Thursday 25 September 2014

பனை நம் செல்வம் (கற்பகதரு)





பனை நம் செல்வம் (கற்பகதரு)
************************************************
பனை மரம் தமிழ் நாட்டின் தேசிய மரமாகும். புல் வகையை சார்ந்த இம்மரம் தமிழ் நாட்டின் கடலோர பகுதிகளில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமாக காணப்படுகிறது. இலங்கையில், தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இம்மரம் ஏராளமாக காணப்படுகிறது. அடி முதல் முடிவரை இதன் எல்லா பாகங்களும் மனிதனுக்கு உதவுவதால், இதனை “கற்பகத்தரு” என அழைப்பர். இந்தியாவில் சுமார் 8 கோடி பனை மரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 5 கோடி மரங்கள் தமிழ் நாட்டில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்கள் பெறப்படுகின்றன. பனையிலிருந்து பூம்பாளையைச் சீவி பெறப்படும் பதனீர் குளிர்பானமாக பயன்படுத்தப்படுகிறது. பதனீரை நுரைக்க வைத்தால் அது போதை தரும் கள்ளாக மாறுகிறது. பதனீரை காய்த்து கூழ்பதனீராக்கி அதிலிருந்து கருப்பட்டி தயாரிக்கப் படுகிறது. இளமையான பனங்காய் நொங்கு எனப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் நொங்கு, பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. பனங்காய் முதிர்ந்து பனம்பழம் உண்டாகிறது. இனிப்பு சுவையுடைய பனம்பழம் தனியாகவும், சமைக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. பனங்கொட்டையை முழைக்கப் போட்டு அதிலிருந்து பனங்கிழங்கு மற்றும் தவுன் பெறப்படுகிறது. மேலும் பனையின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
பனையின் தண்டு வீடு கட்ட உத்தரமாகவும், தூணாகவும் பயன்படுகிறது. பனையோலை வீட்டிற்கு கூரை வேய பயன்படுகிறது. இது தவிர பனையோலை பாய் முடையவும், ஓலைப்பெட்டிகள் செய்யவும், வேலிகள் அமைக்கவும் பயன்படுகிறது. பனை மட்டைகள் நார் தயாரிக்க பயன்படுகிறது. பனந்தும்பு கயிறு தயாரிக்க பயன் படுகிறது. இவை தவிர பனை மரங்கள் மழை தருவிக்கும் குடைகளாகவும் இருக்கின்றன.
முற்காலத்தில் பனையோலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான். பனை ஓலைகள் இல்லாவிடில் தமிழுக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
இந்து மற்றும் புத்த மதத்தில் பனைமரம் புனித மரமாக போற்றப்படுகிறது. திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர் முதலிய சிவ தலங்களில் பனை மரம் தலமரமாக விழங்குகிறது.
பண்டைய தமிழ் இலக்கியத்தில் பனை மரங்களைப்பற்றி ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. காதலில் தோல்வியுற்ற காளையர் மடலேறுதல் நிகழ்ச்சியில் பனை மட்டைகளை வைத்து குதிரை செய்து ஏறியதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பழந்தமிழ் நூலான தலவிலாசம் பனைமரத்தின் 801 பயன்களை கூறுகிறது.
தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பனைமரம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விழங்கியது. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆக்கிரமித்தபோது அங்கிருந்து வெளியேறி தென் மாவட்டங்களில், தேரிக்காட்டில் வாழ்ந்த சான்றோர் (நாடார்) சமூக மக்கள் இம்மரத்தையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்தனர். இவ்வாறு பழந்தமிழரின் வாழ்வோடு கலந்து, ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய பனைமரம் இன்று முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளது.
கள் இறக்கத் தடை, பனை பொருட்களை முறையாக சந்தை படுத்தாமை, பனையேற நவீன எளிய கருவிகள் இன்மை இவையே பனைமரங்கள் இன்று முற்றிலுமாக புறக்கணிக்கப்பட காரணங்களாகும். பனைமரத்தை வைத்து குலம் சார்ந்த தொழிலாக பனைத் தொழில் செய்து வந்த சான்றோர் (நாடார்) சமூக மக்கள் இன்று அந்த தொழிலை தொடர்ந்து செய்து வர இயலாத நிலையில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இதனால் குலவழியாக பனைகளை காத்துவருவது முற்றிலும் குறைந்துவிட்டது. பால் சுரந்து குடும்பத்தை காப்பாற்றும் பசுக்கள், பயன்பாடற்றவுடன் அடிமாடாக்கப்படுவதுபோல, வளாதார மரமான பனை மரங்கள் இன்று களை மரமாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள் இன்று அருகிவரும் மரவகைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் அழிக்கப்பட்டுள்ளன. இதே நிலை தொடருமானால் இன்னும் 40 வருடங்களில் பனைமரங்கள் முற்றிலுமாக தமிழகத்திலிருந்து அழிக்கப்பட்டுவிடும். தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை அடுத்த தலைமுறைகள் படங்களில் மட்டுமே பார்க்க வேண்டிய அவலம் நேரும்.
தமிழர் அடையாளங்களில் ஒன்றான பனை மரத்தை அழிவிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். தமிழக அரசு பனைமரம் வெட்டுவதை உடனடியாக தடை செய்து புதிதாக ஏராளமாக பனை மரங்களை நடவு செய்ய வேண்டும். பனைமரத்திற்கு அதீத பராமரிப்போ, நீராதாரமோ தேவையில்லை. எனவே நடவு செய்தாலே போதும் அவை தானாகவே வளர்ந்து பெருகும். இம்முயற்சியில் நாடார் சமூகம் தீவிர பங்காற்ற வேண்டும். மழைக்காலத்திற்கு முன் பனங்கொட்டைகளை சேகரித்து மழைக்காலத்தில் அவற்றை காடு, மேடுகளில் விதைக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களை இம் முயற்சியில் ஈடுபடுத்தினால் பெருமளவு பனை நடவு ஏற்படுவதோடு அவர்களுக்கு சுற்று சூழலை பற்றிய விழிப்புணர்சியும் ஏற்படும்.

No comments: