Thursday 7 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 5)


இன்று போல் ஷாப்பிங் மால்களும், ஹைபர் மால்களும் இல்லாத காலங்களில் மக்களுக்கு, வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு என அனைவருக்கும் கொள்முதல் இடம் சந்தைதான். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சந்தை பிரபலம், புதன் கிழமை தேனி சந்தை, வெள்ளிக்கிழமை நாகர்கோவில் கோட்டார் சந்தை, சனிக்கிழமை கமுதி அபிராமத்தில் சந்தை என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாள் சந்தைகள் பிரபலம். இன்றும் மதுரையில் ஞாநிற்றுக் கிழமை சந்தையில் கிடைக்காத பொருளே இல்லையென கூறலாம். பல வருடங்களுக்கு முன்னால் மூடப்பட்ட நிறுவனங்களான மெட்டடார் மற்றும் ஸ்டாண்டர்ட் வாகணங்களுக்கே இன்னும் அங்கு உதிரி பாகங்கள் வாங்க முடியும் என கூறுவார்கள். அதே போல் எல்லாமே இன்றும் அங்கே கிடைக்கும், அதாவது வளர்ப்பு புறா, இறைச்சிக்கான புறா, கிளி, வீட்டு நாய்கள், வேட்டை நாய்கள், பழைய பீரோக்கள், சோபாக்கள் என எல்லாமே மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கிடைக்கும்! இப்போது நாம் நமது பாடல் வரிகளுக்கு வருவோம்....

#பொள்ளாச்சி_சந்தை
மேலே பார்த்த ஒவ்வொரு ஊரிலும் ஒரு சந்தை ஒரு குறிப்பிட்ட நாளில் இருப்பது போல், பொள்ளாச்சி சந்தை வியாழக்கிழமை சந்தை. பொள்ளாச்சியை சுற்றி அனைத்து ஊர்களுமே விவசாயத்துக்கு பேர் போன ஊர்கள்! நான் தொழில் விசயமாக 10 வருடங்களுக்கு முன் வாராவாரம் அந்த பக்கம் செல்லும்போதே உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகள் அனைத்துமே ஒரு காலத்தில் முப்போகம் (வருடத்திற்கு மூன்று போகம்) விளைந்ததாக கூறுவார்கள். அது போல் பொள்ளாச்சியே அந்த இடங்களுக்கு ஒரு மையப்புள்ளியாகவும் அமைந்திருந்தது. கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் பொள்ளாச்சி சந்தை மையப் பகுதியாக இருக்கும்! அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் பாலக்காடு சென்று விட முடியும். அதே போல் உடுமலை வழியாக மூனாறும் பக்கமே. பொள்ளாச்சியை சுற்றி உள்ள் பகுதிகளில் அரிசி மட்டுமின்றி, கம்பு, ராகி, சாமை போன்ற னைத்து பொட்களுமே விளைவதால் பொள்ளாச்சி சந்தை மிக பிரபலமானது. உடுமலை மற்றும் அதன் அருகே உள்ள தளி போன்ற மலை சிற்றூர்களில் அதிக காய்கறிகளும், பொள்ளாசியை சுற்றியும் மலைகளிலும் அதிகம் காய்கறிகள் விளைந்ததால் பொள்ளாச்சி சந்தையில் எல்லாமே கிடைக்கும்

அடுத்தது பொள்ளாச்சி சந்தையில் நடக்கும் மாட்டுச் சந்தை. பொள்ளாச்சி சந்தையில் அந்த காலத்தில் ஆடு, மாடு போன்ற அனைத்து கால்நடைகளையும் விற்பனைக்கு ஓட்டி வருவார்களாம். இப்போது நீங்கள் கிராமத்து சினிமாக்களில் பார்ப்பது போன்ற சந்தையை எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சும். சினிமாவில் வருவது போல குடை ராட்டிணம், குதிரை ராட்டிணம், குருவி மிட்டாய், பஞ்சு மிட்டாய், சவ்வு மிட்டாய், புழுதி பறக்கும் கட்டாந்தரை என எதுவும் இப்போது கிடையாது!  ரெட்டை சடையும், கலர் ரிப்பனும், தாவணியும், நாலு முழ வேட்டியும் தொலைந்த போதே சந்தையும் காங்கிரீட் கட்டிடமாகி விட்டது!! பழைய பரபரப்பான சந்தையும் இப்போது கிடையாது! ஆனால் எனக்கு தெரிந்து ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் வரை பொள்ளாச்சியின் மாட்டு சந்தை பிரபலமாகவே இருந்தது. பொள்ளாச்சியில் இறங்கி சந்தைக்கு போகனும் என்று சொன்னாலே மாட்டு சந்தைக்கு தான் கொண்டு போய் விடுவார்கள்.ஆனால் சோகம் என்னவென்றால் இங்கு வருவது பெரும்பாலும் அடி மாடுகளே. அருகில் உள்ள கேரளாவை மனதில் கொண்டு இங்கு தமிழகத்தின் அடிமாடுகள் என்றில்லை, கர்ணாடக். ஆந்திர அடி மாடுகளும் இங்கேதான் வருகின்றன!

மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான மூக்கனாங்கயிறு, கழுத்தில் கட்டும் மணி, சங்கு, திருஷ்டிக்கயிறு, தார் குச்சி, சாட்டை என அனைத்து பொருட்களும் கிடைக்கும். மாட்டு சந்தை இன்றும் அடி மாடுகளால் கலகலத்துக் கொண்டிருக்க....

பாரம்பரியம் மிக்க தானிய சந்தையோ.... தள்ளாடி படுத்து விட்டது....

No comments: