Wednesday 6 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 4)


கவிஞர் மருதகாசி அவர்களின் அடுத்த வரிகள்....
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு
கருதை நல்ல வெளையச்சு #மருத_ஜில்லா_ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு

ஆம் மதுரை ஜில்லா ஆள்தான் இன்றைய தலைப்பு....

இப்போ மருத ஜில்லா ஆள் என்று அவர் குறிப்பிடுவதன் அர்த்தம் பார்போமா? அது ஏன் கருதறுக்க மதுரை ஆட்கள் பற்றி குறிப்பிடுகிறார்? மற்ற ஊர் ஆட்கள் என்ன மட்டமா? அன்று அவர் குறிப்பிட்டிருக்கும் மதுரை ஜில்லா என்பது இன்றைய விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிடும் MRT மதுரை-இராமனாதபுரம்-தேனி மாவட்டங்களை இணைத்தது. இதில் இன்றைய விருதுநகர் மாவட்டமும் சேர்ந்தே வரும். அதாவது வைகையை பாயும் மதுரை, தேனி, இராமனாதபுரம், விருதுநகரின் சில பகுதிகள், சிவகங்கை, கமுதி, போடி, கம்பம், பெரியகுளம் என பெரிய ஜில்லா அது!  அந்த காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் ஆட்கள் குஸ்தி, மல்யுத்தம் போன்ற தற்காப்பு சன்டை கலைகளுக்கு பேர் போனவர்கள். இந்த ஒருங்கிணைந்த அன்றைய மதுரை ஜில்லாகாரர்களிடம் சாதிப் பெயரை போல் நிறைய பேருக்கு பெயரின் பின்னால் வாத்தியார், பயில்வான் போன்ற பட்டங்கள் இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு மதுரையின் சிறு பகுதிகலும் மல்யுத்த பள்ளிகளும், குஸ்தி வாத்தியாரும் இருப்பார்கள். இந்த வாத்தியார்களுக்கு வஸ்த்தாது என்ற பெயரும் உண்டு. இன்றும் சிலர் நீ என்ன பெரிய வஸ்த்தாதா என கேட்பதை பார்த்திருப்போம்!

நன்றாக் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து உடலை கிண்ணென்று வைத்திருப்பார்கள் அன்றைய ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாக்காரர்கள். எப்பேற்பட்ட கடின வேலைக்கும் அஞ்சாதவர்கள் அவர்கள். மழை வெயில் குளிர் பாராமல் எந்த சீதோசன நிலையிலும் வேலை பார்ப்பவர்கள் அன்றைய மதுரை ஜில்லாக்காரார்கள். எந்த பணியில் இருந்தாலும் இவர்கள் அறுவடை காலங்களில் வயல் வேலைக்கு கிளம்பி விடுவார்களாம். உள்ளூரில் பஞ்சமோ இல்லை வெள்ளமோ என்றால் சட்டென்று யோசிக்காமல் வெளியூர்களுக்கு கதிரறுக்க கூலிக்கும் செல்வார்களாம். உள்ளூரில் பணி முடிந்து வெளியூர்களில் கதிரறுக்கும் வேலை நடந்தால் இவர்களையே அழைத்து செல்வார்களாம். ஆனால் இன்று இங்கும் நிலமை தலைகீழே. முன்பு போல் இன்று கூலியாக நெல்லைக் கொடுத்தால், விளைச்சலில் பாதியைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏக்கர் கதிர் அறுப்புக்கு இருபது ஆட்கள் என நாலைந்து நாட்கள் வேலை செய்ய வேண்டி இருக்கும். நெல்லை உதறுவதற்கு பத்து ஆட்கள் என, நாலு நாட்களுக்கு மேல வேலை செய்ய வேண்டும். கணக்குப் பார்த்தால் நூற்றி ஐம்பது ஆட்கள் கூலி கணக்கு வரும் ஒரு ஏக்கருக்கு. களம் தூரமாக இருந்தால், கூலி அதிகமாக குடுக்க வேண்டி வரலாம். இவ்வளவு செலவு செய்தாலும் நெல் கிலோ ஆறு ஏழு ரூபாய்க்குதான் கொள்முதல் செய்யப்ப்டுகிறது.

இந்த லட்சனத்தில் ஆட்கள் வைத்து வேலை பார்த்தால் கடன்தான் மிஞ்சும். கதிரறுக்கும் இயந்திரம் வைத்து அறுத்தால். இரண்டு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அறுக்கலாம். நெல்லாகவே வந்துவிடும். மணிக்கு 1,200 ரூபாய் இயந்திரக் கூலி. நெல்லை களத்திற்க்கு கொண்டு போக டிராக்டருக்கு ஒரு ஒரு நடைக்கு 250 ரூபாய். இதுதான் இன்றைய கணக்கு! வேலையும் இலகுவாய் முடியும், கொஞ்சம் லாபமும் மிஞ்சும்! சரி அப்போ மதுரை ஜில்லா ஆட்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அரிசி ஆலை வேலைக்கு சென்று விட்டார்கள். மூடை தூக்குவது போன்ற வேலைக்கு சென்றவர்களும் உண்டு. அரிசி ஆலைகளிலும் தற்பொழுது இயந்திர மயமாகி விட்டதால், சிலர் வேறு சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைகளுக்கு சென்று விட்டனர். அதே போல் இன்றும் கட்ட கூலி வேலை போன்ற கடினமான வேலைகளுக்கு மதுரை சுற்றுப்புற ஆட்களே வெளியூர்களுக்கும் செல்கின்றனர். கேரளாவில் கூட போய் தங்கி வேலை பார்த்து வருவதுன்டு மதுரை சிற்றாள் மற்றும் கொத்தனார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வரையில் எங்கள் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் கூட கதிர் அறுக்கும் நாட்களில் எவ்வளவு கூலி நாங்கள் குடுக்க முன் வந்தாலும் உதறி தள்ளிவிட்டு வயல் வேலைக்கு சென்று விடுவார்கள்! அந்த காலங்களில் எங்கள் தொழிற்சாலையில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாகி விடும். ஆனால் இப்பொது முற்றிலுமாக அந்த பழக்கம் மறைந்து விட்டது என்றே கருதுகிறேன்!

மதுரை ஜில்லா ஆட்களுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது கவிஞரே.....

No comments: