Tuesday 24 February 2015

தமிழர் தேசம் - வர்ணாசிரம சூழ்ச்சியில் சான்றோர்கள்

வர்ணாசிரம வர்க்க பேதங்களை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடு வைத்திருந்தனர். அதைத் தாண்டி வர முடியாத அளவிற்குத் தந்திரமாக அது சார்ந்த பல விசயங்களையும் உருவாக்கி வைத்து இருந்தனர். மீன்களும், மான்களும் கூட வலையில் இருந்து தப்பிவிடக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால் இந்த மதம், சடங்குகள் போன்ற வலைக்குள் விழுந்தவர்கள் தான் விழுவதோடு தன்னுடைய அடுத்து வரும் தலைமுறைகளையும் சேர்த்து விழ வைத்து விட்டு சென்று விடக்கூடிய சக்தி படைத்தது. இதைத்தான் நம்முடைய மன்னர்களின் வரலாறு மற்றும் அவர்களால் ஆளப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. மன்னர்களாக வாழ்ந்தவர்கள் இந்தக் கோவில்களுக்குக் கொடுத்த முக்கியவத்தை அடுத்த மன்னர்களுக்குக் கொடுக்காத காரணமும், ஒற்றுமையை விரும்பாத காரணங்களும் தான் பல சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போகக் காரணமாக இருந்தது. இதன் காரணமாக உருவான பிரச்சனைகள் தான் மக்களின் நல வாழ்வு என்பதை விட அடுத்தவனை ஜெயிப்பது எப்படி? என்று ஆள்பவர்களின் புத்தியும் மாறத் தொடங்கியது. வஞ்சமும் சூழ்ச்சியும் முன்னேறிச் செல்ல கடைநிலை மனிதன் வரைக்கு நாகரிகம் மறைந்து நரிக்குணம் மேலோங்கத் தொடங்கியது.

ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி அதிகாரத்திலும் வந்தமர்ந்த பிராமணர்கள் மொத்த போக்கையும் மாற்றத் தொடங்கினர். முத்தாய்ப்பாக மன்னர்களுக்குப் புனைப்பெயர் முதல் புழுகுணி கதைகள் வரைக்கும் சூட்டி அழகு பார்த்தனர். அவரவர் வம்சத்தையும் தெய்வ வம்சத்துடன் சேர்த்துக்கூறி அவரவருக்குக் குலப்பெருமை என்றொரு வட்டத்தைக் கொண்டு வந்தனர். இம்மை, மறுமை, புண்ணியம், பாவம், முன் ஜென்ம பலன் என்று ஒவ்வொன்றும் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. நாடார்களின் தொடக்கப் பாரம்பரிய தொழிலான இந்தப் பனைமரத்திற்கு ஒரு புருடா கதை ஒன்று இந்தச் சரித்திரத்தில் உள்ளது. பனைமரச்சாறு தேவர்களின் தேவாமிர்தமாகப் பூமியில் கொட்டிக் கொண்டிருந்தது. புனித மந்திரங்களைத் தொடர்ந்து ஜெபித்ததால் அப்புனிதச் சாறு அடங்கிய மரத்தின் தலைப்பாகம் பூமிக்கு நேராக விருப்பம்போல வளைந்து கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் தாரளமாக வடியத் தொடங்கியது. ஆனால் ஷத்திரியன் ஒருவன் தெய்வங்களை அவமதித்து விட்டான். அதாவது பிராமணார்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை அவன் உச்சரித்த காரணத்தால் தெய்வ நிந்தனை ஆகிப் போனது. அன்று முதல் பூமிக்கு நேராகத் தலைவணங்கி அமுத்தத்தைத் தந்த வந்த மரங்கள் பிடிவாதகமாகச் செங்குத்தான் நிற்கத் தொடங்கின. எனவே தான் அவைகளில் ஏறிச் சாறு எடுக்க வேண்டிய நிலை உருவானது. கதை, திரைக்கதை வசனம் நல்லாயிருக்கா?


 இது போலத்தான் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று ஒரு புதிய மூலக்கூற்றை உருவாக்கி மன்னர்களைச் சுதியேத்தி எப்போது தங்களைச்சுற்றி இருக்கும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்து கொண்டு வர காலப்போக்கில் பிராமணர்கள் உருவாக்கியது தான் சமூகச் சட்டம் என்ற நிலை வரைக்கும் வந்து சேரத் தொடங்கியது. எல்லா மன்னர்களின் சபையிலும், ஆட்சி அதிகாரங்களிலும் இருந்தாலும் இவர்களுக்கென்று தனியான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இருந்த காரணத்தால் வேண்டும் போது உள்ளே வந்தனர். தேவையில்லாத போது அணைவரையும் விட்டு விலகி இருந்தனர். இவர்களே பல சமயம் மன்னர்களைக்கூட விலக்கி வைத்து இருந்தனர். இதுவே தான் தென்னிந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து போதும் முக்கியப் பதவிகளில் இவர்களே இருந்தனர். எவரும் எதிரியுமல்ல அதே சமயத்தில் நண்பர்களும் அல்ல. தங்கள் வாழ்க்கை முக்கியம். அதற்காக உருவாகும் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியமென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை அடிப்படையாக வைத்தே செயல்பட்டனர்.




 நாடார்கள் என்பவர்கள் சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்பதற்கு இன்று வரைக்கும் பல ஆதாரங்களைச் சரித்திரம் வைத்துள்ளது. தென் தமிழ்நாட்டில் நாடார்கள் என்பவர்கள் அசல் குடிகளாக இருந்தவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர்கள் இனத்தின் பரம்பரைக் கதைகளும் இதைத்தான் பல்வேறு விதமாகக் சொல்கின்றது. ஆனால் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியென்பது ஆண்டுக் கொண்டிருந்த மன்னர்களுக்கு மட்டும் பாதிப்பாக அமைந்துவிடவில்லை. ஒரு மிகப் பெரிய சமூக இன மக்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. பாண்டிய மன்னர்களுக்கு இருந்த உரிமைகள், சலுகைகள், பட்டங்கள், சொத்துக்கள் யாவும் பறிக்கப்பட்டு மீதியிருந்தவர்களை நிர்கதியாக்கப் பட்டனர். மதுரைப் பகுதிகளில் இருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டனர். எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாடோடிகளாகத் தென் தமிழகத்தில் சுற்றி அலைய மொத்தத்தில் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாயம், பனைஏறுதல் போன்ற தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் விளைவே மக்கள் வாழ முடியாத பகுதியாக இருந்த திருச்செந்தூர் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


 இவர்களால் மீண்டு வரமுடியாதபடி அடுத்து வந்த நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மற்றும் அவர்கள் குறித்த அத்தனை தகவல்களையும் அழிக்க முற்பட்டனர். இலக்கியங்களில் உள்ள பல விசயங்களை மாற்றித் திரிபு சேர்த்து திக்குமுக்காட வைத்தனர். இதன் தொடர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவானது. பிற்காலத்தில் பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சொல்ப்படும் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதாகக் கொண்டு வரப்பட்டது. சரித்திர சான்றுகளின்படி நாடார்களின் முன்னோர்களான பாண்டியர்கள் கோவிலின் மேற்கு வாயில் வாயிலாக உள்நுழைந்த தான் தெய்வங்களை வழிபபட்டனர். இன்று வரை தென்மாவட்டங்களிலுள்ள கோவில்களின் மேலைக்கதவுகள் மூடிக் கிடக்கும் நிலையைப் பார்க்கலாம். மேற்கு வாயில் நிரந்தரமாக மூடப்பட்ட காரணத்தால் தங்கள் பெருமைக்கு உண்டான குறைவு என்பதாகக் கருதிக் கொண்ட நாடார்கள் கோயில்களின் ஏனைய வாயில்களின் வாயிலாக உள் நுழைய மறுத்தனர். ஒவ்வொரு தலைமுறையிலும் மனதில் பதிந்த போன இந்தக் கோவில் விவகாரம் தான் பின்னால் விகாரமான சமூக அமைப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்தக் கோவிலை வைத்து தான் பெரியவன், சிறியவன், தாழ்ந்தவன் போன்ற முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியது. வெளியே நின்று வணங்க வேண்டும். பாதி அளவிற்கு உள்ளே வந்து வணங்கலாம். குறிப்பிட்ட மக்கள் அருகே வந்து வணங்கலாம். இதற்கு மேலே ஆகம விதிகள் என்ற போர்வையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கருவறை வரைக்கும் வரலாம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களைச் சங்கடப்படாமல் அள்ளித் தெளிக்க அவரவரும் அடித்துக் கொண்டு சாக ஆரம்பித்தனர்.

பிராமணர்களை நாம் குறைசொல்வதை விட இப்போது இன்னோருவிதயத்தை யோசித்துப் பார்க்கலாம். மறுஜென்மம் எப்படி இருக்கும் என்றே தெரியாத மக்களுக்கு ஏன் அடுத்த ஜென்மத்தில் மேல் ஆசை வந்தது. இதன் காரணமாகத்தானே நாடார்கள் பூணூல் அணியத் தொடங்கினர். இதைச் செய்தால் இது நிவர்த்தியாககும் என்று சொன்னவுடன் இன்று வரைக்கும் அத்தனை பேர்களும் அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பது ஏன்? இதைத்தான் ஆசை என்றொரு சொல்லும் இறுதியில் அவஸ்த்தை என்றொரு முடிவும் கிடைக்கின்றது. மன்னர்களுக்குப் பிராமணர்கள் உருவாக்கி வைத்த குலப்பெருமை முக்கியம். மக்களுக்குத் தாங்களும் சமூகத்தில் சரியான சம உரிமைகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமாக இருக்க ஒவ்வொருவருரின் தேவைகளும் அவரவரை உந்தித் தள்ளத் தொடங்கியது. பிராமணர்கள் புள்ளி மட்டும் தான் வைத்தார்கள். அவரவர்களும் தங்களுக்குப் பிடித்த வகையில் கோலம் போட்டுக்கொள்ளத் தொடங்கினர். சிலர் ஜெயித்துப் பெரும்புள்ளியாகத் தெரிந்தனர். ஜெயித்து வர முடியாதவர்கள் சிறு புள்ளியானதோடு வாழ்வில் கரும்புள்ளியாக மாறி தாழ்த்தப்பட்டோர் என்றொரு வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினர். கடைசிவரைக்கும் இநத மக்களை மேலே வரமுடியாத அளவிற்கு உருவாக்கிய சமூக முரண்பாடுகளின் காரணமாகவே தவிப்பான வாழ்க்கை வாழத் தொடங்கினர்.


குறிப்பிட்ட சாதி மக்களைத் தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் பட்சத்தில் ஆதிக்கச் சாதியினர்களுக்குப் பல விதங்களிலும் நன்மை உருவானது.. இவர்களை வைத்தே தங்களின் பொருளாதாரப் பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். அதைக் கொண்டே மேன்மேலும் வளர்ந்து வருபவர்களை உயரவிடாமல் அழுத்தி வைத்திருக்கவும் முடியும். இலவசமாக வேலை வாங்கிக் கொள்ளலாம். எதிர்த்து பேச முடியாது. பேசினால் தெய்வ குற்றம். அதற்கு மேலும் அரசாங்க எதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து ராஜதுரோகியாக மாற்றி விட முடியும். உன்னை விட நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்று சொல்லியே அவனை மழுங்கடித்த சிந்தனைகளுடன் வைத்திருக்கலாம். கடைசி வரைக்கும் போட்டிக்கு ஆள் இல்லாத இடத்தில் வெற்றிக் கோப்பையை வாங்குவது எளிதாகத்தானே அமைந்து விடும். இப்படித்தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர்களைச் சுரண்டல் மனப் பான்மையில் ஒவ்வொருவரும் அமுக்கி வைத்திருந்தனர். ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்கச் சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.

மூலக் கரு: தமிழ் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

No comments: