Saturday 8 November 2014

சான்றோர் குல வரலாறு - தூக்குமேடை’ ராஜகோபால்

சான்றோர் குல வரலாறு - தூக்குமேடை’ ராஜகோபால்

தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரும் ஆஷ்தான் என்பது போல் பலர் வரலாறு புனைகிறார்கள். வரலாற்று பதிவுகள் அனைத்திலுமே சான்றோர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்கிறார் அ.கணேசன் (தலைவர் சான்றோர் குல பண்பாட்டு கழகம், சென்னை). அவர் இது குறித்து மேலும் கூறுவது பதிவாக:

 நெல்லைச் சீமையில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்) 1942 செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் குலசேகரபட்டினம் உப்பளத்தில் பி. எஸ். ராஜகோபால நாடார் தலைமையில் நுழைந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்தது. அங்குப் பணியிலிருந்த காவலர்களைக் கட்டிப்போட்டதோடு அவர்களிடமிருந்த துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது.
டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரி உப்பளத்துக்கு அருகிலேயே வசித்து வந்தான். சத்தம் கேட்டு விழிப்படைந்த அவன் இந்த விடுதலைப் போராட்ட வீரர்களை வழிமறித்தான். குண்டுகள் இல்லாத காரணத்தால் தம் துப்பாக்கியின் பெய்னெட் பகுதியைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினான். கூடியிருந்த விடுதலை வீரர்கள் தம் கையிலிருந்த ஆயுதங்களால் சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் லோன் துரையை வீழ்த்தினர்.
இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடியில் (Thoothukudi District Gazetteer, Vol-1, 2007, Tamil Nadu Archives, Chennai-8) குறிப்பிடப்பட்டுள்ளது. குலசேகரபட்டினத்திலுள்ள லோன்துரையின் சமாதியின் படமும் இத்தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கு விசாரணை 1943 பிப்ரவரியில் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் எதிரியான ராஜகோபால நாடாருக்கும், இரண்டாம் எதிரி காசிராஜன் நாடாருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1943 ஏப்ரல் 30 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மூன்றாம் எதிரியான பரதவர் சமூகத்தைச் சேர்ந்தவரான ஏ. எஸ். பெஞ்சமினுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும், அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை ஒத்த ஃபெடரல் நீதிமன்றமும் இத்தண்டனையை உறுதிசெய்தது.
காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ஆர். வெங்கட்ராமன், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லண்டனில் இருந்த ப்ரைவி கவுன்ஸிலில் ஆஜராகி இவர்கள் சார்பில் வாதாட மனுசெய்தனர். தேவைப்படுமானால் ராஜாஜியும் லண்டன் சென்று இவர்கள் சார்பில் வாதாடத் தயாராக இருந்தார். இவ்வழக்கில் வாதாடுவதற்காக ராஜாஜி லண்டன் வருவதை விரும்பாத பிரிட்டிஷ் அரசு, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி இந்தியாவின் கவர்னர் ஜெனரலை அறிவுறுத்தியது. அதன்படி, 1945 ஏப்ரல் 23 அன்று கவர்னர் ஜெனரல் தண்டனைக் குறைப்பு ஆணையை வெளியிட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர், இந்தியா விடுதலை பெற்றதை முன்னிட்டு இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராஜகோபால நாடார், ‘
தூக்குமேடை’ ராஜகோபால் என்று குறிப்பிடப்படலானார். இச்சம்பவத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில், 1997ஆம் ஆண்டில் குலசேகரபட்டினத்தில் நினைவுத் தூண் ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதேபோல நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்ட வரலாறாகட்டும், பண்பாட்டுப் பொருளியல் சமூக வரலாறாகட்டும், நாடார் எனப்படும் சான்றோர் சமூகத்தவரின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வதே வரலாற்று ஆய்வாளர்களின் பணியாக இருந்து வருகிறது. இவர்களைப் போன்றவர்கள் கருத்தில் நாடார் என்ற சமூகமே இப்பகுதியில் இருந்ததில்லை போலும்.

No comments: