Thursday 25 September 2014

கோவில்பட்டி கடலை மிட்டாய்

கோவில்பட்டி கடலை மிட்டாய்
*************************************************




யாரிடமாவது நம் சொந்த ஊரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, ‘உங்க ஊரில் எந்தத் தின்பண்டம் ஃபேமஸ்?’ என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவரும். ஒரு ஃபேமஸும் இல்லாத ஊர்க்காரர்கள் பாடு திண்டாட்டம்தான். கோயில் இல்லாத ஊரில்கூட குடியிருந்துவிடலாம். ஆனால் சொல்லிக்கொள்ள ஏதேனும் ஒரு ஃபேமஸ் இல்லாத ஊரில் குடியிருக்க முடியாது. இந்த விஷயத்தில் கோவில்பட்டிக்காரர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். திருநெல்வேலிக்கு அல்வாபோல கோவில்பட்டியையும் கடலை மிட்டாயையும் பிரித்துவிட முடியாது.

கோவில்பட்டிக்குப் பெருமை சேர்க்கும் கடலை மிட்டாய்க் கடைகள் அங்குள்ள மார்க்கெட் சாலையில் உள்ளன. நெரிசலான அந்தச் சாலையில் எம்.என்.ஆர்., வி.வி.ஆர்., கே.என்.ஆர்., ஆஞ்சநேயர் விலாஸ் கடலை மிட்டாய் என வரிசையாக மிட்டாய்க் கடைகள். எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும். கடைகளுக்குப் பின்னால் உள்ள பட்டறைகளிலேயே மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டுச் சுடச் சுடப் பொட்டலங்களில் இட்டுத் தருவது இங்குள்ள சிறப்பம்சமாகும். கடலை மிட்டாய் என்றால் ஒன்று, இரண்டு அல்ல. இங்கு நாள் ஒன்றுக்கு டன் கணக்காக கடலை மிட்டாய்கள் விற்பனை ஆகின்றன. நிலக் கடலை, வேர்க் கடலை என அழைக்கப்படும் இந்தக் கடலை மணிலாக் கொட்டை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தக் கடலைக்கு இந்தப் பெயர் வந்தது. ஆனால் அது எந்த நூற்றாண்டில் என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. ஆனால் அதன் வருகை கோவில்பட்டிக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது.
கடலை மிட்டாய் தயாரிக்க முதலில் முழு நிலக் கடலையாக வாங்கப்பட்ட பருப்பை இரும்பு சட்டியில் மிதமான வெப்பத்தில் பொன் நிறத்திற்கு வரும் வரை நன்கு வறுக்கின்றனர். பின்பு அந்தக் கடலை பருப்பைப் பாதியாக உடைத்து வைத்துக்கொள்கின்றனர். வெல்லத்தைக் குறிப்பிட்ட வெப்பத்தில் பாகாகக் காய்ச்சுகின்றனர். பாகை ஆற வைத்துப் பின்பு சிறிது நேரம் கழித்து மீண்டும் காய்ச்சி இறக்குகிறார்கள். இரண்டாவது முறை பாகை நன்கு கொதிக்கவிடுகிறார்கள். நன்கு கொதித்த பின்னர் பாதியாக உடைக்கப்பட்ட நிலக் கடலை பருப்புடன் சிறிது உப்பு சேர்த்துப் பாகுடன் கலக்கிறார்கள். குறிப்பிட்ட சில நிமிடங்களில் கடலைப் பருப்பும், வெல்லப் பாகுவும் சேர்ந்து மிதமான திடநிலைக்கு வந்துவிடுகிறது.
பின்பு அந்த வெப்ப நிலையிலே அடுப்பிலிருந்து வெளியே எடுத்து மற்றொரு இரும்புப் பாத்திரத்தில் போட்டுக் கரண்டியால் கிளறு கிறார்கள். அப்போது பாகும் பருப்பும் மிக திடமான நிலைக்கு மாறிவிடுகிறது. பின்னர் அதனை சட்டியில் இருந்து வெளியே எடுத்து பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மர அச்சில் கொட்டுகின்றனர். தேங்காய் துருவலில் சேர்த்துவிட்டால் கடலை மிட்டாய் தயார்.
இங்கு செய்யப்படும் கடலை மிட்டாயின் தனி ருசிக்குக் காரணம் 60 ஆண்டுக் கால அனுபவமும் அதில் கலக்கப்படும் சுவையான பொருட்களும்தான். வெல்லம், தேனி வெல்லம் என இரு விதமான வெல்லத்தைத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். அதுபோல கடலை மிட்டாய்த் தயாரிப்பை ஒரு ஆன்மிக வழிபாடு போல செய்கிறார்கள்.
அதெல்லாம் சரி… கடலை மிட்டாயில் எண்ணெய் இருக்கிறதே என்பர் கொலஸ்ட்ரால் பயத்தில் உள்ளவர். அவர்களுக்கு ஒரு செய்தி… முதலில் கடலை எண்ணெயிலேயே கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது.நிறைய பாலி அன்சேச்சுரேட்டும் மோனோ அன்சேச்சுரேட்டும் உள்ள கொழுப்பு அமிலங்கள்தான் அதிகம் உள்ளன. கடலையே இப்படி என்றால், கடலை மிட்டாய் இன்னும் ஒரு படி மேல்.
கடலை மிட்டாய் அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க் கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும் (பார்க்க அட்டவணை).
கடலை மிட்டாய் என்றதும் நினைவுக்கு வரும் கரிசல்காட்டுப் பூமியான கோவில்பட்டியில் மொத்த ஊரும் கோகோ, பால்பவுடர் சாக்லேட்டுகளுக்குப் போன பின்பும் இன்றும் 50 குடும்பங்கள் கடலை மிட்டாய் தயாரித்து கோலாலம்பூர் வரைக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றன.
அப்படிக் கடலை மிட்டாய் தயாரிக்கும் ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னது… ‘ரெண்டு மாசமானாலும் இது கெட்டுப்போகாது அண்ணாச்சி. அதோட இயல்பு அப்படி. நாளாச்சுன்னா மொறுமொறுப்பு குறையும். இந்த மொறுமொறுப்பும்கூட போகாம இருக்க கெமிக்கல் சேர்க்கச் சொன்னாங்க அண்ணாச்சி. ஆனா, நாங்க செய்ய மாட்டோம். புள்ளைங்க சாப்பிடுறது. நம்ம புள்ளைங்களா இருந்தா, தப்பானதைக் கொடுப்போமா அண்ணாச்சி?” என்று அடுத்த தலைமுறை மீது அக்கறையோடு கேட்டார் அழுக்கு வேட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!

No comments: