Friday 8 January 2016

மணப்பாறை மாடு கட்டி.... (பாகம் 6)


இந்த பாடலின் மீது எனக்கு ஒரு பாசம் உண்டு என முதலில் கூறினேன் அல்லவா? அந்த விசயத்திற்கு இப்போதுதான் வருகிறேன். ஆம் ஒரு விருதுநகர்காரனாக விருதுநகர் வியாபாரியை பற்றி எழுதும் போது எனக்குள் ஒரு பூரிப்பு!


விருதுநகர் 9. 34’ 10” நிலநேர்கோடு (Longitude) மற்றும் 77.57’25” நிலகுறுக்கு கோட்டிலும் (Latitude ) அமைந்துள்ளது. விருதுநகரைச் சுற்றி வடக்கில் மதுரையும் (48கி.மீ) தெற்கில் சாத்தூர் (26கி.மீ) மேற்கில் சிவகாசி (26கி.மீ) மேலும் அருப்புக்கோட்டையும்(18கி.மீ) அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 101மீட்டர் உயரம், சமவெளி பிரதேசம்,கரிசல்மண், கருங்கல் மற்றும் சுக்கான் பாறைகள் கொண்ட புவியல் அமைப்பைக் கொண்டது. வெப்பம் மிகுந்த மற்றும் நிலையற்ற மழைத்தன்மையைக் கொண்ட இடமாகும். இதனால் விருதுநகரை சுற்றிலும் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி என அனைத்துமே கரிசல் காடுதான். இங்கு சீமைக்கருவேல் எனப்படும் வேலிக்கருவேல் புதர்களே ரொம்ப யோசித்துதான் முளைக்கும்! கந்தக பூமி எனப் படும் பூமி! மழை, தண்ணீர் பாசனம், விவசாயம் என எல்லாமே எட்டாக்கணி தான். இது எந்த பயிறும் விளைவிக்க முடியாத பூமி.


ஆனால் வாழ்ந்தாக வேண்டுமே? விவசாயம் இல்லாமல் வேலை இல்லை, விவசாயம் இல்லாமல் தொழில் இல்லை, விவசாயம் இல்லாமல் வாழ்க்கை இல்லை! ஆனால் விருதை வாசிகள் வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்தனர். ஆம் அது தான் வியாபாரம்! கி.பி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுக்காரச் செட்டியார் சமுகத்தினரும் நாடார் சமுகத்தினரும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். 1825ஆம் ஆண்டு முதல் விருதுநகருக்கு எல்லாப் பொருட்களும் விளையும் இடங்களில் இருந்து கொணர்ந்து விற்பனை செய்யப்பட்டது.வணிகத்தில் போட்டி காரணமாக விருதுநகர் வணிகர்கள் பல ஊர்களில் தங்கள் நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யத்தொடங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துள்ளனர். இன்று காபி, ஏலக்காய், பருப்பு, மிளகாய், எண்ணெய், புண்ணாக்கு என கிட்டத்தட்ட எல்லா பொருட்களுக்குமே இந்திய அளவில் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய இடமாக வளர்ந்திருக்கிறது. தமிழக அளவில் ஆரம்பித்தது, அகில இந்திய அளவில் வளர்ந்து, இன்று உலக அளவில் விருதுநகர் வியாபாரிகளின் ராஜ்ஜியம் விரிந்திருக்கிறது.


எந்த பயிர்களை எல்லாம் தன் மண்ணில் விளைவிக்க முடியாமல் போனதோ அவற்றுக்கு எல்லாம் இன்று அகில இந்திய அளவில் விலை நிர்னயித்து, ஏற்றுமதியும் செய்து கொண்டிருக்கிறார்கள் விருதுநகர் வியாபாரிகள். எங்கோ குடகு மலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் விளைகின்ற காபிக்கும், ஏலக்காய்க்கும் விலை நிர்ணயம் செய்து, அதை ஏற்றுமதி செய்யும் இடமாக வளர்ந்திருக்கும் விருதுநகரில் எம்.எஸ்.பி. குரூப், தொடர்ந்து 20 வருடமாக காபி ஏற்றுமதியில தேசிய அளவில் முதல் இடம் பெற்று வருகின்றது. போடிநாயக்கனூரில் கூடும் ஏலக்காய் ஏலத்தை, விரல் நுனியில் வைத்து அசைப்பவர்கள் இந்த விருதுநகர் வியாபாரிகள்தான். இத்தனை வளர்ச்சிக்கான காரணம் முக்கியமான மூன்று விசயங்கள். ஆம் உண்மை, உழைப்பு, உயர்வு. யாருடைய வயிற்றிலும் அடிக்காமல் உரிய விலை குடுத்து தரமான பொருட்களை கொள்முதல் செய்து முறையாக பணமும் கொடுத்து விடுவதால் தான் விருதுநகர் வியாபாரிகளுக்கென்று தனி பெயர். இது தான் #கவிஞர்_மருதகாசி அவர்களை விருதுநகர் வியாபாரிகள் கவர்ந்த விசயமாக இருக்கக் கூடும்!


விருதுநகர் வியாபாரிகளிடம் எனக்கு பிடித்த வியாபார முறை ஒன்று உண்டு! அது கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்ற வியாபாரமாய் இருந்தாலும் அலட்டிக் கொள்ளாமல், எந்த வித டென்சனும் காட்டாமல் இயல்பாய் சிரித்த முகத்துடன் அண்ணாச்சி, மச்சான் என்ற உறவு முறையுடன் அழைத்து வியாபாரம் செய்வார்கள். என்றுமே விருதுநகர் வியாபாரிகளை டென்சன் முகத்துடன் காண முடியாது!


இங்கும் சிக்கல் இல்லாமல் இல்லை! எந்த ஒரு மக்களும் வளரும் வரை அவர்களுக்குள் வெறியும், ஒற்றுமையும் இருக்கும். வளர்ந்த பிறகு அங்கே பொறாமையும் வளர ஆரம்பித்து விடும்! விருதுநகரிலும் அந்த சிக்கல் சில வருடங்களாய் இருந்து வருகிறது. இதை விட ஆபத்தான இன்னொரு விசயம் ஒன்றும் முளை விட்டிருக்கிறது! முன்பெல்லாம் படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் என்ன படிப்பு படித்தாலும் படித்து முடித்து தொழிலுக்கு வந்து விடுவர். ஏர்ணாட்டிக்ஸ் படித்து விட்டு கமிஷண் தொழிலுக்கு வந்தவர்களையும் எனக்கு அங்கு தெரியும்! இப்போது அங்கே உள்ள இளம் தலைமுறையினர் ஒயிட் காலர் ஜாபில் மோகம் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். அதே போல் வெளிநாட்டு வேலை மோகமும் சமீப காலமாக அங்கு தலைவிரித்து ஆடுகிறது. நல்ல படிப்பு படித்து விட்டு அமெரிக்கா சென்று விட வேண்டும் என்றும் இன்றைய தலைமுறையினர் வெறித்தனமாக விரும்புவதாக தெரிகிறது. பல விருதுநகர் வியாபாரங்கள் அடுத்த தலைமுறையின் கவணிப்பில்லாமல் மார்வாரிகளின் கைக்கு மாறி வருகின்றன! விருதுநகரின் அடுத்த தலைமுறை தன் கவணத்தை வியாபாரத்திலிருந்து திசை திருப்பினால்......

தமிழனத்தின் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் தமிழர்களின் கைவிட்டு போய் விடும்.....

No comments: