Saturday 1 November 2014

குமரி விடுதலைப் போராட்டம்

குமரி விடுதலைப் போராட்டம்




இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம்குழித்துறை நீரூற்றுத் திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார்.

 தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இனைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை நாடார் மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. குமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த மாவட்டம் உருவானதன் நோக்கம் என்ன என்பதை அனேகமாக அனைவரும் மறந்து விட்டனர்.  குறிப்பிட்டுக் கூறுவதென்றால், நாடார் சமுதாயமே இந்த வரலாறை மறந்து விட்டது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. 

இம்மாவட்டம் 01.11.1956 அன்று உருவாயிற்று என்றாலும் நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து மகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். தங்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால் பொறாமை கொண்ட உயர் சாதியினர் அவர்கள் மீது பல் வேறு அடக்குமுறைகளை ஏவினர். நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் செல்லையன் நாடாரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையில் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணுபிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்து பேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார்.எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள்.இதனால் இவரை குமரி மாவட்ட மக்கள் பாசத்தோடு குமரி மாவட்டத்தின் தந்தை என்று அழைக்கின்றனர்.

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு ஸ்தூபி புதுக்கடையில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.  8 செப்டம்பர் 1947-ல் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி.த.நா.கா.) என்ற அரசியல் கட்சி தமிழர்களின் நலன் காக்க, குமரித்தந்தை மார்ஷல் A. நேசமணி அவர்கள் தலைமையில் உருவெடுத்தது. தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தமிழர்களைக் கொண்ட ஒரு தனி நிர்வாகம் வேண்டும் என்பதே அந்த அரசியல் கட்சியின் கொள்கையாய் இருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்த போது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது. இந்நிலையில் 1954ம் ஆண்டு உச்சகட்ட போராட்டம் நடந்தது.

இதனையடுத்து தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடையில் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இச்சம்பவத்தில் அருளப்பநாடார், முத்துசுவாமி, செல்லப்பாபிள்ளை, பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர். போராட்டம் ஓயவில்லை என்பதை உணர்ந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாக்களை 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. அன்று தமிழக முதல்வராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவிலில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் இதற்கான விழா நடந்தது.  இணைப்பு நாளன்று (01.11.1956) தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், நாகர்கோவில் S.L.B  கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்ப்பு விழாவில் இவ்வாறு ஏற்புரையாற்றினார்்-


“நீங்கள் கேரளத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள்.  ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும்.  அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது.  செய்யவும் மாட்டோம்.  பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள்.  நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடனே சேருவதற்கு நான் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

சாம் டானியேல், மார்ஷல் நேசமணி, குஞ்சன்நாடார், சிதம்பரநாதன், ரசாக், நூர்முகமது, சைமன், காந்திராமன், மணி, தாணுலிங்கநாடார், பொன்னப்பநாடார், வில்லியம், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்வாறு போராட்ட களங்கள் பல கண்டு, பலரை தியாகம் செய்து தாய் தமிழகத்துடன் இணைந்தது குமரி மாவட்டம்.இன்று எங்கள் கன்னியாக்குமரி மாவட்டம் மலையாளி ஆளுகையில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு தாய் தமிழகத்தோடு இணைத்தது.

தகவல் ஆதாரம்: முனைவர் பீட்டர் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை
முனைவர் பீட்டர்
தலைவர் கன்னியாகுமரி வளர்ச்சி கல்வித் துறை நிறுவனம்

No comments: