Friday 28 November 2014

பெருந்தலைவர் "நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை"

சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் சிங்கார நகரமாக்க வெளிநாட்டு பயணம் செல்ல பொழுதெல்லாம் ஒரு பயணப் பெட்டி தயாராய் வைத்திருப்பர் அரசியல்வாதிகள் இன்று. பிரதமர் ஆகி இன்னும் உள்நாட்டிலேயே சுற்றுப்பயணம் செய்ய நேரமில்லாமல் வெளிநாடு செல்லும் பிரதமர்களையும் பார்க்கின்றோம் நாம். பெண் ஜனாதிபதி ஒருவரோ பொழுதெல்லாம் வெளிநாட்டு பயணத்தில் இருந்துவிட்டு அவ்வப்பொழுது நம் நாட்டுக்கு வந்து சென்ற கூத்தையும் கண்டிருக்கிறோம் நாம். ஆனால் வெளிநாடு செல்ல மடியில் விழுந்த பழம் போல் வாய்ப்பு கிடைத்தும் பிழைக்கத் தெரியாத எங்கள் கல்விக் கண் திறந்த ஐயனை என்னவென்று சொல்வேன்!!


காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், மேல்நாடுகளைப் போல் குட்டி நகரங்களை (சாட்டிலைட் சிட்டி) அமைக்க, நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஒரு குழுவினர் வெளிநாடு சென்று, அங்குள்ள நகரமைப்பு முறைகளை பார்த்து வரலாம் என முடிவானது. இதற்கு துறை அமைச்சரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார்.
அடுத்ததாய், முதல்வர் காமராஜர் ஒப்புதல் கொடுத்தால், விமானப் பயணம் போக அதிகாரிகள் தயாராய் இருந்தனர்.




 இந்த நிலையில், ஒப்புதலுக்காக முதல்வர் காமராஜரிடம், கோப்பு சென்றது. அதைப் படித்துப் பார்த்தார் காமராஜர். "மக்கள் கொடுத்த வரிப் பணத்தில் இந்த உலகச் சுற்றுலா தேவை தானா' என்று அவருக்குள் கேள்வி எழுந்தது.இந்த சிந்தனையின் போது, அவரது மனதில் மதுரை நகரத்தின் வடிவமைப்பு தோன்றியது. மதுரையின் மையப் பகுதியில் மீனாட்சியம்மன் கோவில்; சுற்றிலும் தேரோடும் ரத வீதிகள்; அடுத்த சுற்றில் அளவெடுத்து வைத்தார் போல், நான்கு மாட வீதிகள்; அதற்கடுத்து வீதிகள்; இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள்.



"அந்தக் காலத்திலேயே, எவ்வளவு தொலைநோக்கோடு நம் முன்னோர் நகரை வடிவமைத்திருக்கின்றனர். இந்த அமைப்புக்கு மேல், நகரமைப்பு திட்டமிட என்ன இருக்கிறது' என்று நினைத்த காமராஜர், அதையே, கோப்பில் குறிப்பாக எழுதினார்."நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை. எக்காலத்திற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருக்கும், நம் மதுரை நகருக்குச் சென்று, ஆய்வு செய்து வாருங்கள்' என்று குறிப்பெழுதி, வெளிநாட்டு பயணத்துக்கு தடைபோட்டு, மக்கள் வரிப்பணத்தை காத்தார் காமராஜர்.

No comments: