Monday 22 September 2014

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்க் (நாடார் வங்கி)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்க் (நாடார் வங்கி)
********************************************************************
பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள் நாடார்கள். தென் பகுதியில் கிடைத்த பனை பொருட்கள், வெல்லம் போன்றவற்றை வண்டிகளில் ஏற்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விற்க ஆரம்பித்தனர். இப்படி செல்லும் வழிகளில் வண்டியை வழியில் நிறுத்தி ஓய்வெடுக்க வும், பொருட்களை பத்திரமாகப் பாதுகாக்கவும் வண்டிப் பேட்டைகளை அமைத்தனர்.

இந்த வணிகத்தின் காரணமாக நாடார்களிடம் பணம் சேர ஆரம்பித்தது. பதினெட்டாம் நூற்றாண்டு முடிகிற சமயத்தில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தார்கள்.

வணிகம் காரணமாக நாடார்களின் பொருளாதார நிலை உயர்ந்தாலும் சமுதாய நிலை மாறவே இல்லை. பிற சமுதாயத்தினர் அவர்களை ஒதுக்கியே வந்தனர். இதன் உச்சபட்ச கொடுமையாக, நாடார்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து காசுகளைப் பெறவோ, தரவோ மற்ற சமுதாயத்தினர் மறுத்தனர். வெளியில் வைத்திருந்த தண்ணீர் குடத்தில் காசை போட்டு விட்டு செல்லும்படி சொன்னார்கள்.

இது மாதிரி நிகழ்ச்சிகள் நாடார்களின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. இதற்கொரு தீர்வாக, முதலில் தங்களுக்கென ஒரு வங்கியைத் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

1920-ல் நாடார் மஹாஜன சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. இந்த மாநாட்டில் நாடார் சமுதாயத்தினருக்கென தனியாக ஒரு வங்கியைத் தொடங்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லோரும் முழுமனதோடு ஏற்றுக்கொண்ட தீர்மானம் இது என்பதால், அடுத்த ஓராண்டு காலத்திற்குள் ஐந்து லட்சம் ரூபாயைத் திரட்டி, வங்கியைத் தொடங்கும் வேலையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

1921 நவம்பர் மாதம் 11-ம் தேதி தூத்துக்குடியில் தெற்கு ராஜ வீதியில் ஆவன்னா மாவன்னா கட்டடத்தில் நாடார் வங்கி செயல்படத் தொடங்கியது. அப்போது நாடார் மஹாஜன சங்கத்தின் தலைவராக இருந்த டி.வி.பால குருசாமி நாடார் இந்த வங்கியைத் தொடங்கி வைத்தார்.

இந்த வங்கியின் முதல் தலைவராக தேர்வு ஆனார் எம்.வி.சண்முகவேல் நாடார். இவர், 1879-ல் அருப்புக் கோட்டையில் பிறந்தவர். இவரது தந்தையார் செய்துவந்த வணிகத்தை தொடர்ந்தவர், வட இந்தியாவிலும் இலங்கையிலும் தனது பிஸினஸை விரிவு படுத்தினார். ஆனால், 1923-ல் இவர் இறந்ததால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவரால் இந்த வங்கியின் தலைவராக இருக்க முடிந்தது.

எம்.வி.சண்முகவேல் நாடாருடன் அப்போது பெரிய பிஸினஸ்மேன்களாக விளங்கிய பத்து பேர் வங்கியின் இயக்குநர் களாக இருந்தனர். மிகச் சிறந்த பிஸினஸ் அறிவும் சமுதாய அக்கறையும் கொண்ட இவர்கள் வங்கி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக நடத்தியதன் விளைவு, பிரமாதமான வளர்ச்சியைக் காண ஆரம்பித் தது. 1921-ல் சுமார் 5.5 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பமான இந்த வங்கியின் நிகர மதிப்பு 2011 கணக்கின்படி 1,366 கோடி ரூபாய்.

1922-ல் இந்த வங்கியில் டெபாசிட் ஆன தொகை ரூ.21,010. இது 1924-ல் ரூ.75,624-ஆக உயர்ந்தது. 1926-ல் ரூ.1.7 லட்சமாகவும், 1930-ல் ரூ.5.48 லட்சமாகவும், 1940-ல் ரூ.14.19 லட்சமாகவும், 1946-ல் ரூ.27.31 லட்சமாகவும், 1971-ல் ரூ.1.82 கோடியாகவும், 2011-ல் 13,793 கோடி ரூபாயாகவும் இந்த வங்கியின் டெபாசிட் உயர்ந்ததில் இருந்தே இந்த வங்கி மக்களிடம் எந்த அளவுக்கு நம்பிக்கை பெற்றிருக்கிறது என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வங்கி தந்த லாபமும் வியக்க வைப்பவை. 1922-ல் இந்த வங்கி தந்த லாபம் ரூ.6,984. 1930-ல் இது ரூ.19,832-ஆக உயர்ந்தது. 1971-ல் ரூ.5.5 லட்சமாகவும், 2011-ல் 250 கோடி ரூபாயாகவும் லாபம் உயர்ந்தது.

இந்த அட்டகாசமான வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தது பல்வேறு நகரங்களில் இந்த வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டதுதான். 1922-ல் தூத்துக்குடியில் இந்த வங்கி தொடங்கப்பட்டாலும் ஆறு ஆண்டுகள் கழித்து 1928-ல் விருதுநகரிலும், 31-ல் மதுரை யிலும், 33-ல் திண்டுக்கல்லிலும், இலங்கையில் கொழும்புவிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. 1934-ல் சென்னையிலும் 37-ல் தேனியிலும் தொடங்கப் பட்டது.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்த வங்கிக்கு வெறும் 5 கிளைகளே இருந்தன. 1970-ல் 11 கிளைகளாகவும், 1983-ல் 103 கிளைகளாகவும், 2000-த்தில் 160 கிளைகளாகவும், தற்போது 285 கிளைகளும் இந்த வங்கிக்கு இருக்கிறது. 2011-12 ஆண்டில் மட்டும் இந்த வங்கி 47 கிளைகளை புதிதாக திறந்திருக்கிறது.

நாடார் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தொடங்கப் பட்டு, அந்த சமுதாயத்து மக்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதோடு, தமிழகத்தின் பிற சமூகத்து மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. தங்கள் சமுதாயத்துக்கே வளர்ச்சியைத் தேடித் தந்த இந்த வங்கியை எக்காரணம் கொண்டும் வேறு யாருக்கும் விட்டுத் தர நாடார்கள் தயாராக இல்லை. நாடார்களுடன் இரண்டற கலந்துவிட்ட இந்த வங்கியினால், நாடார் சமுதாயத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே பெருமைதான்!

No comments: