Wednesday 31 December 2014

முல்லை பெரியாறின் வரலாறும் வடுகரும்

முல்லை பெரியாறு அணையின் அவசியத்தையும், அதன் வரலாற்றையும் ஒவ்வொரு தமிழரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்நாட்டு விவசாயிகளின் பால் அயல்நாட்டினருக்கு இருந்த பச்சாதாபம் கூட நம் மக்களுக்கு இல்லை என்பதே நித்ர்சனம். வீணாய் போகும் நீரை கடலில் கலக்க விட்டாலும் விடுவோம் தமிழனுக்கு தரமாட்டோம் என்பதே அவர்கள் நிலைப்பாடு அன்றும் இன்றும் என்றும்! தமிழர்களுக்கு வடுகர்கள் என்றுமே நன்மை செய்ததில்லை செய்யப் போவதுமில்லை என்பதும் உண்மை! உண்மை நிலவரம் படியுங்கள் லிங்கா ரசிகர்களே....

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது வறட்சியின் காரணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி கடுமையான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஆண்டுதோறும் வரும் தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு, மலையிலேயே பெய்துவிடுகின்றது. மலையின் மறைவு பிரதேசமான தமிழகத்தில் மழை பெய்வதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது. அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நதியாக உருவாகி, அரபிக் கடலில் கலந்துவிடுகிறது. மேற்கு நோக்கி பாய்ந்து, நீரை கடலில் கலந்து வீணாகும் பெரியாறு நதியை அணையிட்டு தடுத்து நிலத்தடி குழாய்கள் வழியாக கிழக்கு நோக்கி பாய வைக்க திட்டமிடப்பட்டது. இப்படி கடலில் கலக்கும் பெரியாறு நதியை கிழக்கு முகமாக திருப்பி, வைகையுடன் இணைக்கும் எண்ணம் முதன்முதலில் அப்போதைய மதுரை கலெக்டருக்குத்தான் உதித்தது. வீணாக கடலில் சேரும் பெரியாறு நதியை வைகையுடன் இணைத்தால், வறட்சியான மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன வசதியை மேம்படுத்தலாம் என்ற செய்தியை அன்றைய சென்னை மாகாணத்திற்கு தெரியப்படுத்தினார்.

முல்லை பெரியாறு கட்டப்பட்டபோது 1895 டிசம்பர் 7

பெரியாறுத் திட்டத்திற்கான துவக்கம் உருவானது. அப்போதைய முதன்மை பொறியாளராக இருந்த கேப்டன் ஜே.எல்.கால்டுவேலிடம் இத்திட்டத்தைப் பற்றி கேட்கப்பட்டது. பெரியாறுத் திட்டத்தை பற்றி ஆராய்ந்த கால்டுவேல், "இதற்கு 100 அடி ஆழம் கொண்ட சுரங்கம் அமைக்க வேண்டும் எனவும், இத்திட்டம் ஆதாரமற்று உள்ளதாகவும்' தெரிவித்தார்.
பின்பு 1867-இல் பொறியாளர் மேஜர் ஆர்.பி. ரைவ்ஸ் பெரியாறு அணைத் திட்டம் பற்றிய அறிக்கையை ஆங்கில நிர்வாகத்திடம் சமர்பித்தார். இதையடுத்து அணை கட்ட ஆகும் செலவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் பற்றி கூறினார். அடுத்து 1872-இல் ஆர்.இ.ஸ்மித் இத்திட்டத்திற் கான அறிக்கையை சமர்பித்தார். அதிலும் திருப்தி ஏற்படாமல் 1876-ஆம் ஆண்டு ஸ்மித் மற்றும் கேப்டன் பென்னிகுயிக் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை அளித்தனர். அப்போது தான் முதன் முதலாக மண்ணால் பிணைக்கப்பட்ட அணை கட்டுமானத்திற்கான முறையான திட்டமும், செலவு மதிப்பீடும் கொண்ட அறிக்கை தயாரானது. இருந்தபோதிலும் 1882 வரை கட்டுமானம் துவக்கப்படவில்லை. அதற்கு காரணம் திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாள் ராமவர்மா.
திருவிதாங்கூர் என்பது தற்போதைய கேரள மாநிலத்தில் தென் பகுதிகளையும், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம். திருவனந்தபுரம் இதன் தலைநகரம். ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் ஆங்கிலேயரின் விசுவாசிகள். தமிழ் மக்களுக்கு பல துன்பங்களை கொடுத்து, தமிழினத்தின் பொருளாதாரத்தை சுரண்டியவர்கள். இதற்கு பத்மநாபசாமி கோயில் பொக்கிஷங்களே சாட்சி. இவர்களது ஆட்சி முழுவதும் மனுஸ்மிருதி கொள்கையை அடிப்படையாக கொண்டும், பார்ப்பனியர்களின் அமைச்சரவையோடும் நடைபெற்றது.

முல்லை பெரியாறு கட்டப்பட்டபோது 1895 டிசம்பர் 7

இவர்களது ஆட்சி காலத்தில் சாதியக் கொடுமைகள் ஏராளம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், தோள்சீலைப் போராட்டம். தமிழினத்தின் 18 சாதியை சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக் கூடாதன சட்டம் இருந்தது. இந்த கொடுமையான சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து தமிழின மக்களும் அன்றைய கிருத்துவ பாதிரியார்களும் போராடினர். அதன்பிறகே பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று கொடுமைகளைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதியுள்ள நூல்கள் மற்றும் அவர்கள் எடுத்த புகைப்படங்களே ஆதாரம். நாகரீகம் கருதி அப்புகைப் படங்களை வெளியிட இயலவில்லை.
இப்படி தமிழின விரோதியான திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆங்கிலேயரின் பெரியாறு அணைத் திட்டத்தை அவர்களது ஆட்சி பகுதியில் உருவாவதை அனுமதிக்கவில்லை. ஆங்கில அதிகாரிகள் பெரியாறுத் திட்டத்தினை பற்றிய பல ஆலோசனைக் கூட்டம் நடத்தியும் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரும் அவர்களது அமைச்சர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னர்தான் ஆங்கிலேயர் தனது மிரட்டல் பாணியை கையிலெடுத்தனர். இதற்காக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும் அதன் மூலம் ஆங்கில அரசு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் எனவும் கூறப்பட்டது. மீறினால் சென்னை மாகாண அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்குமென கூறப்பட்டது. அதனால் ஆங்கிலேயருடன் பகைத்து கொள்ள விரும்பாத திருவிதாங்கூர் மகாராஜா அணைத் திட்டத்திற்கு சம்மதித்தார்.
முல்லைப் பெரியாறு நதிநீர் ஒப்பந்தம் 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாள் ராமவர்மாவுக்கும் மெட்ராஸ் மாகாண பிரிட்டிஷ் செயலாளருக்குமிடையே கையெழுத் தானது. பெரியாறு நீரை வறண்ட தென் தமிழக பகுதிகளுக்கு உபயோகப்படுத்த ஏற்பட்ட இவ்வொப்பந்தம் 999 வருட ஒப்பந்தமாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானான வி.ராம அய்யங்காரும் மெட்ராஸ் மாகாண அப்போதைய செயலாளர் ஜே.சி. ஹானிங்டனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் மூலம் புதிய அணையை கட்டி பெரியாறு நீரை தேக்கி வைக்கவும், அணையிலிருந்து பாசன வசதிக் காக கொண்டுச் செல்லவும் முழு அதிகாரம் மற்றும் உரிமம் மெட்ராஸ் மாகாண செயலருக்கு வந்தடைந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் நீரை தேக்குவதற்கு 8000 ஏக்கர் நிலத்தையும் அணை கட்டிக் கொள்ள 100 ஏக்கர் நிலத்தை யும்; வழிவகை செய்தது. இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் வரும் அனைத்து நீர்நிலைகளுக்குமாக ரூ.40,000 வாடகையாக கொடுப்பது என நிர்ணயிக்கப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் பென்னிகுயிக் மீண்டும் தனது அறிக்கை மற்றும் மதிப்பீட்டை புதுப்பித்தார். அப்போதைய திட்ட மதிப்பீடு 641/2 இலட்ச ரூபாய். ஆனால் அணை கட்டிமுடிக்கப் படும்போது 87 இலட்சம் ரூபாய் செலவானது குறிப்பிடத் தக்கது.
1884-ஆம் ஆண்டு ஆங்கில அரசு திட்டத்திற்கு அனுமதி அளித்தது. 1888-இல் அணையின் கட்டுமானம் துவக்கப்பட்டது. அணை கட்டப்படும் இடம் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த மலை மற்றும் வனம். போக்குவரத்துவசதி துளியும் கிடையாது. கட்டுமானப் பொருட்களை பெரியாறு நதிக்கரைக்கு கொண்டுவர எவ்வித சாலைவசதியும் இல்லை. 100 கிலோ மீட்டருக்கு அப்பால் ரயில்வே பாதை இருந்ததால் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வருவது பெரும் பிரச்சனை. இரண்டாவது பெரிய சவால் பருவநிலை. சுகாதாரமற்ற சூழலில் தங்கி வேலைசெய்ய மிக கடினம். அடுத்து பெரும் சவாலானது மலேரியா. பணியாளர்களுக்கு பரவிய மலேரியா காய்ச்சலால் 483 தமிழர்கள் இறந்து போனார்கள். அவர்களது உடல்கள் அங்கேயே புதைக்கப் பட்டது. (ஆதாரம்: (ARôWm: The Military Engineer in India, Vol III. Chatham: The Institution of Royal Engineers/ Page 28-29) அணை கட்டுமான பணியை கவனிக்க மெட்ராஸ் பட்டாலியன் 1 மற்றும் 4 பிரிவு பட்டாலியன்கள் பயன் படுத்தப்பட்டனர்.
அணையின் அடிப்பகுதியை கட்டுவதற்கு வசதியாக தடுப்பணைகள் போர்ச்சுகீசிய கைவினைஞர்களை கொண்டு கட்டப்பட்டது. மழைக் காலங்களில் வரும் ஆற்று வெள்ளத்தை வழிந்தோட செய்தனர். அணைக் கட்டுமானப் பணிகளுக்கு இடையே அடிக்கடி தடுப்பணைகள் உடைந்து போனதால் இடையில் கட்டுமான பணி நிறுத்தப் பட்டது. மெட்ராஸ் மாகாண செயலர் பென்னிகுயிக்கை கடிந்து கொண்டார். காரணம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மதிப்பீட்டின் அளவைவிட செலவு அதிகமானது. மீண்டும் இங்கிலாந்தின் ஒப்புதல் பெற காலதாமதம் ஆனது. அணை கட்டுமான பணி இடையில் நிற்க கூடாதெனவும் தனது இலட்சியமான பெரியாறு அணையை கட்டியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தினால் பென்னிகுயிக் இங்கிலாந்தில் உள்ள தனது சொத்து, தன் மனைவியின் நகைகளை விற்றும் அணையை வெற்றிகரமாக (1888-97)கட்டி முடித்தார். பென்னிகுயிக் என்ற சிறந்த மனிதர் மட்டும் இல்லாமல் இருந்தால் பெரியாறு அணை கட்டப்பட்டிருக்காது. இதற்காகவே பென்னிகுயிக் தியாகத்தை மதிக்கும் விதமாக தமிழக அரசு அவரது உருவசிலையை நிறுவியுள்ளது. மேலும் அவரது பேரனை அழைத்துவந்து மதுரையில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது
முல்லை பெரியாறு அணையின் கட்டுமானம்
முல்லை பெரியாறு அணை ஒரு புவிஈர்ப்பு அணை (Gravity Dam). அதாவது தன்னுடைய முழு எடை மூலம் அனைத்து விசைகளையும் (நீரின்) தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டது. அணையின் மொத்த எடை புவியின் மீது அமர்ந்திருப்பதால் நீரின் அழுத்தம், அலை களால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வினால் ஏற்படும் விசை போன்றவற்றை தன்னுடைய சுய பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது. அணையானது சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும். சுர்க்கி (Surkhi) கலவை என்பது, தமிழகத்தில் காரை என அழைக்கப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது கால்சியம் ஆக்சைடாகும். இதனுடன் நீர் சேர்க்கும் போது நீருடன் வினைபட்டு கால்சியம் ஹைட்ராக்ஸைடை கொடுக்கும் வினை வெப்ப உமிழ்பினையாகும். இவ்வாறு கால்சியம் ஆக்சைடுடன் நீர் மற்றும் சர்க்கரை, மணல் ஆகியவற்றை சேர்த்து பெரிய ஆட்டுக்கல்லில் (உரல்) அரைக்கும் போது, சுண்ணாம்பிலிருந்து வெளியிடப்படும் வெப்பத்தினால் சர்க்கரை உருகி, செங்கல் பொடியுடன் இணைந்து ஒரு உறுதியான பிணைப்பை ஏற்படுத்த வல்லது. இது 19-ஆம் நூற்றாண்டின் கட்டுமான தொழில்நுட்பம் ஆகும். மேலும் சிமெண்ட் தயாரிப்பில் கால்சியம் ஆக்ஸைடு ஒரு முக்கிய பகுதிப் பொருள். எனவே அன்றைய ஆங்கில பொறியாளர்கள் சிறந்த கட்டுமானத்துடன் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தனர்

முகநூலில் பதிந்தவர்:

தமிழன் இராஜா முத்து

No comments: