Monday 16 February 2015

நெஞ்சை பிளந்த செய்திகள் 1

கடந்த 6ம் தேதி (06-02-2015) கூடலூரில் பஞ்சர் கடை நடத்திக் கொண்டாருக்கும் இளம் தம்பதியர் துக்க வீட்டுக்கு சென்று திரும்பியுள்ளனர். இரவு 9 மணியாகி விட்ட படியால் கணவர் மனைவியை வெளியே நிறுத்தி வைத்துவிட்டு கூடலூர் டவுனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பார்சல் வாங்க சென்றுள்ளார். தனியாக வெளியே நின்ற அவர் மனைவியிடம் "போலாம் வர்றியா?" என நான்கு வாட்டசாட்டமான வாலிபர்கள் கேட்க. அந்த பெண் செருப்பை கழட்டியுள்ளார்!!

அந்த பெண்ணை அசிங்கமாக திட்டியபடி நான்கு பேரும் போதையில் அவரை நையப்புடைத்துள்ளனர். மனைவியின் அலறல் கேட்டு ஓடி வந்த கணவர் அவர்களை தட்டி கேட்க, போலீஸ் மேலேயே கை வைக்கிறியா என அவரையும் பூட்ஸ காலால் நையப்புடைத்துள்ளனர்! அதற்குள் சத்தம் கேட்டு பொது மக்கள் வர, அவர்களையும் மிரட்டியுள்ளனர். பிரச்சினை பெரிதாகவும் இருவர் ஓடி விட இருவர் பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர்! கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொது மக்கள அவர்களை பின்னி பெடலெடுக்க, அவர்கள் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டைக்காக வந்த ஆயுதப் பிரிவு காவலர்கள் என தெரிய வந்துள்ளது!! கூடலூர் டவுனில் கணவருடன் வந்த பெண்ணுக்கே இவர்களிடம் இந்த பாடென்றால், இவர்களிடம் அன்றாடம் சிக்கும் மலைவாழ் மக்களின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை!!!

அவர்களை காவல் நிலையத்தில் பின், மனைவிக்கு வலி அதிகமாக இருந்ததால் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கணவர். அங்கு அவரை சந்திக்க வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ," தம்பி நாலு விரலும் ஒரே மாதிரியா இருக்கு, அது மாதிரிதான் போலீசுலயும் சில நேரம் இப்படி ஆள் வந்துடுறாங்க! நீங்க உள்ளூர்க்காரர் நாளைக்கு நல்லது கெட்டதுக்கு ஸ்டேசனுக்குதான் வர வேண்டியிருக்கும்" என கூறி ஆயிரம் ரூபாய் பணமும் திணித்துள்ளார்!! ஆனால் கணவர் சம்மதிக்கவில்லை.

இதை நம்மில் பலரும் செய்தியாக படித்திருப்போம். இது வெறும் செய்திதானா?? இரவு ஒன்பது மணி ஒன்றும் அகால வேளையில்லையே? அதுவும் ஒதுக்குப்புறமான இடமில்லையே மக்கள் நடமாட்டமிருந்த டவுன்தானே? அந்த பெண் தனியாக செல்லவில்லையே? அந்த மிருகங்களும் ரவுடிகள் இல்லை காவலர்தானே? பஞ்சர் ஒட்டுபவர் மனைவி ஆபாசமாகவா உடை அணிந்திருப்பார்? துக்க வீட்டுக்கு சென்றவர் என்ன அலங்காரமா செய்திருப்பார்? ஆபாசமாக உடையணிந்தால் கையை பிடித்து இழுக்க தோணும் என அறிவுரை கூறும் நன்மக்கள் கூறப் போகும் நல்லுரை என்ன? பொண்டாட்டியை கூட்டிக் கொண்டு புருசன் வெளியே போகக் கூடாதென்பதா? நம்மூர் நன்குடியில் பிறந்த நன்மக்கள் பாதிக்கப்பட்டவருககு அறிவுரை வழங்குவதில் சிறந்தவர்கள்!!

என்ன மாதிரியான சமூகம்யா இது? இது போன்ற சம்பவங்களை கேள்விப்பட்டால் தங்கள் பெண்களுக்கு ஆயிரம் அறிவுரைகளை அள்ளித் தெளிக்கும் பெற்றோர் எவராவது இது போல் நடந்து கொள்ளக் கூடாது என மகனுக்கோ சகோதரனுக்கோ ஒரே ஒரு அறிவுரை கூறியிருப்பரா?! தன் பெண் எங்கும் சீரழிந்து விடக்கூடாது என பாதுகாக்கும் பெற்றோர் அதே அளவு அக்கறையை எந்த பெண்ணையும் சீரழித்து விடக் கூடாது என தன் மகனிடம் காட்டியிருப்பரா?! நாளைய சமுதாயம் இளைஞர்கள் கைகளில் இல்லை அவர்களை உருவாக்கும் நம் போன்ற இளம் பெற்றோர்களிடம் உள்ளது! உருவாக்குவோம் நல்ல சமுதாயத்தை.

No comments: