Tuesday 23 September 2014

கடவுளுக்கும் பிரமோஷன் தேவையா???

ஊறப்போட்டு ஆறப்போட்டு போடனும்னே நான் காத்துக் கொண்டிருந்த பதிவு
****************************************************************************************************************



விநாயகர் சதுர்த்தி அன்று போடுவதற்காக வைத்திருந்த பதிவு இது!!

நான் சின்ன பையனா இருக்கும் போது அதாவது 70-80 களில் பிள்ளையார் என்றாலே ஒரு குதூகலமும் ஆசையும் வரும். எங்க வீட்டு (தெருக்குத்து என்பதால்) வாசல்லயே ஒரு குட்டி பிள்ளையார் இருப்பார். காலையில் எழுந்த உடன் அவர குளிப்பாட்டி செம்பருத்தி பூவை பறிச்சு வச்சுட்டு குங்குமம் இட்டு அழகு பார்க்கிறது உண்டு. அது ஒரு அருமையான அனுபவம். எங்கள் தெரு முக்கில் இருந்த விநாயகரிடம் பரிட்சையில் பாசாவதற்துக்கு பக்கத்து வீட்டு பிச்சை அண்ணாச்சி மகன் அந்தோனியும் வேன்டிக்கிட்டது உண்டு! அதே மாதிரி விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது காப்பு கட்டிய பிறகு தினமும் கரும்புள்ளி செம்புள்ளி குத்திகொண்டு வேப்பிலை அணிந்து கொண்டு அண்ணன், தம்பி, சித்த்ப்பா, பெரியப்பா, மாமாவோடு "ஆகோ ஐயாகோ" என்று சொல்லி சென்றதில் ஒரு குதூகலம் இருந்தது உண்டு.

அதே போல் மதுரை கீழ வெளி வீதியில் உள்ள புனித மேரி மாதா கேதட்ரல் சர்ச்சின் உள்ளே போய் அங்கு மேலே பெரிய ஜன்னல்களில் பதிக்கப் பட்டிருக்கும் வண்ண வண்ண கண்ணாடிகள் வழியாக வரும் சூரிய ஒளியையும், வண்ண விளக்குகளையும் பார்ப்பதற்காகவே செல்வதுண்டு. எங்க அம்மா ஒரு இந்துவா இருந்தாலும் அந்த சர்ச்சின் ரசிகை என்றே சொல்லலாம். அதுவும் திருவிழா காலங்களில் அதன் அழகை ரசிக்க கண் கோடி வேண்டும். அந்த சர்ச்சின் பின் புறம் உள்ள வீடுகள் அனைத்திலும் வண்ண வண்ண நட்சத்திரங்கள் மின்னும். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த பிச்சை அண்ணாச்சி வீட்டில் இருந்து பிளம் கேக் வரும். முக்கியமா பிரியானி கண்டிப்பா கிடைக்கும். விருதுநகர் மகேஷ் பேக்கரியின் பிளம் கேக் ரசிகன் நான் என்றாலும், பிச்சை அண்ணாச்சி வீட்டு கேக்கோட ருசியே தனி!! அப்போ எல்லாம் பக்கத்து வீட்டுக்காரங்கள அண்ணாச்சி அக்கான்னு சொல்லிதான் கூப்பிடுவோம் Uncle, Aunty எல்லாம் கிடையாது!!

அப்புறம் என் வாழ்க்கைல முக்கியமான இடம் மதுரை தெற்குவாசல் பள்ளிவாசலுக்கு உண்டு. தெற்குவாசல் காளிராஜன் டாக்டர் மேல எங்க அம்மா வச்சிருந்த நம்பிக்கைய விட தெற்கு வாசல் பள்ளியில் ஓதுபவர் மேலதான் அதிகம் வச்சிருந்தாங்க!! எனக்கு தீராத காய்ச்சல கூட அவர் மந்திரிச்சு தெளிய வச்சுட்டதா சாகும் வரை எங்க அம்மா என்கிட்ட சொன்னதுண்டு. தீராத காய்ச்சல், தலை வலி, பூச்சு கடி எல்லாத்துக்கும் அவர் மந்திரிச்சு தீர்வு சொன்னதுண்டு. சில நேரங்களில் கயிறு கட்டியும் விடுவார். எங்க அம்மா மட்டுமில்லை தெற்கு வாசல், கீழ வாசல் மற்றும் தவிட்டுசந்தை வாசிகள் அனைவருக்குமே அவர் ஒரு ரட்சகர்தான்!!

இப்படி என் வாழ்க்கையில் எல்லா மதமும், எல்லா கடவுளும், எல்லா நாளும் வந்திருக்கிறார்கள். மத துவேஷங்கள் அந்த கால கட்டத்திலும் இருந்தது ஆனால் இந்த மாதிரி அவர்களை பிரமோட் செய்யும் வகையில் இல்லை! கடவுள்களும் , திருவிழாக்களும் மனிதர்களை குதூகலப்படுத்திய காலங்கள் அவை! விநாயகர் ரொம்ப அழகா தெரிஞ்ச கால கட்டம் அவை. விருதுநகரில் மாரியம்மன் கோவில் மற்ற ஊர் பில்ளையார் கோவில் போல் முக்குக்கு முக்கு இருக்கும். அந்தந்த கோவிலில் தெருவில் உள்ள பெண்கள் அதை காலையில் தண்ணி ஊற்றி கழுவி, ஆடை மாற்றி, மஞ்சள் குங்குமம் தடவி பூ வைக்கும் போது அந்த அம்மன்கள் ரொம்ப அழகாக தெரிவார்கள். மதங்களை கடந்து கடவுளகளும் கோவில்களும் அழகாக தெரிந்த காலங்கள் அவை. விருதுநகரில் மாரியம்மன் கோவில் மண்டகபடியை காண எல்லா மத மக்களும் வந்த் போன காலம் அது. முஸ்லீம் வீட்டு திருமண ஊர்வலங்கள் வீதியில் செல்லும் போது குதிரையில் பூக்களால் முகம் மறைக்கப் பட்டு செல்லும் மணமகனி பார்க்க சோத்து கையோடு ஓடுவோம்.

இப்போது நடக்கும் ஆண்மீக ஊர்வலங்களில் ஆண்மீகம் தெரியவில்லை மதம் மட்டுமே தெரிகிறது. அன்று எனக்கு அழகாக தெரிந்த கடவுள்கள் எல்லாமே பயங்கரமாக தெரிகின்றன. மனிதனின் மனங்களில் ஆண்மீகம் அற்றுப்போய் மதம் தலை தூக்கி விட்டது. கடவுள் என்கின்ற ஒருவர் இருந்தால் அவர் எல்லா மக்களுக்கும் பொதுவானவராகவே இருந்திருக்க கூடும், இருக்கக் கூடும். அப்படி இல்லாமல் பாகுபாடு கொண்டவர் என்றால் அவர் நிச்சயம் கடுவுளாக இருக்க முடியாது. இந்துவோ, முஸ்லீமோ, கிருத்துவரோ நம் கடவுள்களும் பிறர் கடவுள்களும் நம் கடவுள்களே. இப்போது நகக்கும் மத சண்டைகள் எல்லாம் ஆண்மீகத்தின் பேரில் நடக்கவில்லை பேராசையினால் நடப்பது. எந்த கடவுளும், எந்த புனித நூலும் இன்னொரு மதத்தையோ இன்னொரு புனித நூலையோ குறை கூறவில்லை! முட்டாள் மனிதர்களாகிய நாமே பேதம் காண்கிறோம். முட்டாள் மக்களே இப்போது நீங்கள் மார்க்கெட்டிங் செய்யும் மதம் என்னை ஆத்திகன் ஆக்கவில்லை என் போன்ற மனிதர்களை நாத்திகன் ஆக்குகிறது!!

கடவுள்களையும் மதங்களையும் மார்க்கெட்டிங் செய்து காசு பார்க்க சில ஜென்மங்கள் கிளம்பியபோதே கடவுள் இந்த பூமியை விட்டு கிளம்பி விட்டார். வழி விடுங்க காத்தாவது வரட்டும்!!!

No comments: