Sunday 8 February 2015

அது ஒரு கனா காலம்-தமிழர் தேசம்

 தமிழர்களின் வரலாற்றில் தொடக்கத்தில் இடம் பிடித்த அத்தனை மன்னர்களும் சமய மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும், தன்னம்பிக்கையின் உருவகமாகவும் சிறந்த புத்திசாலிகளாகவும் தான் காட்சியளிக்கின்றார்கள். “கிமு 5 ஆம் நூற்றாண்டில் புத்தரின் சமகாலத்தில் சோழ நாட்டுத் தலைநகராம் பூம்புகாரில் இருந்து கிளம்பி ஆயிரக்கணக்கான மைல்கள் விரிந்து கிடக்கும் 16 வட இந்திய அரசுகளின் மேல் படை எடுத்து நடத்திச் சென்றான் கரிகாற்பெருவளத்தான். எதிர்த்தவர்கள் அனைவரையும் வென்றான். அவனை அடி பணிந்த வஞ்சிர, மகத, அவந்தி நாடுகள் முறையே கொற்றப்பந்தர், பட்டிமண்டபம், தோரண வாயில். இந்த நாடுகளை ஆண்டு கொண்டு இருந்த மன்னர்கள் கரிகாலன் காலடியில் தங்கள் ஆளுமையில் உள்ள நாடுகளை காணிக்கையாக்கி சமரசம் செய்து கொண்டனர். இறுதியில் கரிகாலன் இமயத்தின் உச்சி வரையில் சென்று அங்குத் தமிழர் இலச்சினையைப் பொறித்துத் திரும்பினான். கரிகாலனின் இந்த இமாலாய வெற்றியை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்கள் விரிவாகக் காட்டுகின்றன. இவனே உலகத்தின் முதன் அணைக்கட்டாகிய கல்லணையைக் காவிரிக்கு குறுக்கே கட்டியவன்.




 பாண்டிய நாட்டை 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவர இரண்டு பேரரசர்களும் ஐந்து சிற்றரசர்களும் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்தனர். ஆனால் அப்போது அரியனையில் வீற்று இருந்தவன் இளைஞனுக்கும் சிறுவனுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள நெடுஞ்செழியன். அவனுடைய அறைகூவலை படித்துப் பாருங்கள்? “நாடு பிடிக்க வந்த பகைவரை நான் சிதறடிக்காவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும். யாசிப்போர்க்குத் தானம் செய்ய முடியா வறுமை என்னைச் சூழட்டும்” சேரன், சோழன் இரண்டு பேரரசுகளையும், தித்தியன், எழினி, எருமையூரன், இருங்கோவண்மான், பொருநன் ஆகிய ஐந்து சிற்றரசர்களையும் சிதறடித்துப் பாண்டிய ராஜ்யத்தைக் காப்பாற்றினான். 2000 ஆண்டுகளுக்கு முன் இளைய வயதுக்குக் கீழ் இருந்த அவனை “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்று வர்ணித்த சங்கத்தமிழ் இலக்கியத்தில் உள்ள நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி இரண்டுக்கும் “பாட்டுடைத்தலைவனாக” புகழடைந்தான். 




ஆனால் இந்தச் சங்ககாலத்து சோழ மரபு கி.பி.250க்குப் பிறகு வரலாறு சுவடின்றி மறைந்து போனது. அதற்குப்பிறகு, 600 ஆண்டுகள் அந்நியர்களின் ஆட்சி உருவானது. இறுதியில் 300 ஆண்டுக் காலப் பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 96 விழுப்புண்களை மார்பில் பெற்ற விஜயாலன் (கிபி 850) சோழர் காலத்தை உருவாக்கி போட்ட ராஜபாட்டைத் தான்பின்னால் வந்த இராஜராஜ சோழனும், இராசேந்திரனும், குலோத்துங்கனும் வந்து சோழப் பேரரசை உலக வல்லரசாக்க சாத்தியமானது. புதிய கட்டிடக்கலை நுட்பத்தை அன்றே உலகிற்குப் படைத்த தஞ்சை பெரிய கோவில் தந்தவர் யார் தெரியுமா? இந்த விஜயாலனின் பேரன் ராஜராஜன்.(கிபி 985 /1014) நவீன உபகரணங்கள் இல்லாமல் உருவாக்கிய கலைச்சிற்பத்தையும், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களின் மூலம் உருவாக்கப்பட்ட தஞ்சை பெரியகோவிலின் அற்புத வினோத வடிவங்களையும் எந்த மேல் நாட்டுப் படிப்பு மூலம் இவர்கள் கற்றார்கள்? இன்றைய நவீன கட்டிடக்கலை எங்கள் மெய்ஞான அறிவுக்கு நிகர் ஏது? என்று பறைசாற்றியவன். விஞ்ஞானம் வளராத காலத்திலும் தன் திறமைகளை, ஆளுமைகளை நிரூபித்தவன். ராஜராஜனின் புதல்வன் இராஜேந்திரன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் 3000 கடல் மைல்கள் தாண்டி பிடித்த அத்தனை தேசங்களிலும் புலிக்கொடி பறக்க வைத்தவீர மன்னன். அவன் வென்ற நாடுகளின் பட்டியல்களை படிக்கும் போது பரவசமாய் இருக்கிறது. கடல் பயணம், நான்கு வகையான படைகள், ஆள், அம்பாறை, சேனை, எடுப்புத் தொடுப்புகள் என்று படையெடுத்துச் சென்ற போது இதற்காக உருவாக்க வேண்டிய மொத்த முன்னேற்பாடுகளையும் இப்போது உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள். நினைத்தே பார்க்க முடியாத ஆச்சரியங்கள். மன்னர்களின் வாழ்க்கை என்பது வீரம். வீரத்துடன் கூடிய அர்ப்பணிப்பு. இறுதியில் இந்த அர்பணிப்பு என்பது தான் மன்னரின் மொத்த ஆளுமையின் உருவகம். ஒவ்வொரு தமிழ் மன்னர்களும் இவ்வாறு தான் வாழ்ந்து மறைந்தார்கள். 


மேலே சொன்ன உதாரணங்கள் வீரம் என்பதன் குறியீடாக வைத்து வாழ்ந்து உதாரணங்கள் ஆகும். மற்றொன்றையும் பார்த்து விடலாம். தங்கள் தன்னம்பிக்கை வழியே வாழ்ந்து வரலாறு படைத்த உதாரணம் இது.

குலோத்துங்கச் சோழனிடம் அரசவைப்புலவராக இருக்கும் தன்னுடைய தந்தையின் சோர்வைக்கண்டு மகன் கலக்கமுற்றுக் காரணம் கேட்டான்? மன்னன் தன்னிடம் கேட்ட மூன்று கேள்விகளுக்குத் தன்னால் பதில் அளிக்கமுடியவில்லை என்றதும் நான் நாளை வந்து சொல்கிறேன் என்று சென்றான் அந்தச் சிறுவன். இறுதியில் திருக்குறள் மூலமே அதை வென்றான். வானத்தை விடப் பெரிது ? செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது உலகத்தை விடப் பெரியது ? சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது கடலை விடப் பெரியது ? பயன்தூக்கர் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. சிறுவன் மந்திரியாகப் பதவியேற்றான். தன்னுடைய 63ம் வயதில் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் தான் இவர். கற்கோவில் மூலம் சிற்பக்கலையைப் பறைசாற்றியவன் அருள் மொழி என்ற இராஜராஜ சோழன் . தமிழர்களின் இலக்கியக் கலைசிறப்பை மேம்படுத்த புதிய சொற்கோவில் கட்டியவர் தான் இந்தச் சேக்கிழார் .

கரு: தமிழர் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

No comments: