Wednesday 24 September 2014

நாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள் - பாலமேடு நாடார் உறவின் முறை



நாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள்
****************************************************.
நாடார் உறவின்முறை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு ஜாதிச் சங்கம். பத்து பதினைந்து நாடார்கள் ஒரு ஊரில் குடியிருந்தாலே நாடார்கள் ஒரு உறவின் முறை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின் மெதுவாக அவ்வூரில் உறவின் முறைக்கு பொதுச்சொத்துக்கள் உருவாகும். அது ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, ஒரு ஆரம்பப் பள்ளியாகவோ கூட இருக்கலாம். ஏதோ நாடார்கள்தான் ஜாதி அடிப்படையில் ஒன்றுகூடுவதாகவும், அங்கிருக்கும் மற்றவர்களுக்கெல்லாம் ஜாதிய உணர்வே இல்லாதது மாதிரியும் “நாடானுக நாலு பேர் இருந்தாக் கூட, அவங்களுக்குள்ளே எப்படி கட்டுப்பாடா, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு ஒரு வழியாக எந்திரிச்சிராணுங்க” என்று அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் ஒரு மாதிரி புழுக்கமடையும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த ஊரைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரில் பலர், அந்த வட்டாரத்திலே மிகவும் செல்வந்தர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவ்வளவு செல்வமில்லாத, பிரபலமில்லாத ஒரு சிறிய நாடார் குழு சாதிப்பதை, மற்ற சமூகத்தினர் எண்ணிக்கையையும், செல்வத்தையும், பிரபலத்தையும் வைத்து சாதிக்கமுடியாது. “காமராஜர் இல்லாவிட்டால் இவர்களெல்லாம் இப்படி வந்திருக்கமுடியுமா? என்று பேசி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவாக இருக்குமென்றால், அந்த சிறிய உறவின்முறையில் கணிசமானோர் திராவிட இயக்கச் சார்புடையவர்களாக இருப்பார்கள்.
               
பாலமேடு நாடார் உறவின் முறையும் பத்ரகாளியம்மன் பால்பண்ணையும்
********************************************************************************
பாலமேடு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய பேரூராட்சி. மிகச் சிறிய குடியிருப்பாக இருந்த கடந்த காலத்தில், அங்கு ஐம்பதுக்கும் குறைவான நாடார் தலைக்கட்டுக்களே இருந்திருக்கின்றது. அந்த ஐம்பது தலைக்கட்டுகள் ஒன்றிணைந்து ஒரு உறவின் முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். உறவின் முறை வளர, வளர, உறவின்முறைக்கென்று தனியாக கடைத்தெரு, நந்தவனம், ஆரம்பப் பள்ளி, பால்வாடி, மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சினிமா தியேட்டர், இளைஞர்கள், பெண்களுக்கென்று தனியாக அமைப்புகள், அந்த அமைப்புகளுக்கென்று வருமான வாய்ப்புக்கள், நாள்தோறும் 10000 லிட்டர் பாலை பதப்படுத்தி, சந்தைப்படுத்த வசதிகள், 600க்கும் மேலான பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு, தொழில் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கும் நாடார் மாணவர்களுக்கு கணிசமான ஊக்கத் தொகை, மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி என்று உறவின் முறையின் செயல்பாடுகள் பிரமிக்க வைத்தன. பாலமேடு உறவின் முறை உருவாக்கிய பொதுச்சொத்துக்களின் மதிப்பே குறைவாக மதிப்பிட்டாலும் 10 -15 கோடிக்கு மேல் தேறும். இத்தனைக்கும் அந்த ஊரில் நாடார்கள் பெரும்பான்மையினரல்ல. எண்ணிக்கையில் அதிகமாயுள்ள, அதிகச் சொத்துவைத்திருக்கின்ற, அதிகம் படித்திருக்கின்ற பிற ஜாதியினர் சாதிக்க முடியாததை ஒரு சிறுபான்மை குழுவால் எப்படிச் சாதிக்க முடிந்தது? தென்மாவட்ட நாடார்கள் எதைத் தொடங்கினாலும், பத்ர காளியம்மன் பெயரில்தான் தொடங்குகின்றார்கள். அவர்களின் சாதனை அம்மனின் ஆசீர்வாதமாக இருக்குமோ? அந்த மாதிரி ஒரு துடியான தெய்வத்தின் அருள் மற்ற ஜாதியினருக்குக் கிடைக்கவில்லையோ என்னமோ?
அவர்களின் சாதனைக்கான காரணம் பத்ரகாளியம்மன் பால்பண்ணையில் அப்போது செயலாராக இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நாங்கள் நான்கைந்து பேர் சென்றிருந்தோம். சங்கச் செயலாளர் எங்களுக்கு தேநீர் வரவழைத்தார். அவருக்கு முன்னாள் தேநீர் டம்ளர் ஏதும் வைக்கப்படவில்லை. தேநீர் குடிக்கும்முன், மரியாதையின் பொருட்டு “அண்ணாச்சி உங்களுக்கு” என்று லேசாக இழுத்தேன். “உங்களுக்கு டீ வாங்கித் தரத்தான் எனக்கு அனுமதி. சங்கச் செலவில் டீ குடிப்பதற்கு எனக்கு அனுமதியில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறியபோது, பள்ளிவகுப்பே முடித்திருந்த, ஒரு தலைவனுக்குரிய தோற்றப்பொலிவு ஏதுமில்லாதிருந்த, சுருக்கம் விழுந்த பாலியஸ்டர் சட்டையை அணிந்திருந்த அந்த எளிமையான மனிதர், விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார். அப்பொழுது கிடைத்த ஞானம். “இது பத்ரகாளியம்மன் ஆசி அல்ல. நாடார்களின் சமூக ஒழுக்கம். அந்த ஒழுக்கம் காலப்போக்கில் உருவாக்கிய பரஸ்பர நம்பகத்தன்மை. அதுதான் நாடார் உறவின் முறையின் வலிமை. ஜாதி என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நிறுவன ஒழுகலாறுகள். பொதுவான விதிமுறைகள், உறுப்பினர்களிடையே சமத்துவம், விதிமுறைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது,….நாடார் உறவின் முறையை இன்னும் நன்றாகப் பார். காமராஜர் தான் காரணம் என்று சொல்லித்திரிந்ததாலேதான் பலருடைய கற்றல் நின்றுவிட்டது." என்று பொட்டில் அறைந்த மாதிரி பாலமேடு பலவற்றை புரியவைக்கும்.

No comments: