Saturday 7 February 2015

பெருந்தலைவர்-பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன் (பகுதி-2)

கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதைக் குறை கூறி இப்படி  தலையங்கம் எழுதியதாம்.
"ஏற்கனவே மக்கள் வரிச் சுமையால் அவதிப் படுகிறார்கள்.அப்படி இருக்க மதிய உணவு போடுவதற்கு என்று மேலும் ஒரு வரி எவ்வளவு சிறியதாயினும் முதுகெலும்பை முறித்துவிடும். சமுதாயத்தின் பொருளியல் நிலையை வளர்த்தால் மற்றதெல்லாம் சரியாகி விடும் " என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது 

   ஆனால் மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. காமராஜர் சொன்னபடி விரிவான திட்டத்தை பல்வேறு கூறுகளை ஆராய்ந்து திட்டம் தீட்டினார்  இயக்குனர் நெ.து.சு. கல்வித் துறைக்கு தீட்டப்பட்ட பிற திட்டங்களை ஏற்றுக்கொண்ட  உயர் அலுவலர் குழு மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் தயக்கம் காட்டியது. அவர்களுக்கு உரிய விளக்கங்களை அளித்தார் இயக்குனர்.

    விளக்கத்தை கேட்ட திரு வர்கீஸ் என்ற அலுவலர் "உங்கள் திட்டம் சிறப்பானதுதான். மாநிலம் தழுவிய அளவில் இப்படி ஒரு திட்டம் இந்தியாவில் எங்கும் நடத்திய படிப்பினை இல்லை. அதிக செலவு பிடிக்கும் இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை இந்திய அரசு கொடுக்கும் என்ற உறுதி இல்லை . நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பகல் உணவு திட்டத்தை மட்டும் ஒத்தி வைக்கலாமென்று இக் குழு பரிந்துரைக்கும் . அதற்கு இசையுங்கள் அடுத்த ஆண்டு யோசிப்போம் ' என்றார். 



      நெ.து.சு சம்மதிக்க வில்லை. விடாப்பிடியாக, "பள்ளிகளில் அதிகமான  பேர்கள் சேர வேண்டும் என்று தலைவர்கள் நினைக்கிறார்கள் . அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு மதிய உணவு இன்றியமையாதது 
"சேர்க்கைக் குறியீட்டை அப்படியே வைத்துக் கொண்டு வெற்றி பெற ஏழை பிள்ளைகளுக்கு சோறு போடுவது ஒன்றே வழி "மேலும் இலவச பாடநூல்,எழுதுபொருள் போன்றவை அதிக அளவில் உதவாது என்பதை கண்கூடாக கண்டிருக்கிறோம்.எனவே தயவு செய்து மதிய உணவு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று வாதாடினார் நெ.து.சு  

   குழுவினரோ தொடர்ந்து வெவ்வேறு காரணங்களை கூறி  மறுப்பு தெரிவித்தனர் . ஆனாலும் இயக்குனர் சளைக்கவில்லை கடைசி துருப்புசீட்டை வீசினார்  " இது முதலமைச்சரின் திட்டம் இதை நிறைவேற்ற வேண்டும் என்று முழுமனதாக நினைக்கிறார். தனியார் பள்ளி நிர்வாகிகள் மாநாட்டில் நாடறிய அறிவித்துள்ளார் அதற்காக புது வரி கூட போடலாம் என்று கூட தெரிவித்தார் . முன்னதாக என்னிடமும் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு திட்டம் தீட்ட சொன்னதும் அவரே"
மேலும் "நீங்கள் இது பற்றி ஒருமித்த கருத்து கொண்டிருப்பதால் திட்டத்தை கைவிட குழு கருதுகிறது, ஆனால் இயக்குனர் அடம் பிடிக்கிறார் என்று அறிக்கையில் எழுதி விடுங்கள் அது போதும் " என்றார் அழுத்தமாக 
இதற்கு பலன் கிடைத்தது .
"இது தொடர்பான முடிவை அமைச்சரவைக்கு விட்டு விடுவோம் அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதன் படி செய்வோம் . இதை இயக்குனர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் " என்றார் நிதிச் செயலாளர். 
திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை விட இதுமேல்  என்று இசைந்தார்  நெ.து.சு சில வாரங்களில் அமைச்சரவை கூடியது. கல்வித்துறை திட்டங்கள் பற்றி  ஆலோசனை தொடங்கியது 
   நிதிச் செயலர் தொடங்கினார், "கல்வித்துறை திட்டங்கள் சிறப்பாக தீட்டப்பட்டுள்ளன. தனித் தனியாக பார்க்கும்போது குறையேதும் இல்லை. புதிய திட்டமான பகலுணவு திட்டம் பற்றி மட்டும் நிதானமாக ஆலோசித்து முடிவெடுக்கவேண்டும் . இப்படி ஒரு திட்டத்தை எந்த மாநில அரசும் செய்ததில்லை. பல்லாயிரக் கணக்கான சிற்றூர்களில் சோறு போடுவதை கண்காணிக்க முடியுமா. அதற்கு எவ்வளவு பெரிய அமைப்பு தேவை எவ்வளவு செலவாகும்? செலவுத் தொகை ஆண்டுக்காண்டு பெருகிக் கொண்டே போகும் . பல சிக்கல்கள் கொண்ட இத் திட்டத்தை தொடங்குவதற்கு பதில் ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்துவதும் விரைவு படுத்துவதும் போதுமானது  என்ற கருத்தே நிலவுகிறது ." என்று முதலமைச்சரிடம் சொல்லிவிட்டு  திட்டத்தைப் பற்றி இயக்குனரை விளக்கச் சொன்னார்.
    நெ,து.சு நிதானமாக திட்டத்தை விளக்கினார் . அதன் அவசியத்தை வலியுறுத்தினர் ".................... இத் திட்டம் இருந்தால்தான் சேர்க்கை குறியீட்டை எட்ட முடியும், இல்லாவிட்டால் பழையபடி தொடக்கப் படிப்பும் ஏழைகளுக்கு  எட்டாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது." என்று முடித்தார். அமைச்சரவைக் குழுவுக்கு தலைமை தாங்கிய காமராசரோ, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியமோ வேறு அமைச்சர்களோ வாய் திறப்பதற்கு முன்பாக அங்கு இருந்த மூத்த செயலாளராகிய வருவாய்த் துறை செயலாளர் ஆர்.எம்.சுந்தரம் குறுக்கிட்டார் 
  "இது இன்று எனக்கு சம்பந்தம் இல்லாதது என்றாலும் ஒரு காலத்தில் இத்தகைய திட்டத்தோடு எனக்கு தொடர்பு இருந்து. நான் லேபர் கமிஷனராக இருந்தபோது  நலத்துறை பள்ளிகளில் இருந்த பகல் உணவு திட்டத்தை கண்காணித்திருகிறேன். அப் பள்ளிகளில் போட்ட பகல் உணவால்  கான்ட்ரக்டர்கள் பிழைத்தார்கள் , ஆசிரியர்கள் பிழைத்தார்கள். மாணவர்க்கு கிடைத்த பலன் கொஞ்சமே. ஓராயிரம் பள்ளிகளில் விரயம் ஆவதைப் பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டாமென்று சொல்வது என் கடமை . இத் திட்டத்தை கைவிடுவதே நல்லது." என்று முடித்தார்.

   உடனே காமராசர். "இயக்குனர் இதை குறித்துக் கொள்ளட்டும்  விரிவான ஆணை பிறப்பிக்கையில் மறந்து விடாமல் இதையும் ஆணையில் சேருங்கள் . கான்ட்ரேக்ட் முறையில் நடத்தக் கூடாது. வேறு வழியை யோசித்து சொல்லுங்கள் " என்று சொன்னதும் மீண்டும் சுந்தரம் சொன்னார் பாருங்கள்! அதைவிட ஆசிரியர்களை இழிவு படுத்த முடியாது  என்பது சந்தேகமே 

"மாணாக்கர்கள் சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்களே சாப்பிட்டு விடுவார்கள் . மாணவர்களுக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்" என்றார். 
முதலமைச்சர், கருனை மனதுடைய காமராசர்  இயக்குனரைப் பார்த்து சொன்னார் " உங்கள் திட்டத்தில் ஞாபகமாக ஒரு விதி சேர்த்துவிடுங்கள் . ஆசிரியர்களும் பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம்.அந்தக் கூடுதல் செலவு நியாயமானது ஏற்றுக் கொள்வோம்."
ஒப்பிட்டுப் பாருங்கள் கற்றுத் தேர்ந்த சுந்தரம் ஐ.சி.எஸ் இன் குறுகிய மனமும் படிக்காத மேதை காமராசரின் பரந்த மனதையும். 

இறுதியாக கொள்கை அளவில் பகல் உணவு திட்டம்  ஏற்கப் பட்டது.


    திட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக இயக்குனர் அவர்கள்  
தூத்துக்குடியில் ஒரு ஆசரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்  ".... தமிழ் நாட்டு கிராமப் பழக்கம் என்ன? பயிரிட்டு அறுவடை செய்து பின்னர் முதல் அளவை சாமிக்கும், இரண்டாம் அளவை ஊர்க் காவலர்க்கும் மூன்றாவது அளவை உறவினரளுக்கும் ஒதுக்குவது வழக்கம். இதில் சிறு மாறுதல் செய்யுங்கள் மூன்றாவது அளவையை பள்ளி அன்னதானத்துக்கு என்று  மாற்றுங்கள் ஏழை மாணவர்கள்  பசியாற உண்டு உங்களை வாழ்த்துவார்கள்.." என்று கூற அது  ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதோடு பொது மக்கள் மத்தியிலும் செய்தி பரவியது. கோவில்பட்டிக்கு அருகில் நாகலாபுரம் என்ற ஊர் மக்கள்  மதிய உணவுதிட்டத்தை செயல்படுத்த முனைந்தனர். இச் செய்தி காமராஜரின் காதுக்கு எட்டியது . இயக்குனரின் அருமையான பேச்சைப் பாராட்டியதோடு மேலும் பல ஊர்களுக்கு சென்று திட்டத்தை தொடங்கும்படி  முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று  பணித்தார்.
     இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்களுக்கு இத்திட்டத்தில் ஆர்வம் இல்லை. அதே சமயத்தில் எதிர்க்கவும் இல்லை . அவர் நெ.து.சு அவர்களிடம் "உங்கள் நிலை தர்ம சங்கடமானது . முதலமைச்சர் சொன்னதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும்.  நீங்கள் சொல்வதற்காக பல ஊர்களில் ஊர்க்காரர்களைக் கொண்டு தொடங்குவார்கள்.அப்புறம் மூடிவிடுவார்கள். உங்களுக்கு பழி வந்து சேரும் . இருந்தாலும் தொடங்குங்கள் ஆனால் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்." என்று அறிவுரை கூறினார் . கல்வி அமைச்சரின் வார்த்தைகள் கலக்கமூடின என்றாலும் முயற்சிகளைத் தொடர்ந்தார் . 

     கோவில் பட்டிப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் காமராசர் . அப்போது பலர் இயக்குனர் அவர்களின் வார்த்தைகளைக்  கேட்டு மதிய உணவு போடுவதற்கான ஆயத்தங்களை செய்து வைத்திருப்பதாகவும் இயக்குனர் வந்து தொடங்குவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முதல் அமைச்சரே இருக்கிறார் அவரே தொடங்கி வைக்கலாம். ஆனால் இயக்குனருக்க்காகக் காத்திருக்கிறோம் என்று சொன்னதும் சிறிதும் கோபப் படவில்லை காமராசர். சென்னைக்கு வந்ததும். " நெ.து.சு வை அழைத்து நிறைய ஊர்களில் பள்ளிகளில் மதிய உணவு போடா ஏற்பாடு  செய்து விட்டு உங்களுக்காக காத்திருக்கிறார்கள். உடனே சென்று தொடங்கி  வையுங்கள். அதைப் பார்த்து இன்னும் பல ஊர்களுக்கும் இத்திட்டம் பரவும் என்றார் அமைதியாக .

      எவ்வளவு பெரிய திட்டம் இதற்கு முன்னோடியான அவர் திறந்து வைக்காமல் தன்னை அனுப்ப நினைக்கும் காமராசரின் பெருந்தன்மையைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தார் நெ.து சு.
"ஐயா, இத் திட்டத்தை தங்கள் தொடங்கி வைப்பதே முறையானது .தக்க ஏற்பாடுகளை செய்து விட்டு தங்களை அழைக்க நினைத்தேன். தாங்கள் முந்திக் கொண்டு என்னை அனுப்புகிறீர்கள்.தயவு செய்து நீங்கள் வந்து மதிய உணவு மையங்களை திறந்து வைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். பலமுறை வற்புறுத்திய பின்னே காமராஜர் இசைந்தார். 

   முதலில் பாரதி படித்த எட்டயபுரம் மன்னர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் காமராஜரைக் கொண்டு பகலுணவு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது , ஆனால் எதிர்பாரா விதமாக முதலமைச்சர் சென்னையில் இருக்கவேண்டி இருந்ததால் இயக்குனரையே அனுப்பினார். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஊர்ப் பள்ளிகளில் பகலுணவு தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன .அடுத்த நாள் வருவதாக காமராசர் தெரிவித்தார்.

முதல் மையம் தொடங்கப் பட்டது. அடுத்த நாள் முதல் நிகழ்ச்சியாக ஒரு பாலத்தை திறந்து வைத்து விட்டு  அக்க கூட்டத்தில் பேசினார் முதலமைச்சர் காமராஜர். அங்கு பாலம் பற்றியோ போக்குவரத்து பற்றியோ அதிகம் பேசவில்லை .அவரது எண்ணம் முழுவதும் ஏழைக் குழந்தைகளில் கல்வி மீதே இருந்து .

"....... யாருக்காக விடுதலை பெற்றோம் கடையரும் கடைத்தேறவே விடுதலை. அது எப்படி சாத்தியமாகும் கல்வி இல்லாமல் .... பிள்ளைகள் வயிறு காய்ந்து கிடந்தால் படிப்பு எப்படி வரும் . பள்ளிக்கு வருகிற ஏழை பிழைகளுக்கு சோறு போட்டால் , நாம் தவறவிட்ட படிப்பு, வரும் தலைமுறைகளுக்காவது கிடைக்கும்....   எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதைவிட முக்கியமான வேலை எனக்கு வேறு இருப்பதாக நான் கருதவில்லை, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஊர் ஊராக வந்து பகல் உணவு திட்டத்துக்கு பிச்சை எடுக்கவும் சித்தமாக இருக்கிறேன்"  என்று உணர்ச்சி பொங்கக் கூற  கூட்டம் தன்னை மறந்து எழுப்பிய கைதட்டல் ஒலி அடங்க  வெகு நேரம் பிடித்தது.


இவ்வண்ணம்  மூவாயிரம் ஊர்களில் பகலுணவு திட்டம் தொடங்கியது.
தனது எண்ணம் ஈடேறிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். "பொது மக்களால் எது செய்ய முடியும் என்று தெரிந்து அதை அவர்களிடம் சொல்லத் தெரிந்தவர்" என்று நெ.து.சுவை மனமார பாராட்டினார் காமராசர். சில இடங்களில் இத் திட்டத்தை நெ.து.சு திட்டம் என்றே அழைத்தனர் .
    வேலூர் நாராட்சிப் பள்ளிகளில் பகலுணவு திட்டம் செயல் படுத்த வேண்டுகோள் விடுக்கப் பட்டது .  நோட்டீசில் நெ.து.சு.வின் பகல் உணவு திட்டத்திற்கு உதவுங்கள் என்று அச்சடிக்கப் பட்டிருந்தது, அது முதல்வரின் கவனத்திற்கு வந்தது . அந்த நோட்டீசை பார்த்தார் காமராஜர் நெ.து.சு திட்டம் என்று அடிக் கோடிடப் பட்டிருந்தது. 

முதலமைச்சர் கோபம் கொள்ளவில்லை மாறாக, "பகல்  உணவு திட்டம் நடக்கிறது. அரசு அதற்கு பொறுப்பேற்கவில்லை. செலவு செய்யவில்லை. தடுக்கவும் இல்லை. இயக்குனருக்கு கட்டுப் பட்டு நடத்துகிறார்கள். அப்புறம் அவர் பெயரில் நடந்தால் எப்படிக் கசந்து கொள்ளலாம்" என்று நிதி அமைச்சர் காதில் விழும்படி கூறினார். காமராஜரின் உயர்ந்த உள்ளத்தை என்னென்பது. இப்படியும் ஒருவர் இருக்கமுடியுமா?

இன்னும் பல்வேறு நடைமுறைகளுக்குப் பின் 01.11.1957 முதல் பகல் உணவுத் திட்டம் அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாகிவிட்டது .

இன்னும் இத்திட்டம் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 57 ஆண்டுகளுக்குப் பின் நிலை எப்படி இருக்கிறது? இன்று மதிய உணவு சத்துணவாக மாற்றம் பெற்றுள்ளது, தினந்தோறும் முட்டை வழங்கப் படுகிறது, நகர்ப் புறங்களில் சத்துணவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும். இன்றும் இதை நம்பி வரும் ஏழைக் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பல்லாயிரம் பேரை பள்ளிக்கு வரவழைத்த பெருமை காமராஜர் தொடங்கிய பகலுணவு திட்டத்தையே சாரும்.

அதை உறுதியாக செயல்படுத்திய டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் .


நன்றி:  நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்"

No comments: