Saturday 8 November 2014

சான்றோர் குல வரலாறு - வ.ஊ.சி தோற்ற உண்மை வரலாறு

வ.ஊ.சி தோற்ற உண்மை வரலாறு


அ.கணேசன் (தலைவர், சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகம், சென்னை) அவர்களின் கருத்துக்கள் இவை. இன்று தேசியம் பேசும் சான்றோர் குல இளைஞர்களும் இளைஞிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் இது:



9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நெல்லைச் சீமையிலும் மறவர் சீமையெனப்படும் இராமநாதபுரத்திலும் இருந்த பருத்தி ஜின்னிங் கிடங்குகள் அனைத்தும் நாடார் சமூகத்துக்குரியவை என்பதை ராபர்ட் ஹார்ட்கிரேவ் தமது Nadars of Tamilnadu என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1827ஆம் ஆண்டிலேயே ஆறுமுகநேரி ஆயிரம் நாடாக்கள், தட்சிண மாறநாடு சீர்மை நாடாக்கள் என்னும் பெயரில் வணிகப் பேட்டைகள் அமைத்து மதுரை நெல்பேட்டையில் ஒரு தலைமை இடமும் அமைத்துச் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதற்குச் செப் பேட்டு ஆதாரம் உண்டு. இச்செப்பேடு தற்போது திருநெல்வேலி தட்சிண மாற நாடார் சங்க அலுவலகத்தில் உள்ளது.
18-19ஆம் நூற்றாண்டுகளிலேயே தூத்துக்குடி முதன்மையான பருத்தி ஏற்றுமதிக் கேந்திரமாக விளங்கியது என்பதை பிஷப் ராபர்ட் கால்டுவெல் தம்முடைய History of Tinnevelly என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 1870ஆம் ஆண்டளவில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை அடுத்த உமரிக்காட்டைச் சேர்ந்த நாராயணன் நாடார் என்பவர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குக் கப்பல் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். சென்னைப் பட்டினத்தில் இருந்த லெவிச்சி துரை, பவிச்சி துரை முதலிய பரங்கித் துரைமார்கள் இவரிடமிருந்து சரக்குகளை விலை பேசி வாங்கினர் என்றும் சாதிலிங்கக் கட்டி, கட்டிப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், கௌரிப் பாஷாணம், பச்சைக் கர்ப்பூரம், பவளக் கர்ப்பூரம், ஈயச் செந்தூரம், இந்துப்பு, வெடியுப்பு, பொரிகாரம், நவச்சாரம், சீனக் காரம் முதலான பல சரக்குகள் விற்கப்பட்டன என்றும் ‘கப்பல் பாட்டு’ (பக். 61-75, உமரிமாநகர் தல வரலாறு, ஆசிரியர்: காசிப்பழம் என்கிற சின்னாடார், உமரிமாநகர் அஞ்சல், ஆத்தூர் வழி, தூத்துக்குடி மாவட்டம், 1987) என்ற ஒரு பழம் பாடல் தெரிவிக்கின்றது.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தென்னிந்தியப் பருத்தி இங்கிலாந்தின் லங்காஷயர், மான்செஸ்டர் போன்ற தொழில் நகரங்களில் ஜவுளி ஆலைகளுக்கு முதன்மையான கச்சாப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். எனவே, 1906இல் வ. உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தொடங்கியபோதும் 1908இல் கோரல் மில் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தியபோதும் அன்னியத் துணி பகிஷ்காரப் போராட்டத்தை வழிநடத்தியபோதும் அவருடைய தலைமையைத் தூத்துக்குடி நகரத்தின் முதன்மையான வணிகர்களாகவும் விளங்கிய நாடார் சமூகத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டுமின்றி, அவருடைய கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களாகவோ வேறு விதத்தில் தொழில் உறவு கொள்ளவோ நாடார் சமூகத்தவர்கள் விரும்பவில்லை.
இலங்கை போன்ற அண்டை நாடுகளின் சரக்கு ஏற்றுமதிக்காகக்கூட இப்பகுதி நாடார் சமூகத்தவர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் கப்பலை நாடவில்லை. வ.உ.சி. தம் குறிக்கோளில் தோல்வியடைவதற்கு நாடார்களின் இத்தகைய ஒத்துழைப்பின்மையே முதன்மையான காரணமென்ற வரலாற்று உண்மையைப் பரிசீலிக்க ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற ஆய்வாளர்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. ஏனென்றால், அவர்களுடைய மனவெளிப் பரப்பில் நாடார் சமூகத்திற்கு எந்த ஓர் இடமும் கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. எனவே அவர்களுடைய கண்ணோட்டத்தில் அமைந்த வரலாற்றிலும் நாடார் சமூகத்திற்கு எந்த இடமும் கிடையாதென்பது முடிந்த முடிபு.
1916ஆம் ஆண்டுக்குரிய இந்திய அரசின் கல்வெட்டு ஆய்வறிக்கை (Annual Report on Epigraphy) நூலின் முன்னுரையில் இந்திய அரசின் கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற கருத்தைப் பாருங்கள்: “நெல்லைச் சீமையில் இப்போதும் நிலவிவருகின்ற வேளாளர் - நாடார் பகைமையின் வேர்களைக் கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய ஊர்களில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 15 மற்றும் 17ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் காணலாம்.” இந்தியக் கல்வெட்டு ஆய்வாளர்களுக்குத் தெரிந்த இந்த எளிய உண்மையைக்கூட இத்தகைய வரலாற்றாய்வாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்டம் மிகுந்த தீவிரமடைந்த 1940ஆம் அளவிலும் அதற்குப் பின்னரும்கூடத் தென்மாவட்ட நாடார் சமூகத்தவரிடம் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோரின் தலைமைப் பண்புகளும் பாரதியாரின் பாடல்களும் தாக்கம் விளைவித்திருந்தனவே தவிர, வ.உ.சி.யின் போராட்ட வரலாறு எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
வ.உ.சி. இணையற்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்ற உண்மையை எப்படி மறுக்க முடியாதோ அது போன்றே சைவ வேளாளர், பிராமணர் அல்லாத - அந்தக் காலகட்டத்தில் இடைத்தட்டுச் சாதிகளாகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் இவர்களால் கருதப்பட்ட - பிற சாதியினர் சமைத்த உணவைக்கூட அருந்துவதற்கு ஆயத்தமாக இல்லாத மனநிலை உடையவர் என்ற உண்மையையும் யாரும் மறுத்துவிட முடியாது. கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேசனாகிய ஜார்ஜ் பஞ்சமன் என்று தன்னுடைய கடிதத்தில் எழுதும்போது, வாஞ்சி அய்யர் என்ன மனநிலையில் பஞ்சமன் என்னும் சொல்லைப் பயன்படுத்தினாரோ அந்த மனநிலைக்குச் சற்றும் வேறுபாடில்லாத மனநிலை உடையவர்தாம் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களும். (ஜாதி என்னடா? என்றேன். ‘முதலி’ என்றான். ‘என்னடா முதலி நீ?’ என்றேன், விழித்தான். ‘பார்ப்பான் அல்லது பாண்டி வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால் உண்பேன் என்று ஜெயிலர்பால் இயம்பெனச் சொன்னேன்’. - சுயசரிதை பக். 134.)

1 comment:

திரு...... said...

வ.உ.சி யின் அந்த பிற்போக்கு மனவோட்டம் பின்னாளில் பொதுவுடைமை தலைவர் சிங்காரவேலரால் சிதைந்தது. அவரே பெரியாருடன் வ.உ.சி பழகி இருவருக்குமிடையே மாற்றம் கொண்டு வரக் காரணமாயிருந்தார்.