Wednesday 25 February 2015

சங்ககாலம் முதல் சங்கு ஊதின காலம் வரை பகுதி - 1

தமிழகத்தை ஆண்டு மூன்று மன்னர்களும் ஒவ்வொரு சமயத்திலும் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளை நோக்கி படையெடுத்தார்கள், வெற்றி கொண்டார்கள். மானம் பெரிதென வாழ்ந்தார்கள். ஆனால் இந்த மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்தார்களா?  தமிழக மன்னர்கள் போர்க்களத்திற்கு வெளியே புரிந்துணர்வோடு ஒன்று சேர்ந்து இருந்தது மிகக்குறைவே. இதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சி கிபி இரண்டாம் நூற்றாண்டில் இறுதியில் முடிந்து போய் அடுத்து 300 ஆண்டுகள் களப்பிரர் ஆள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த சோழப் பேரரசுக்குள் உருவான குடும்பச் சண்டைகளும், மூவரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு சாக அடுத்தவர்கள் உள்ளே வர காரணமாக இருந்தவர்களும் நம் அற்புத தமிழ் மன்னர்களே?


நாம் இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கக்கூடிய இராஜராஜ சோழன் ஆட்சியை விட பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தைப் புராதன சிறப்பு மிக்கது என்கிறார்கள். அதிலும் கடைச்சங்க பாண்டியர்கள், இடைச்சங்க பாண்டியர்கள், இது போகப் பிற்காலப் பாண்டியர்கள் என்று வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைந்துள்ளனர். நாம் மொத்தமாக உள்ளே புகுந்து வெளியே வர வேண்டுமென்றால் நாமே நமக்குச் சங்கூதிக் கொள்வது போல் ஆகிவிடும். 





மானவர்மன் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சிகாலத்தில் தான் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் முற்றிலும் புதிய பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு தங்களின் எழுச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பக்கங்களை எழுதத் தொடங்கினர். பாண்டிய மன்னர்களின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகப் பல்லவர்களுடனும் மோதி தங்களின் ஆளுமையைப் பெருக்கிக் கொள்ளத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர மன்னனை வெற்றிக் கொண்ட பிறகே பாண்டிய மன்னர்களின் பொற்காலம் தொடங்கியது. ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் அரிகேசரி மற்றும் ராஜசிம்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் உள்ளேயிருந்த பல குறுநிலமன்னர்களை அடக்கி தாங்களை வலிமையாக்கிக் கொண்டனர். ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தான் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் (815 முதல் 862) பல்லவ பேரரசுடன் மோதிய போது மற்றொரு ஆச்சரியமும் உருவானது. 


அருகேயிருந்த ஈழத்தில் தமிழ்நாட்டு அரசியல் வேர்விடத் தொடங்கியது. எல்லாவகையிலும் எழுச்சி பெற்ற பாண்டிய பேரரசு முதல் முறையாக ஈழத்தில் படையெடுத்துச் செல்ல அங்கேயிருந்த ஸேன மன்னன் (833 முதல் 853) ஓட்டம் பிடிக்க அநுராதபுரத்தில் கிடைத்த செல்வமும் வெற்றியுமாகத் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான். இதுவே தான் இராஜராஜ சோழன் காலம் வரைக்கும் நடந்தேறி வந்துள்ளது. செல்லும் இடங்களில் தங்களின் கொடியை பறக்கவிட வேண்டியது. முடிந்தால் சார்பாளர்களை நியமிக்க வேண்டியது. முடிந்தது கதை. மன்னர்களைப் பொறுத்தவரையிலும் இதுவொரு மற்றொரு மணிமகுடம். பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு முடிவுக்கு வர எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெற்ற காரணங்களில் ஒன்று உண்டு ? ஈழத்துக்குப் போர் எடுத்து சென்று வென்றது. பாண்டிய மன்னர்களின் போர் உக்கிரத்தை தாங்க முடியாமல் தப்பிச் சென்ற மன்னனை கண்டு காணாமல் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தது. தங்களிடம் தோற்றவன் நெஞ்சம் முழுக்க வஞ்சகத்துடன் இருப்பானே என்பதை மறந்து போக இதுவே இவர்களின் குடும்பத்தில் குளறுபடி உருவாவது வரைக்கும் வந்து நின்றது. முறைப்படியான போரில் வெற்றி கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த ஈழத்திலிருந்த மன்னன் இரண்டு காரியங்கள் செய்தான்.






 ஒன்று பல்லவ அரசுடன் இணைந்து பாண்டிய பேரரசை எதிர்த்தது. இது முறைப்படியான போர். முதுகுக்குப் பின்னால் இருந்து செய்த மற்றொரு காரியமும் ஒன்று உண்டு. இந்தத் தந்திரக்கார கூட்டணிப் படையினர் பாண்டிய மன்னனின் மகனாகிய வரகுணபாண்டியனை சுதியேத்தி அப்பாவுடன் மோத வைத்தது. அப்பாவுடன் மோதி தோற்ற மகன் ஈழத்துக்குச் சென்றான். இது போதாதா? அடுத்தத் திட்டம் உருவானது. ஈழத்து ஸேன மன்னன் படைகள் (853 முதல் 857) பாண்டிய நாட்டின் தென் பகுதியான மதுரையை நோக்கி முன்னேறின. வடக்கில் வந்த பல்லவர் படைகள் சுற்றி வளைக்க முடிவுக்கு வந்தது. போரில் வீரம் ஜெயிக்குமா? விவேகம் ஜெயிக்குமா? ஜெயித்தது விவேகமே? சிங்கள மன்னன் படை மகன் ஸ்ரீ வரகுண பாண்டியனைப் புதிய பாண்டிய மன்னனாக (862) முடிசூட்டி அழகு பார்த்தது. அப்பா புதைத்த மண் காய்வதற்குள் மகன் அரசாட்சியில் அமர்ந்த காட்சியைக் காணும் போது 21 ஆம் நூற்றாண்டு வரைக்கும் சமகால அரசியலும் இப்படித்தானே இருக்கிறது.


 திருப்புறம்பியத்துப் போர் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கு நடந்த போர். இந்தப் போரின் மூலம் தான் பல்லவர்களின் ஆட்சியும், பாண்டியர்களும் வலுவிழக்கக் காரணமாக இருந்தது. கொல்லைப்புற வாசல் வழியாக வந்த பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனை தோற்கடிக்கப்பட்டான். போரில் பல்லவ மன்னன் அபராஜிதன் வெற்றி பெற்றுருந்தாலும் இந்தப் போர் தான் சோழர்கள் தங்களது பாதையை உருவாக்கிக் கொள்ளக் காரணமாகயிருந்தது. இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவிய முதலாம் ஆதித்த சோழன் சும்மாயிருப்பாரா? 

அவர் என்ன செய்தார் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

மூலம்: தமிழர் தேசம்
ஆசிரியர்: ஜோதிஜி

No comments: