Tuesday 5 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 3)


அடுத்த வரி....

ஆத்தூரு கிச்சடி சம்பா பார்த்து வாங்கி விதை விதைச்சு...... 

ஆத்தூர் கிச்சடி சம்பாவை போலவே புகழ் பெற்ற மற்றொரு ரகம் நாம் அனைவரும் அறிந்ததாய் இருக்கும் என நம்புகிறேன். கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி என்று மாநிலத்தின் பேரை குறிப்பிடுவது போல் நம் தமிழக பொன்னியை நாம் குறிப்பிடுவது இல்லை! ஊர் பேரை சொல்லியே குறிப்பிடுகிறோம்! ஆம், #மண்ணச்சநல்லூர்_பொன்னிதான் அது! மண்ணச்சநல்லூர் என்பது திருச்சி அருகில் உள்ள சிற்றூர். ஆனால் இதுவும் கர்நாடகா பொன்னி ரகங்களால் தொலைந்து போய் கொண்டிருக்கிறது என்பது முதல் சோகம். இரண்டாவது சோகம் ஆத்தூரின் கிச்சடி சம்பா இப்போது முற்றிலும் ஆத்தூரை விட்டு துடைத்தெடுக்கப்பட்டு விட்டது என்பது!!

சேலத்திலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் சேலத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருக்கிறது #ஆத்தூர். அப்போதும் ஆத்தூர் விவசாயத்திலி இருந்து, விதை நெல், விதை நிறுவனங்கள் என பிரபலமாவே இருக்கிறது. சேலத்தின் பிரபலமான வசிஷ்ட நதிதான் இந்த கிச்சடி சம்பாவின் ருசிக்கு காரணம் என்கின்றனர். ஆனால் இப்போது ஆத்தூரில் கிச்சடி சம்பாவும் விளைவதில்லை, #வசிஷ்ட_நதி ஓடுவதும் இல்லை!! அன்று சேலம், தர்மபுரி, நாமக்கல் என ஒருங்கிணைந்திருந்த சேலம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக் விளங்கியிருக்கிறது ஆத்தூர். சுத்தமான வசிஷ்ட ஆற்று நீர், இயற்கை உரங்களை வைத்து அன்று கிச்சடி சம்பாவை சாகுபடி செய்திருக்கிறார்கள். இந்த கிச்சடி சம்பா ரகம் மிகவும் சன்ன ரகமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்குமாம். இந்த கிச்சடி சம்பா ரக்ம் இப்போது ஆத்தூரில் சுத்தமாக இல்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.

இவை தற்பொழுது மாயவரம் ( அதாங்க நம் ஏர் புகழ் மாயவரம் தான்!) மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மண்ணின் பாரமரிய நெல் வகைகள் தொலைந்து விடக் கூடாது என்ற இயற்கை ஆர்வம் மிக்க தன்னார்வலர்களால் மட்டுமே சாகுபடி செய்யப் படுகிறது.

இந்த கிச்சடி சம்பாவின் குணம் நம் மண்ணுக்கும் நம் சீதோசனத்திற்க்கு மிகவும் இணைந்து வளரக் கூடியது. ஆம் இவை வெள்ளம் வந்தாலும் சரி, கடும் வறட்சி என்றாலும் சரி மீறி வளரக் கூடியவை. வயலில் எவ்வளவு தண்ணீர் நின்றாலும் இவை அழுகாது, ஒரு மாதத்திற்கு காய்ந்தாலும் நிற்கக் கூடியவை! ஏக்கருக்கு 1.250 டண் முதல் 1.5 டண் வரை மகசூல் த்ரக்கூடியவையாம்! இது போன்ற லாபம் தரக்கூடிய பாரம்பரிய நெல் வகைகள் எப்படி காணாமல் போகின்றன என்பது என்னை போன்றவர்களுக்கு புதிரே! இதில் இன்னொன்றும் உண்டு. தற்பொழுது வரும் அரிசி ரகங்களில் வருவது போன்ற வாயுத் தொல்லையும் இந்த ரகத்தில் இருக்காதாம்!

இயற்கை விஞ்ஞாணி திரு #நம்மாழ்வார் அவர்கள் குறிப்பிட்டது போல் " நம் பாரம்பரிய விதைகளுடன் சேர்ந்து நம் பாரம்பரியத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறோம்"! 

மணப்பாறை மாட்டை தொலைத்தாகிவிட்டது, மாயவரம் ஏரும் தொலைந்து விட்டது, ஆத்தூரில் கிச்சடி சம்பாவே இல்லை....

ஆனால் கவிஞரின் வரிகள் மட்டுமே வலியாய் என் மனதிலும், என் பதிவிலும்...
வருத்தத்துடன்.....

No comments: