Thursday 26 February 2015

சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை பகுதி - 2

ஆதித்த சோழன் பல்லவர்களை தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைச் சோழ மண்டலமாக மாற்றினான். இவனுக்குப் பிறகு வந்த (907) முதலாம் பராந்தகச் சோழன் நான்கு புறமும் உள்ள எதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவன். தெற்கில் பாண்டியர், சேரர், வடக்கில் ராஷ்டிகூடர். இத்துடன் மற்றொரு புண்ணியவான் ஈழத்தில் உள்ள சிங்கள மன்னன். 






ஆனால் ஆச்சரியம் இத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக் கொண்டுருந்ததை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆனால் இன்று பெருமையாய் நாம் பேசிக் கொண்டுருக்கும் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் என்றைழக்கப்படும் ராஜகேசரி அருள்மொழிவர்மன் சோழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர். ஆனால் இவர் ஆட்சிப் பொறுப்பு (985) வருவதற்குள் இவருக்கு முன்னால் வலிமையற்று இருந்தவர்கள் உருவாக்கிய கரடுமுரடான பாதைகள், குடும்பக் குழப்பங்கள், மர்மமான இறப்பு, குடும்ப அரசியலால் உருவான சூழ்ச்சிகள் போன்றவை அனைத்தும் சரித்திரம் முழுக்க இருக்கிறது. கடந்த ஆறு நூற்றாண்டுகளாக இருட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறையூர் பகுதியிலிருந்த தங்களது எழுச்சிப் பயணத்தைத் தொடங்கினர். இங்கு ஆதிக்கம் பெற்ற விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி இந்த நகரை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சாம்ராஜ்யத்தின் விதையை ஊன்றினான்.






 சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்றும் பழைய மன்னர்களைப் பற்றியும் நாம் பாடப்புத்தகத்தில் படித்து வந்து இருப்போம். பாண்டிய மன்னர்களைப் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போகலாம், ஆனால் இந்தப் பாண்டிய சாம்ராஜ்யங்களுக்கு உள்ளே போகப் போகப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களே சோர்ந்து போகும் அளவிற்கு வண்டி வண்டியாக விசயங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. சோழர்களுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாண்டிய மன்னர்கள் (கிபி 1200 முதல் 1300 வரை) வீழ்ச்சியடைய முக்கியக் காரணம் குடும்பச் சண்டைகளே முக்கியமாக உள்ளது. இதுவே தமிழகத்தில் அந்நிய படையெடுப்பாளர்களைப் பாக்கு வெற்றிலை வைத்து வரவேற்காத குறையாக உள்ளே அழைத்து வந்தது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் இன்று வரையிலும் தமிழன் என்றால் ஒற்றுமை என்பது காததூரம் என்பது போலத்தான் இருக்கிறது. அப்புறமெங்கே இன உணர்வு, மானம், மரியாதை மற்ற விசயங்கள் எல்லாம்? 

மூலம்: தமிழர் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

No comments: