Saturday 29 November 2014

பெருந்தலைவர்-பள்ளிக்கூடம் திறந்தால் போதாது, பள்ளிக்கூடத்திற்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கூடம் திறந்தால் போதாது, பள்ளிக்கூடத்திற்கு நிலையான சொத்துக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதுதான் பள்ளிக்கூடம் தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்பட வழிவகுக்கும் என்பதை காமராஜர் உணர்ந்தார். இதனால் காமராஜர், சமுதாய பங்கேற்பை ஊக்குவிக்கும் மாநாடுகளை தமிழ்நாடு எங்கும் நடைபெற்றிட ஆணையிட்டார். அதன்பேரில் பள்ளிக்கூடங்களின் அடிப்படைத் தேவைகள் எவையென்று பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர் தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு பட்டியல், உயர்நிலைப் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு பட்டியல் என்று மூன்று பட்டியல்கள் உருவாயின. 

தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கு, என்னென்ன வசதிகள் இல்லை என்பது கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தேவைப்படும் வசதிகளை அளிக்குமாறு கிராம மக்கள் கேட்டுக் கொண்டார்கள். கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள் முதலியவற்றை கிராம மக்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு அளித்தார்கள். பல இடங்களில் பள்ளிக்கூடக் கட்டிடங்களை விரிவுபடுத்திப் புதியதாக அறைகளை அமைக்கவும் மக்கள் தயாராக முன்வந்தனர். இந்த அனுபவத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான மக்கள் இயக்கமாக ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. 


பள்ளிக்கூட வளர்ச்சி மாநாடு
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கூட்டம் நடத்தப்பட்ட போது, யாராவது ஒரு கிராமப் பிரமுகர் கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மாவட்ட அளவில் பள்ளிக்கூட வளர்ச்சி மாநாடுகள் நடத்தப்பெற்றன. அவற்றில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான பொருள்கள் முதலியவற்றை நன்கொடையாக அளித்தார்கள். பள்ளிக்கூடக் கட்டிடங்களுக்கு புதியதாக வெள்ளையடிக்கவும், கட்டிடங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளவும் சிலர் முன்வந்தார்கள். இந்த இயக்கம் தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்கு மட்டுமின்றி, உயர்நிலைப் பள்ளிக்கூடங்களுக்காகவும் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள நன்கொடைகள் இந்த இயக்கத்தின் மூலம் குவிந்தன. பள்ளி மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது சாத்தியமாயிற்று.'' 28.07.1958 அன்று திசையன்விளை மாநாட்டில் முதல் அமைச்சர் கலந்து கொண்டார். 



பிரதமர் வியந்த திட்டங்கள்


இந்த மாநாட்டில் 102 பள்ளிகள் பங்கேற்றன. மாநாட்டில் முன் வைக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூபாய் 1,38,000 ஆகும். மாநாடு மூலம் பெறப்பட்ட பொருட்கள் நிதிகளின் மொத்த மதிப்பு ரூபாய் 1,36,000 ஆகும். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் காமராஜர் கூறினார். `இவற்றையெல்லாம் மக்கள் வெற்றிகரமாக நடத்துவதற்கு காரணமென்ன? இது பொது மக்கள் சக்திக்கு உட்பட்டது. இவை, அவர்களுக்கு சுமை அல்ல!'' இத்தகைய ஒரு மாநாடு 22.11.1958 அன்று செங்கல்பட்டு நகரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய கல்வி அமைச்சர் திரு.கே.சி.பந்த் கலந்து கொண்டார். 826 பள்ளிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் ரூபாய் 23 லட்சத்துக்கு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அம்மாநாட்டில் திரு.கே.சி.பந்த் உரையாற்றும் போது, ``பிற மாநிலங்களில் முளைக்காத, நல்ல மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மாகாணத்தில் மட்டும் பயிராவது வியப்பானது என்று கூறினார். கூறியது மட்டுமல்ல, டெல்லி சென்றவுடன், பிரதமர் நேருவிடம் இம்மாநாடுகளைப் பற்றி வியந்து கூறியுள்ளார். அதன் பயனாக, 15.01.1959 அன்று காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆ.தெக்கூரில் நடைபெற்ற பள்ளி சீரமைப்பு மாநாட்டில் பிரதமர் நேரு கலந்து கொண்டார். 

கல்விக் கண் திறந்தவர்

அடுத்த நாள் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் பங்கேற்ற அடைக்கலாம்புர மாநாட்டிலும் பிரதமர் நேரு கலந்து கொண்டார். பிரதமர் நேரு, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் இரண்டில் கலந்து கொண்டது இத்தகைய மாநாடுகள் மீது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தது. 

இதனைத் தொடர்ந்து, கல்வி மேம்பாட்டு திட்டங்களில் தமிழகத்தின் வழியில் செயல்படுமாறு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் பிரதமர் நேரு கடிதம் எழுதினார். மொத்தமாக 167 பள்ளி சீரமைப்பு மாநாடுகள் 1963ஆம் ஆண்டு வரை நடைபெற்றன. இந்த மாநாடுகள் மூலமாக 7 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. 


பெரியார் ஆதரித்தது காமராஜர் ஆட்சியை மட்டுமே.


இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராஜரை விட்டுவிடாமல் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். 
காமராஜரை நாம் பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே, சிக்காது'' (18-7-1961 தேவகோட்டையில் பெரியார் பேச்சு) பின்னாலே ஆட்சி பீடத்தைக் கைப்பற்றிய அண்ணாதுரை படியேறி வந்தபோது பெரியார் பண்பின் காரணமாக வாழ்த்துக் கூறி அனுப்பினாரே தவிர ஆதரிக்கவில்லை. 

No comments: