Saturday 14 February 2015

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா

 உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

சோழன் செம்பியன் எடுத்த திருவிழா
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் என்று புறநானூற்றுப் புலவர்  மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான்.



தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார்.

இந்திர விழா அல்லது காமன் விழா
தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் எனக் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.
மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழா‌விற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம்.

வில் விழா
காதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும் விதத்தில், அவ் வில்விழா என்றும் வழங்கப்பட்டுள்ளது.
கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள்.
சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை.



விழா ஏற்பாடுகள்
காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை பட்டியலிட்டு காட்டுகிறது. அது, விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும் அவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது.
காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான் என்பதில் இத்திருவிழாவிற்கு இருந்த மதிப்பும் ஏற்பாடுகளும் தெரியவருகின்றன.

விழா
இந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழா என்றும், வேனில் விழா என்றும் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது மதுரைப் பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.
காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி அரசாளும் என்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்று அறியப்படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.
பழங்கதைகளின்படி தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டினான் சோழன். அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான். அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.
அச்செய்தியை மணிமேகலை விழாவறை காதை விளங்குகிறது. அவ்விழாவை பற்றிய செய்திகளை, வான்மீகியும் காளிதாசரும் தத்தம் நூல்களில் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர், "மருத நிலத்திற்குத் தெய்வமாக விளங்கும் இந்திரனுக்கு, 'ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்' உள்ளிட்ட இன்ப விளையாட்டுகள் என்கிறார். ஆகையினால், "இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்" என வரைவு காண்கின்றார்.

கடற்கோள்
இத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா நின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது என்று நாட்டார் பழங்கதைகள் கூறுகின்றன.

குறிப்பு: இது ஒரு தொகுப்பு

No comments: