன. மகமை, மற்றும் உறவின்முறை மூலம் பள்ளிகள், கல்லூரிகள் இயக்குவதில் விருதுநகர் புகழ்பெற்றது என்று கூறலாம். ஆன்மீகத்தில் ஆலயவழிபாடு மட்டும் அல்லாமல் பல சங்கங்கள் வைத்து வேதம், கீதை புராணங்கள், தேவாரம் என அனைத்தையும் மக்கள் படிக்கும் வண்ணம் செய்வதில் பெருமை வாய்ந்தவர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்குகொள்வதைக் காணலாம்.
 விருதுநகர் 9. 34’ 10” நிலநேர்கோடு (Longitude) மற்றும் 77.57’25” நிலகுறுக்கு கோட்டிலும் (Latitude ) அமைந்துள்ளது. விருதுநகரைச் சுற்றி வடக்கில் மதுரையும் (48கி.மீ) தெற்கில் சாத்தூர் (26கி.மீ) மேற்கில் சிவகாசி (26கி.மீ) மேலும் அருப்புக்கோட்டையும்(18கி.மீ) அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 101மீட்டர் உயரம், சமவெளி பிரதேசம்,கரிசல்மண், கருங்கல் மற்றும் சுக்கான் பாறைகள் கொண்ட புவியல் அமைப்பைக் கொண்டது. வெப்பம் மிகுந்த மற்றும் நிலையற்ற மழைத்தன்மையைக் கொண்ட இடமாகும். 

திருத்தங்கலில் கண்டெடுக்கப்பட்ட மீன் பொரித்த நாணயம் பாண்டியமன்னர்களின் ஆட்சியைக்குறிக்கிறது . பாண்டிய மன்னர்கள் ஏறத்தாழ 16ஆம் நூற்றாண்டு வரை ஆண்டதாக கூறப்படுகிறது. ஆப்போது புங்க நாடு என்று அழைக்கப்பட்டது. இடையில் சிறிது காலம் சோழர் கீழ் மதுராந்தநாடாகவும் (கி.பி.985-கி.பி.12,5) கூறப்படுகிறது. பிற்கால பாண்டியர் ஆட்சியின் போது செங்குடி நாடாக அழைக்கப்பட்டது. (கி.பி.1266- 1345). நாயக்கர் ஆட்சியின் கீழ் சிறிது காலம் இருந்துள்ளது. எரிச்சநத்தம் - விருதுநகர் சாலை, மங்கம்மாள் சாலை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

கயிறு திரிக்கும் சலுப்பர்கள் இருந்தமையால் சலுப்பப்பட்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வடக்கே இருந்து வந்த வீரனோடு போரிட்டு அவன் விருதுகள் யாவும் இங்குள்ள வீரன் பெற்றமையால்,“ விருதுபட்டி” விருது-விருதுகள்பட்டி-சிறிய கிராமம் , விருதுபட்டி என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமங்கலம் ஸ்ரீ பெரியகாத்தவராயன் மற்றும் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கல்வெட்டில் விருதுவெற்றி என்றும் கூறப்படுகிறது. கந்தசாமி கவிராயர் தம் “தெப்பக்குளச்சிந்து” வில் “விருதூர்” மற்றும்“விருதையூர்” எனவும் குறிப்பிடலாம். விருதுகெட்டி, விருதுவெட்டி, பரிசுபட்டி, விருதை, விருதையம்பதி, வெயிலுவந்தாள் பட்டிணம் என்றும் கூறப்படுகிறது. 6-4-1923 முதல் “விருதுநகர்” என்று அழைக்கப்படுகிறது.
வணிகத்தில் விருதுநகர்
கல்லடைக்குறிச்சி கல்வெட்டின்படி சோழர், பாண்டியர் காலத்தில் நாடார்கள் உயர் பதவிகளை வகித்து பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தனர். நாயக்கர்களின் காலத்தில் நாடார்களின் பொருளாதாரம் மிகவும் பின்னடைவு அடைந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வியக்கத்தக்க வகையில் விருதுநகர் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது.

கி.பி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுக்காரச் செட்டியார் சமுகத்தினரும் நாடார் சமுகத்தினரும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.1825ஆம் ஆண்டு முதல் விருதுநகருக்கு எல்லாப் பொருட்களும் விளையும் இடங்களில் இருந்து கொணர்ந்து விற்பனை செய்யப்பட்டது.வணிகத்தில் போட்டி காரணமாக விருதுநகர் வணிகர்கள் பல ஊர்களில் தங்கள் நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யத்தொடங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துள்ளனர்.

காபி, ஏலக்காய் எஸ்டேட்களை ஏற்காடு, பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் நிறுவியுள்ளனர்.1940ஆம் ஆண்டு வரை விருதுநகர் தென் பிராந்தியங்களின் விளைபொருள்களுக்கு வணிக மையமாக இருந்தது.

“பஞ்சு” ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சு வணிகத்தில் விருதுநகர் சிறப்பான இடம் வகித்தது.150 ஆண்டுக்கு முன்னர் விருதுநகர் பாக்கு வணிகத்தின் பெரிய சந்தையாக இருந்தது. இலங்கையில் இருந்து பாக்கு கொள்முதல் செய்யப்பட்டது. புகையிலையும் இங்கிலாந்து, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

காபி வணிகத்தில் அகில இந்திய அளவில் விருதுநகர் சிறப்பிடம் வகிக்கிறது. சிக்கரி வணிகத்தில் விருதுநகர் வணிகர்கள் இந்தியா முழுவதற்குமான உரிமம் பெற்றுள்ளனர். ஏலக்காய் விருதுநகரில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மல்லி மற்றும் மிளகாய் வற்றல் வணிகத்திலும் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ளனர் விருதுநகர் மக்கள்.

முதலில் வணிகச்செட்டியார் சமுகத்தினரும் நாடார் பெருமக்களும் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டனர். இன்று மாநில அளவில் 75% எண்ணெய் விருதுநகரில் தயார் செய்யப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதியிலும் சிறப்பிடம் வகிக்கிறது. பருப்பு வணிகம் 1857ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.இங்கு தயாராகும் பருப்பு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.


விருதை வணிகத்தின் சிறப்பம்சங்கள்

1. M.S.P. குடும்பத்தினர் காப்பி ஏற்றுமதி செய்வதில் அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது.

2. சிக்கரி வணிகத்தில் P.M.A.NarayanaNadar குடும்பத்தினர் தென்னிந்தியாவில் முன்னனியில் உள்ளனர். 1975ஆம் ஆண்டு ஏற்றுமதியில் இந்திய அளவில் பெரும்பங்கு அம்பாள்காபி நிறுவனத்தினருடையதாகும்.

3. இந்திய அரசின் சிறந்த ஏலக்காய் ஏற்றுமதிக்கான விருதுனை ஒன்பது முறை பெற்றுள்ளனர் S.P.G. இராமசாமி நாடார் வணிக நிறுவனம்.

4. அகில பாரத அளவில் மிளகாய் வற்றல் ஏற்றுமதியில் முன்னனியில் இருந்து வருகின்றனர் V.P.S.A. நிறுவனமாகும். V.P.S.A.ஜெயகர் சைனாவில் மிளகாய் வற்றல் செய்யும் முதல் விருதுநகர்காரர்.

5. P.C. கண்ணன் & கோ நிறுவனம் மல்லி ஏற்றுமதியில் அகில இந்திய அளவில் முதன்மையான ஏற்றுமதியாளர் விருதினை பெற்றுள்ளனர்.

கல்வியும் விருதையும்


இந்தியாவில் ஆங்கிலக்கல்வி மற்றும் இனமொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் இலவசகல்வி அளித்த இரு பள்ளிகளில் ஒன்று 26.11.1889 ஆண்டு தொடங்கப்பட்ட “இந்து பிரைமரிப் பள்ளி” ஆகும். இப்பள்ளியே 1892ஆம் ஆண்டு உயர் தொடக்கப்பள்ளியாகி 1895ஆம் ஆண்டு “கூத்திரிய வித்யாசாலா”வாகி 1902ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகி 1978ஆம் ஆண்டு கூத்திரிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது. இது தற்பொழுது 125 வருட விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி வித்யாசாலா, சுப்பிரமணிய வித்யாசாலா, திருவள்ளுவர் வித்யாசாலா, காமராசர் வித்யாசாலா, பாலர் பள்ளி, பெரிய கருப்பநாடார் பள்ளி ஆகியவை இதன் கிளைகள்.
K.V.S. Matriculation Higher Secondary School 4.10.1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.



மகளிருக்காக 1910ஆம் ஆண்டு இந்து நாடார் பெண் பாடகசாலை துவக்கப்பட்டது. இப்பள்ளியே 1916ஆம் ஆண்டு கூத்திரிய பெண் பாடசாலையாகி, 1935ஆம் ஆண்டு கூத்திரிய மகளிர் உயர் தொடக்கப்பள்ளியாகி, 1943ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகி 1978ஆம் ஆண்டு கூத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது. மாங்காய்மச்சு, ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளிகள் ஆகியவைகள் இதன் கிளைகள்.

P.S.Chidhambara Nadar Senior English School (CBSE) 23.06.1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

விருதுநகர் இந்து நாடார்களால் செந்திக்குமார நாடார் கல்லூரி 1947ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி 23.06.1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ச. வெள்ளைச்சாமி நாடார் தொழில் நுட்பப்பயிலகக் கல்லூரி 1952ஆம் ஆண்டு காமராசர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி 3.08.1998ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.

A.P. சங்கரலிங்க நாடார் பெண் பாடகசாலை (30.10.1925). V.P. பெரியசாமி நாடார் உயர்நிலைப்பள்ளி (1953). வே.வ.வன்னியப்பெருமாள் தொடக்கப்பள்ளி(1960). இங்கு 1993 முதல் பார்வையற்ற சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சௌடாம்பிகை தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (1986). ஜோதி வித்யாலயம்(1967). V.M.G. ராஜசேகரன் ரமணி ஸ்ரீசாரதா சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி(1970). Virudhunagar Matriculation School (1991). Noble Matriculation School (2002).

T.E.L.C. நடுநிலைப்பள்ளி, ஏனாதி T.E.L.C. தொடக்கப்பள்ளி (1936). Roman Catholic Schools(1936).

Hajee சிக்கந்தர் ஹவ்வா பீவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, Hajee சிக்கந்தர் ஹவ்வா பீவி நடுநிலைப்பள்ளி, Hajee. P. செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி, இஸ்லாமிய சமுகத்தினரால் நடத்தப்படும். இப்பள்ளிகள் 1924ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அரசு பள்ளிகளான சி.ச.சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியனவும் சிறப்பாக இயங்குகின்றன. நகராட்சிப் பள்ளிகளும் உள்ளன.

“பிடி அரிசிதிட்டம்” (இந்து நாடார் பெண்கள் அரிசி எடுக்கும் போது ஒரு பிடி அரிசியை கலயங்களில் இடுவார். இவ் அரிசியை எல்லா வீட்டினின்றும் சேகரித்து விற்று கிடைக்கும் நிதி ,கோவில் நிதி. பல்வேறு மகமை தரப்பின் நிதி, நகரின் உள்ள பெரியோரின் நன்கொடை, என்று ஒரு சமுதாயமே தங்களுக்கு தேவையான கல்வியை, எல்லோருக்கும் கிடைத்திடவும் “இலாப நோக்கில் இல்லாமல்”, நடத்துவது விருதுநகர் இந்து நாடார்களின் தனிச் சிறப்பாகும்.

மாநில அளவில் கல்வியில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: