Tuesday 23 September 2014

காமராஜ் ... தலைவன் என்றொரு தமிழ் வார்த்தை ...

காமராஜ் ... தலைவன் என்றொரு தமிழ் வார்த்தை ...
*******************************************************************
*******************************************************************

திருப்பதியும் - ஸ்ரீரங்கமும்
*********************************

தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பழக்கமிருக்கிறது, சபரிமலை அய்யப்பன் என்ற கேரள மாநிலக் கோயிலுக்கும், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கும் தரும் முக்கியம் நமது தமிழகத் தெய்வங்களுக்கு தருவதில்லை.

இந்த பக்தி விசயம் தமிழகத்தை பொருளாராதரீதியாகவும் பாதித்து வருகிற ஒரு விஷயம். திருப்பதி ஏழுமலையானின் உண்டியல் வருமானம், பழனி திருக்கோயில் பெரும் வருமானத்தைவிட பல நூறு கோடிகள் அதிகம்.

காமராஜர் காலத்திலும் இதே நிலைதானிருந்தது. திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த தலைவர் இதை எண்ணி ஆதங்கப்பட்டார். ஆன்மீகத் திருக் கூட்டம் தன்மீது வசை பொழிந்தாலும் பரவாயில்லை என்று ஒதுக்கிவிட்டு தன் மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசினார் " தமிழ் நாட்டு பக்தர்கள் மிக அதிக அளவில் காணிக்கையை திருப்பதி கோயில் உண்டியலில் கொண்டுபோய் செலுத்துகிறார்கள். நம் நாட்டு ஸ்ரீரங்கம் எந்த வகையிலும் திருப்பதிக்கு குறைந்தது கிடையாதே... உங்கள் காணிக்கையை ஸ்ரீரங்க உண்டியலில் போட்டால் நம் நாட்டுக்கு பெரிய பயனாக இருக்கும். மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்குப் பயன்படும். நம்ம சாமியும் பெரிய சாமிதான்" என்பதே காமராஜின் வேண்டுகோள்.

அமைச்சரும் - நாற்காலியும்
**********************************

அந்த அமைச்சர் சார்ந்த துறையில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரு மனக்குறையிருந்தது. தனது அறைக்கு அழைத்து பேச வரும் அதிகாரிகளுக்கு ஆசனம் கூட தராமல், நீண்ட நேரம் நிற்க வைத்தே பேசிவிட்டு அனுப்பினார் அமைச்சர். அதிகாரிகள் இந்த மனக்குறையை முதல்வரிடமே முறையிடுவதென முடிவெடுத்து ஒரு அதிகாரியை காமராஜரிடம் அனுப்பினர். அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்து, வந்த விவரம் கேட்க, அவர் அமைச்சர் தங்களை அவமதிப்பது போல் நடந்துகொள்ளும் விசயத்தைக் கூறினார்.

கேட்ட காமராஜ், " அந்த தம்பி அப்படியா நடந்துக்கிறார், அது தப்பாச்சே" என சொல்லிய வண்ணம் அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்து தனது அறைக்கு வருமாறு கூறினார். அந்த அதிகாரிக்கு சங்கடமாகிவிட்டது, நேரிடையாக அமைச்சரிடம் கேட்டு கடிந்து கொள்ளப்போகிறார் என பயந்துவிட்டார். இதற்குள் அமைச்சரும் வந்துவிட்டார். அந்த அதிகாரி எழுந்து நிற்க, காமராஜ் " நீங்க உட்காருங்க!" என்று சொல்லியவண்ணம் வந்த அமைச்சரையும் பக்கத்து இருக்கையில் அமரச் சொல்லிவிட்டார். பின்னர் அமைச்சரின் துறை சார்ந்த ஒரு திட்டம் பற்றி விவாதிப்பது போல பேசி " சரி, நல்லா பார்த்துக்கோங்க!" என்று சொல்லி அமைச்சரை அனுப்பிவிட்டார்.

அமைச்சர் சென்ற பின்பு, அந்த அதிகாரியை பார்த்து " இனி நீங்க போகலாம்... உங்களுக்கு உரிய மரியாதை இனி கிடைக்கும்" என்று அனுப்பிவைத்தார். அதுமுதல் அமைச்சரின் நடவடிக்கையில் மாற்றம்.

முதல்வர் எவ்வளவு நளினமாக நடந்துக்கொண்டு தங்கள் உள்ளக் குமுறலைத் தீர்த்து வைத்தார் என்பதை எண்ணி அதிகாரிகள் அனைவரும் வியந்தனர்!!

No comments: