Monday 4 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 2)



கலப்பைகளுக்கு பேர் போன இன்னொரு ஊரும் உண்டு! அது மேலூர். ஆம், மதுரைக்கு அருகில் இருக்கும் மேலூரே. அதை நாம் பின்னொரு பதிவில் பார்ப்போம்! நாம் இப்போது பார்க்கப் போவது நம் பாடலில் வரும் மாயவரம் ஏர்!
பெரும்பாலான ஊர்களில் வயல் காடுகள் மணல் பூமி ஆகவும், மணலும் களிமண்ணும் கலந்த பூமியாகவுமே இருக்கும். அதிலெல்லாம் உழுவது மிகவும் சுலபமாக இருக்கும். சாதாரணமாக எல்லா ஊர்களிலும் இரும்பு கலப்பைகள் இருந்தாலே போதும். அதாவது மொத்தமும் இரும்பாலேயே செய்யப் பட்ட கலப்பைகள். ஆனால், மாயவரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில பெரும்பாலும் களிமண்ணாத்தான் நிலம் இருக்கும். அந்தச் சேற்றில் உழவு செய்வதற்க்கு கூர்மையான கலப்பைகள் தேவை. சேறு முழங்கால் அளவுக்கு ஆழமாக இருக்குமென்பதால், கலப்பைகள் மிகவும் கனமாவும் இருக்கக்கூடாது. அவ்வாறு கனமாக இருந்தால் மாடும் இழுக்காது, விவசாயினாலும் அதை ஓட்டமுடியாது.
இதையெல்லாம் கவனத்தில கொண்டு தான் மாயவரம் ஏர் கலப்பைகளை தயாரிக்கப் பட்டிருக்கின்றன முன்பு. மாயவரம் கலப்பைகளை கொண்டு காலையில இருந்து மாலை வரையில் கூட அசராமல் ஏர் ஓட்டலாமாம். அந்த அளவுக்கு அவை இலகுவாக இருக்குமாம். இப்படி ஆழ உழவு செய்யவும், அதிக நேரம் வேலை செய்யவும் மணப்பாறை மாடுகள்தான் லாயக்கு.அதனால் தான் கவிஞர் மருதகாசி அவர்கள் மணப்பாறை மாடுகளை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஏர் கலப்பைகள் பெரும்பாலும் ‘நாட்டு கருவை’ (குறிப்பு: வேலி கருவை என்கிற சீமை கருவை கிடையாது) என்று சொல்லப்படும் கருவேலமரத்தில்தான் செய்யப்படுகிறது. அந்த மரம் ரொம்பவே உறுதியானது. ஏரின் முனையில் மட்டும் இரும்பாலான கொழு இருக்கும். எவ்வளவு நேரம் உழுதாலும் ஊறிப்போகாது. இதே மரத்தில் மண்வெட்டிக்கான பிடிகளையும் செய்வார்கள். இந்த மரங்கள் டெல்டா பகுதி முழுவதும் தோட்டம்-துரவு, காடு கரை என எல்லா இடங்களிலும் வளர்ந்து கிடப்பதை இப்போதும் பார்க்கலாம். அதிலிருந்து மரத்தை வெட்டி தச்சுக்கூடங்களில் கொடுத்து கலப்பைகள் செய்து கொள்வார்கள் உழவர்கள். இப்போது, டிராக்டர் வந்துவிட்டதால் மரத்தாலான ஏருக்கு மவுசு குறைந்துவிட்டது. என்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் ஏர் பூட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
மயிலாடுதுறையை சுற்றியுள்ள நாஞ்சில்நாடு, வழுவூர், கொல்லுமாங்குடி, விசலூர், புலியூர், பேரளம் என்று பல ஊர்களில் இந்தக் கலப்பைகளைச் செய்யும் வண்டிப்பட்டறைகள் இருக் கின்றன. ஆனால், கலப்பைகள் குறைந்த அளவே செய்யப்படுவதால், அந்தப் பட்டறைகள் தற்போது கட்டை வண்டி, டயர் வண்டி ஆகியவற்றை செய்து கொண்டிருக்கின்றன.
சோகம்!!

No comments: