Thursday 25 September 2014

சாத்தூர் நயம் காராச்சேவு

சாத்தூர் நயம் காராச்சேவு
****************************************
சாத்தூர் காரசேவு பிரபலம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? 20 வருடத்திற்கு முன்பு சாத்தூர்ன்னு ஊர் பேரைச் சொன்னாலே அடுத்த வார்த்தை ‘சேவு’ன்னு ருசியோட வந்துடும்.அவ்வளவு ஃபேமஸ் சாத்தூர் நயம் காராச்சேவு. அதிலும்,‪#‎மு_செ_சண்முகநாடார்_கடை‬ காராச்சேவுன்னா பெருந்தலைவர் காமராஜர் முதல், கலைஞர் வரை ருசித்த பேர் பெற்ற கடை. சாத்தூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டுக்கு அருகே ரயில்வே பீடர் ரோட்டில் உள்ளது நூறு வருட பழமையான சண்முக நாடார்மிட்டாய் கடை. மூன்று தலைமுறை கண்ட இவர்கள் இன்றைக்கும் தங்களது நயம் சேவு தயாரிப்பில் துளிஅளவு கூட ருசி மாறாமல்,கண்ணும் கருத்துமாக பக்குவமாக தயாரிக்கிறார்கள்.
அதனால்தான் சாத்தூரிலிருந்து சென்னைக்கு இன்றும் பல அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கும், சினிமா கலைஞர்கள், நடிகர்கள் என பலருக்கும் இங்கிருந்து பார்சலாகப் போகிறது. குற்றாலம், நாகர்கோவில், கன்னியாகுமரின்னு இந்தப் பக்கம் செல்பவர்கள் சேவு பார்சல் வாங்கிக்கொண்டு செல்வார்கள். இந்தப் பக்கம் ஷூட்டிங் வரும் நடிகர்கள் கடைக்கே வந்து வாங்கிவிட்டுப் செல்வார்கள்.அவ்வளவு ருசி சாத்தூர் சேவுக்கு.
இந்த சேவில் சேர்க்கும் பூண்டு, பெருங்காயம் நன்கு செரிமானம் ஆகும். அதிகம் எண்ணெய் இல்லாமல் நாக்குக்கு ருசியோடு உடம்புக்கு நல்லதாகவும் இருப்பதால் நாலா பக்கமும் தேடி வருகிறார்கள். மாசி மாதம் தென் மாவட்டங்களில் உள்ள குலதெய்வக் கோயில்களுக்கு வர்றவங்க, சாத்தூர் சேவு வாங்கி

பிரசாதம் மாதிரி கொண்டு போவாங்க. இவ்வளவு ருசிக்கு கொடைக்கானல் பூண்டு ஒரு காரணம்.அதோட தரமான கைப்பக்குவமும், சுத்தமான கடலை எண்ணெய், கடலைமாவு போன்ற தரமான சேர்க்கை.
காரசேவுக்கு இந்த ஊர் பிரபலம் என்பதெல்லாம் ஒரு காலம். 1990களில் கூட இந்த ஊர்களில் காரசேவுக்கு என்று ஒரு கூட்டம் உண்டு, வெளியூர்களில் இருந்து எல்லாம் மக்கள் வரும்போது வாங்கி செல்வார்கள். மு.செ.சண்முகநாடார் அவர்கள் கடையில் இந்த காராசேவு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் செய்வார்கள், மீதமிருந்தால் அதை அடுத்த நாள் விற்பனைக்கு உபயோகிப்பதில்லை. பின்னர் எல்லோரும் காரசேவு செய்ய ஆரம்பித்தார்கள், ஆனால் பேராசையால் நிறைய செய்துவிட்டு, அதை விற்க முடியாதபோது அடுத்த நாள் போடுவதில் கலந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்போது இந்த காரச்சேவு பற்றி அவர்களுக்கு தப்பான அபிப்பிராயம் வந்து இதன் பெயர் கேட்டு போனது. மீதமிருந்தால் அதை அடுத்த நாள் விற்பனைக்கு உபயோகிப்பதில்லை என்பதால் மு.செ.சண்முகநாடார் கடை இன்றளவும் பிரபலம்.
ஒரு ஊர், சில மனிதர்களின் பேராசையால் அதன் தனித்துவத்தை இழந்துவிட்டது என்றே தோன்றியது. இன்று அந்த ஊருக்குள் எங்கு திரும்பினாலும் பாஸ்ட் புட் கடைகள், ஆனால் காராச்சேவு என்பதை தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. சாத்தூரிலும் நிறைய மக்கள் காராசேவுக்கு பிரபலம் என்பதல்லாம் ஒரு காலம் என்றே சொல்கின்றனர். ஆனாலும், இன்று இந்த சண்முக நாடார் கடை உள்ளது, அதுவும் பாஸ்ட் புட் கடையாக மாறும் முன் சென்று அந்த சுவையை அனுபவிதிடுங்கள் !
சாத்தூர் சேவுக்கு மட்டுமல்ல, சீனிமிட்டாய், கருப்பட்டி மிட்டாய்க்கும் பேமஸ்..

No comments: