Thursday 12 February 2015

தமிழர் தேசம் - உண்மைத் தமிழன்

தமிழர்களின் வாழ்க்கையில் அறிவுக்குக் கொடுக்கும் மரியாதையை விட உணர்ச்சிகளுக்கு அளிக்கும் மரியாதை மிக அதிகம். சங்ககால இலக்கியங்களில் காணப்படும் தேவையில்லாத புகழ்ச்சி பாடல்கள் முதல் இன்றைய குத்துப்பாடல்களின் மகிழ்ச்சி வரையிலும் நம்மால் காண முடியும். இது சரியா? தவறா? என்று யோசிப்பதே இல்லை. தன்னைக் கவர வேண்டும். தன்னுடைய புலன்கள் தூண்டப்படவேண்டும். அது திரை என்றாலும், அரசியல் தலைவர்களின் உரையாக இருந்தாலும் சரி?


 ஒவ்வொரு தலைவர்கள் இறக்கும் போது நம்மவர்களின் உணர்ச்சி தூண்டுதல் மிக அதிகமானது. தற்கொலை,தீக்குளிப்பு, சாலை மறியல், சமூகத்தை நிர்கதியாக்கும் அத்தனை சம்பவங்களும் அன்று முதல் இன்றுவரையிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் வெவ்வேறு பெயர்கள். பாதிக்கப்பட்டவனின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும். அதனால் கிடைத்த ஆதாயத்தைப் பெற்ற தலைவர் அச்சமில்லாமல் ஆட்சியில் அமர்ந்து இருப்பார்.


தொடக்கத்தில் திரையில் கோலோச்சிய வாழ்ந்த பாகவதர் குறித்துப் பல கதைகள் இன்னமும் உண்டு. திருச்சிக்கு வருகிறார் என்றால் காலை முதல் ரயில் நிலையத்தில் காத்திருந்த உணர்ச்சிக்கூட்டம் அது. இதுவே ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி மாறி ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் கூட்டம் உருவானது. இன்று கதாநாயகிக்கு சிலை உருவாக்குவது வரையிலும் உணர்ச்சிச் தமிழனாகவே வாழ்ந்து வருகின்றான்.


அண்ணா அவர்களே “நானும் எம்.ஜி.ஆரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் எம்.ஜி.ஆர் தான் வெற்றி வாகை சூடுவார்” என்று அவர் கூறிய கருத்து இங்கு அத்தனை முக்கியமானது. காரணம் சங்ககாலம் முதல் இன்று வரையிலும் அறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில் தமிழர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள். உள்ளுர் தமிழர்கள் தான் இப்படி என்றால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் உணர்ச்சி விசயங்களில் அதீதமாகத்தான் உள்ளனர். நாவலர் நெடுஞ்செழியன், கர்மவீரர் காமராஜர் போன்றவர்கள் தேர்தலில் தோற்றுப் போயிருப்பதை நீங்கள் எந்த வகையில் பார்ப்பீர்கள்? 


அறிவை விட அன்று தூண்டும் உணர்ச்சிகளுக்குத்தானே நம் தமிழர்கள் மதிப்பு அளிப்பவர்கள் என்பதில் மாற்றம் ஏதும் உண்டா? அறிவு வசப்படும் மேலைநாடுகளில் வாழும் மக்கள் இதற்கு நேர்மாறாக வாழ்கின்றனர். 






“வெற்றிச்சின்னம் நமதே” என்று இரண்டு விரல் காட்டி பிரிட்டன் மக்களைத் தன்னுடைய ஆளுமையில் வைத்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தேர்தலில் ஏன் தோற்கடித்தார்கள்?


 “ஜப்பான், ஜெர்மனின் தொடர் குண்டு வெடிப்புகளை மிக லாவலமாகக் கையாண்டு எங்களை, நாட்டைக் காப்பாற்றியது நீ தான்? ஆனால் உன்னுடைய ஆளுமை என்பது போருக்கு மட்டுமே சரியானது” என்று கருதிக்கொண்ட மக்கள் கொடுத்த பரிசு தான் தோல்வி. 


ஆனால் இங்கு ஐந்து வருடங்கள் நேர்மையாக ஆட்சி செலுத்த முற்பட்டாலும் தேர்தலுக்குப் பத்துநாட்கள் முன்னால் இயற்கையாகச் செயற்கையாக இறக்கும் தலைவர் மூலம் அனுதாபத்தின் மூலம் எப்படி மொத்த ஐந்து வருட தியாகமும் அடிபட்டுப் போகின்றது?


 இன்றுவரையிலும் கேரளாவில் நடிகர் என்பவர் அரசியலில் நுழைய வேண்டும் என்று கனவு கூடக் காண்பது இல்லை. ஆள்கின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அடுத்த ஆட்சி நம்முடையது இல்லை என்ற எண்ணத்தில் தான் ஆட்சியில் அங்கே இருக்கிறார்கள். காரணம் அறிவு உந்தப்பட்ட மக்கள் உருவாக்கிய பயமிது. உலகத்தில் உள்ள அத்தனை இனத்திலும், சமூகத்திலும் நீங்கள் தேடிப்பாருங்கள். நம் தமிழனத்தில் உள்ள மேதைகளை விட வேறு எவரையும் நீங்கள் கண்டு விட முடியாது.


 இது மிகைப்படுத்தப்பட்ட உண்மையல்ல. நமக்கு திருவள்ளுவர் ஒருவர் போதும் . அவர் வாழ்ந்து காலத்தில் எந்தப் புத்தகத்தை, எந்த ஆராய்ச்சி நூலை வைத்துக்கொண்டு, குறிப்பு எடுத்துக்கொண்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலை குறி சொல்பவன் போல் ஒன்னே முக்கால் அடியில் நிறுத்தியவர் போல் எவரையும் உங்களால் காட்ட முடியுமா? விஞ்ஞானம், மெய்ஞானம், அறிவு, ஆட்சி, ஆளுமை, அதிகாரம், களவு, கலவு தொடங்கி அவர் தொடாத துறை உண்டா? இன்று மேல் நாட்டு அறிஞர்கள் சொன்னது என்று குறிப்பிட்டுச் சொல்கின்ற எந்த விசயங்களுமே திருவள்ளுவரின் புலன் அடக்கத்தில் அன்றே கிடைத்த ஞான அறிவு.


 முப்பாலையும் உங்களுக்குத் தாய்ப்பால் போல் கொடுத்த அத்தனை சுத்தமான பாலையும் நீங்களும் நானும் ஐந்து பத்து மதிப்பெண்களுக்குத் தானே மனப்பாடம் செய்து மறந்தோம். திருக்குறளை மேற்கோளுக்காக எடுத்த தமிழின தலைவர்களும், உரை எழுதிய அறிஞர்களும் என்ன மாறுதல்களை நமக்குத் தந்து விட்டார்கள்? இன்று கலாச்சாரம் என்ற பெயரில் அடுத்தவரை கவர்வதில் தானே நம் கவனம் வைத்துள்ளோம். ஒரு குற்றம் செய்து விட்டாலே தோன்றும் குற்ற உணர்ச்சி என்பது இன்று மாறி “நீ பிழைக்கத் தெரியாதவன்” என்று முடித்து விடுகின்றார்கள்.


மடமை, அறியாமை, அறிவற்ற சிந்தனைகள் எல்லாமே மொத்தமாக வளர்ந்து வளர்ந்து மொத்த சமூகத்தில் தமிழன் என்பவன் உணர்ச்சி தமிழனாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கின்றானே தவிர உண்மைத்தமிழனாக வாழவில்லை.

மூலக் கரு: தமிழர் தேசம்
ஆக்கம்: ஜோதிஜி

No comments: