Thursday 19 February 2015

விருதுநகர் புரோட்டா

             ஊர் பேர் சொன்னால் அந்த ஊரின் சிறப்பு, அங்கு வாழ்ந்த தலைவர்கள் பெயர் தெரியுதோ இல்லையோ அந்த ஊரின் முக்கிய உணவு எது என்பது பலருக்கு தெரிந்து இருக்கிறது, விருதுநகர் காமராஜர் பிறந்த ஊர் என்பதற்கு அடுத்தபடியாக அதன் புரோட்டா சால்னாவிற்குத்தான் ஃபேமஸ்புரோட்டாவுடன் சால்னா, கோழி கறி, புறா கறி என சைடுடிஸ்ஸாக பயண்படுத்திவருகின்றனர். விருதுநகர் புரோட்டா என தமிழகம் முழுவதும் ஹோட்டலில் சாப்பிட கிடைத்தாலும் விருதுநகரில் வந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்,




60 வருடங்களுக்கு முன் தெப்பத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால், சுற்றியுள்ள புரோட்டா கடைகளில் ஊர் முதலாளிகள் (TKSP, VVR, MSP - ஊர் பெரிய மனிதர்களின் பெயர்ச்சுருக்கம்) அனைவரையும் பார்த்துவிடலாம் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள். ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் ஏகபோக உரிமையாக இருந்த புரோட்டா சால்னா இப்போது அனைவரும் புசிக்கக் கூடியதாக மாறிவிட்டது. சாயங்காலம் 5 மணி முதல் எல்லா புரோட்டா கடைகளிலும், புரோட்டா கிடைக்கத் துவங்கும். முன்பெல்லாம் பெண்கள் கடைக்குச் சென்று சாப்பிடமாட்டார்கள். வீட்டு ஆண்கள் வாங்கி வருவதற்காகக் காத்திருக்க வேண்டும். எங்கள் மாமா. சித்தப்பா வயர்க்கூடை சகிதம் புரோட்டா வாங்கக் கிளம்பிய தினங்கள் இன்றும் பசுமையாய். இப்போ அப்படி அல்ல மாறி விட்டது. முக்கால்வாசி கடைகளில் family room வந்து விட்டது.




இன்றும் எப்போது விடுமுறைக்கு ஊருக்குச் சென்றாலும் கட்டாயம் புரோட்டா கடைக்கு சென்று விடுவோம். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பர்மா கடை, கமாலியா, அசன் கடை, அல்லா பிச்சை கடை. பெரிய பாய் க்டை என எந்த கடைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். எல்லாக் கடையிலும் அதே சுவை கிடைக்கும். மொறு மொறுவென்று புரோட்டா. அதற்கு தொட்டுக்கொள்ள சால்னா. சீக்கிரம் சென்றால் மட்டுமே கிடைக்கும் மட்டன் சுக்கா. இதைச் சாப்பிடுவதில் ஒரு டெக்னிக் இருக்கிறது. புரோட்டாவைச் சால்னா தொட்டு சாப்பிடக்கூடாது. சர்வரே பிய்த்துப்போட்டு மேலே சால்னா ஊத்தி எடுத்து வருவார். உங்கள் முகத்தைப் பார்த்தால் வெளியூர்க்காரர் என்று தெரிந்தால் பிய்த்துப்போடமாட்டார் - hygiene reasons க்காக நீங்கள் மறுக்கலாம். ஆனால் அவரே பிய்த்துப் போட்டு தருவதில்தான் டேஸ்ட் அடங்கியுள்ளது. அந்த மட்டன் சுக்கா - அடேங்கப்பா - டிவைன் என்பார்களே அந்த ரகம். சான்ஸே இல்லை. அண்ணாச்சீ அந்தக் கறிய எப்டிண்ணாச்சி வேக வக்கிறீங்க?? saute, marinate என்று என்னென்னவோ சொல்கிறார்களே - எல்லாமே பிச்சை வாங்க வேண்டும்.


           
  மற்ற ஊர் கடைகளில்  தோசை கல்லில் சப்பாத்தி சுடுவது போல் புரோட்டா சுடுவார்கள், ஆனால் விருதுநகர் புரோட்டா என்பது பூரி சுடுவது போல் எண்ணையில் பொறித்து எடுப்பது, ஆனால் இருப்புசட்டியில் போட்டு எடுக்காமல், இதற்கு என சிறிது குழிபோன்று அமைப்பு உள்ள தோசை கல் உள்ளது. அதில் நடுவில் நல்லெண்ணை விட்டு கொதித்தவுடன், புரோட்டாவை அதில் போடுவார்கள், புரோட்டா எண்ணையில் பாதி அளவு மூழ்கிய நிலையில் தோசைகல்லின் சூடும் புரோட்டாவில் படும்.



       கல்லின் சூடும், எண்ணையின் சூடும் ஒரு டூ-ன்-ஒன் போன்று சுடவைக்கப்படும்,
சுட்டு எடுத்த புரோட்டா மொறு மொறு என இருக்கும்,  அதில் சால்னவை ஊற்றி சாப்பிட்டால் சாப்பிடவர்கள் ருசியை மறக்கவே மாட்டார்கள். இத்துடன் புறா ரோஸ்ட், காடை வருவல் என சாப்பிடுவார்கள்.


   வெளியூர் மக்களுக்கு பெரிய கடைகள் மட்டுமே தெரியும், ஆனால் பெரிய கடைகளை விட தெப்பத்து மேட்டில் விலை குறைவாக ருசி அதிகம் உள்ள சின்ன கடைகளும், பிளாட்பார கடைகளும் விருதுநகரில் உண்டு.




ஆனால், வெளியூர்காரர்களுக்கு விருதுநகர் புரோட்டா என அழைத்தாலும், விருதுநகரில் இந்த புரோட்டாவை எண்ணைபுரோட்டா என்றே சொல்லுவார்கள்.   சைவ உணவு சாப்பிடுபவர்களும் இந்த எண்ணை புரோட்டாவில் சாம்பார் ஊற்றி ஊறவைத்து பின்னர் தேங்காய் சட்டினி, மல்லி சட்டினி என தொட்டு சாப்பிடுவார்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்களும் சாம்பார் ஊற்றி சைட்டிஸ்ஸாக மட்டன், சிக்கன், என வாங்கி சாப்பிடுகிறார்கள்.

     
இன்னொரு விஷயம் விருதுநகர் புரோட்டா கடைகளில் காணப்படும் கஸ்டமர் சர்வீஸ். அரைமணி நேரம் ஏன்னு கேக்க ஆளில்லாம திருதிருன்னு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க அவசியமில்லை. அதே போல் சும்மா சும்மா சால்னா கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம். நாம் சால்னா கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'தம்பி அண்ணாச்சிக்கு சால்னா ஊத்து' என்பார் அண்ணாச்சி. ஆனா என்ன ஒரு சின்ன விஷயம்னா சொன்ன அண்ணாச்சிக்கு 50, 60 வயசு இருக்கும். ஆனால் எல்லா வயதினரும் அக்கா, அண்ணாச்சி தான் அவருக்கு. எங்கள் ஊர்ப்பக்கம் சென்றால் புரோட்டா கடைக்குப் போகாம வந்துராதீங்க. ஜென்மம் சாபல்யம் அடையாது 


விருதுநகரில் எண்ணெய் புரோட்டா, புறாக்கறி போல ஆஞ்சநேயவிலாஸ் ஹோட்டலும் பெயர் பெற்றது. ஆதியில் வந்ததாக பெரியப்பா (ரெகுலர் கஸ்டமர்) கூறி அழைத்துச் செல்வார். இன்றும் பழைமை நிலை மாறாமல் அதே டேபிள், அதே உணவு வகை என்று தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டுள்ளது. அதற்குப் பிறகு தன லெட்சுமி ஹோட்டல், பர்மா கடை என்று தோன்றி னாலும் நான் ஆஞ்சநேய விலாஸ் ரசிகர் என்று சொல்ல ஒரு கூட்டம் உள்ளது.

       குறிப்பு:
         புரோட்டா இன்று மக்கள் விரும்பி சாப்பிடாலும், இது சத்தான உணவு அல்ல, அது மட்டும்மல்லாது புரோட்டா சாப்பிட்டால் சக்கரை நோய் வரும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது, எனவே புரோட்டாவை தவிர்ப்போம்...... 

No comments: