Saturday 14 February 2015

தமிழர் தேசம் - தமிழ்

“இங்கே வந்துருக்க ஆல் வ்யூர்ஸ்க்கு நமஸ்தே அண்டு குட்மார்னிங். நைன் ஏஜ்ல கலக்கல் பர்பார்மன்ஸ் கொடுத்துட்டுப் போயிருக்கக் குட்டீஸ்களின் சிங்கிங் பாத்து நீங்க என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வாட்ச் பண்ணிக்கிட்டுருக்க ஜட்ஜ்டோட கமெண்ட்ஸ் நல்லா கலர்புல்லா இருக்குது. உங்களோட கிளாப் நல்ல மகில்ச்சியைத் தந்தது போல நம்ம சீப் கெஸ்ட் ஒரு சாங் பாடி நமக்கு ஹேப்பியை தருமாறு கேட்டுக்கொல்கிறன்” அசாத்திய திறமை படைத்த குழந்தைகளைத் தனது சூரத்தனத்தால் வழி நடத்தும் இந்த ஊடக தமிழ் மொழி உங்களையும் என்னையும் வந்து “காது குளிர” வைத்துக் கொண்டுருந்தாலும் தமிழ் மொழியின் ஈரம் இன்னும் குறையவில்லை. நடைமுறைத் தமிழ் எத்தனை இருட்டுக்குள் இருந்தாலும் தமிழரின் தமிழ் மொழியின் வீச்சை இன்று வரையிலும் எவராலும் நிறுத்த முடியவில்லை.


 இன்று ஆங்கில வழிக் கல்வி கூடங்களில் தமிழ் உள்ளே பேசினால் தண்டணைக் கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்ன போதிலும் அத்தனை மம்மிகளும் கும்மியடித்துக்கொண்டே சென்ற போதிலும் இன்றும் தமிழ் அழியவில்லை. “தமிழ் படித்து என்ன ஆகிவிடப்போகிறது” என்று “தமிழ் மணம்” வீசினாலும் சரி தமிழ்மொழி என்பது இன்று வரையிலும் உங்கள் விழி போல் ஓளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது. உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது. இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள்.


 இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? சற்று ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் வெளி உலகம் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில்இருக்கின்றான்.


எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய்ப் புடம் போட்டு பார்த்து இருக்கிறது. ஆனாலும் இந்தத் தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது. 


அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாகக் கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளைத் தந்த எகிப்தியர்களின் எகிப்து மொழி எங்கே போயிற்று? 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று திணிக்கப்பட்ட இந்த மொழி இன்று எங்கே போயிற்று? மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை?





 புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு. இவையெல்லாம் காத்து இருப்பு பட்டியல் அல்ல? காணாமல் போன மொழிகளின் பட்டியல்? ஆனால் தமிழனின் தமிழ்மொழி? இன்று வரையிலும் உரித்துக்கொண்டே உடைந்து கொண்டே உருமாறிக்கொண்டே தன்து பயணத்தைப் படித்துறையில் அமர்ந்து கொண்டு நாம் பார்க்கும் ஜீவநதி போல் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. தமிழ் மொழியின் ஈரம் குறையவில்லை. அதன் மூலம் மாறவில்லை. முகவரி மாறி உள்ளதே தவிர முகத்தில் ஒப்பனைகள் சேர்ந்து உள்ளதே தவிர அழகு குறையவில்லை. 


இன்று வரையிலும் எத்தனையோ நல்லவர்கள் உள்ளே வந்து வளர்க்கின்றோம் என்று தங்களை வளர்த்துக்கொண்டார்களே தவிரத் தமிழ் வளர்க்கவில்லை. தமிழ்த் தாய்க்கு வளர்ப்புத் தாய்த் தேவையில்லாமல் சுயமாகச் சுயம்புவாக நம்மைக் காத்துக்கொண்டு இருக்கின்றாள். அதன் வீச்சை குறைக்க முடியவில்லை. உள்வாங்குதல் குறையவில்லை. நாவில் வருவது குழந்தை தமிழாக இருக்கட்டும். உளறல் தமிழாக இருக்கட்டும். தங்கிலீஸாக இருக்கட்டும். தடுமாற்றத் தமிழாக இருக்கட்டும். ஆனால் இன்னமும் அழியவில்லை. அழியாது. கெட்டுப்போயுள்ளது. நம்மை விட்டுப் போய்விட வில்லை. இன்னமும் உரித்துக்கொண்டே பயணித்துக்கொண்டு இருக்கிறது. நம்மை மொத்த தமிழினத்தை இணைத்து வைத்துக் கொண்டிருக்கிறது.


 எத்தனை கோபக் கணைகளைத் தமிழ் திரைப்படங்களை நோக்கி உங்கள் பார்வை பாய்ந்தாலும் உலகமெங்கும் உள்ள அத்தனை தமிழனத்தையும் நல்லவிதமாகக் கெட்டவிதமாகத் தன்னுடைய மூல மொழியை இது உன்னுடைய முகவரியின் மொழி என்று நினைவில் வைத்து இருக்க உதவிக்கொண்டுருப்பவர்கள் இந்த ஊடக பிரம்மாக்கள் தானே? ஒருவரை சந்திக்கும் போது பேசுவது ஆங்கிலமாக இருக்கட்டும். வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் சிந்திப்பது தமிழ் தானே? தமிழ் மொழி என்றால் விழி மருகி அக்கம் பாக்கம் பார்த்துக்கொண்டே பயந்து கொண்டே பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடிபவர்களும், மருகி பார்வை பார்ப்பவர்களும் விரும்பு நாயக நாயகிகளை எந்த மொழி கொண்டு கனவில் கட்டிப்பிடிக்கிறார்கள்?


 தமிழனின் தாழ்வு மனப்பான்மை ஒரு பக்கம் கிடக்கட்டும். உண்மையான தமிழ் மக்கள் விரும்பும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக மாறித் தொலையட்டும். கற்பித்துக் கொடுத்துக்கொண்டுருக்கும் ஆங்கிலம் மூலம் அத்தனை கலப்பின சிந்தனைகள் உருவாகட்டும். இருந்த போதிலும் உங்களால் தமிழ் மொழியை விட்டு விலகிச் சென்று விடமுடியாது. கிராமத்தில் கடைக்கோடி தமிழன் வாழ்க்கை அழியும் வரையும், மண் மூடி மேடாக மாறும் வரையும் இந்தத் தமிழ் மொழி வாழ்க்கையை எவராலும் அழித்து விடமுடியாது. திருக்குறள் மொழி திக்குவாய் மொழியாக மாறியுள்ளதே தவிர இருட்டு மொழியாக மாறி விடவில்லை. காரணம் அழிந்து விடக்கூடிய பட்டியலில் தமிழ் மொழி இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒப்பாறி போல் உங்களை என்னையும் வந்து அடைவது இது தான் முதல் முறையா? தமிழ் வளர்ந்து வந்த விதத்தைப் பாருங்கள்.



 ஓவியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட மொழி, 
கல்வெட்டுத்தமிழ், 
ஓலைச்சுவடித்தமிழ், 
மன்னர் தமிழ், 
சங்கத்தமிழ், 
தீந்தமிழ், 
செந்தமிழ், 
பாகவதர் தமிழ், 
பராசக்தி தமிழ், 
பெரியார் தமிழ், 
மெட்ரிகுலேசன் தமிழ், 
ஆங்கிலத் தமிழ், 
இன்று அலறும் ஊடகத்தமிழ். 

தமிழ் மெல்லச் சாகாது. காரணம் தமிழனின் கோணல் சிந்தனைகளைக் கண்டு நாணி கோணி ஒதுங்கிவிட மாட்டாள் இந்தத் தமிழ்த்தாய்.

மூலக் கரு: தமிழ் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

No comments: