Tuesday 24 February 2015

விருதை தோலாண்டி திரு.தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார் வரலாறு - 1

எனது ஐய்யாப்பா (தகப்பனாரின் தகப்பனார்) திரு.தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார் அவர்களின் தந்தையார் திரு.தொ.மு.ந.முத்துமாரி நாடார் அவர்கள் 19ம் நூறாண்டிலேயே அதாவது 1865 காலக்கட்டத்திலேயே விருதுநகரை மையமாக கொண்டு ஏலக்காய், காபிக் கொட்டை போன்றவற்றை கொல்கத்தா வழியாக ஏற்றுமதி செய்து வந்துள்ளார். தனது மக்களாகிய தொ.மு.ந.மு.சோமசுந்தரநாடார், சுப்பையா நாடார், தனுழ்ஹ்கோடி நாடார், ரத்தினசாமி நாடார், நல்லதம்பி நாடார் ஆகியோரை சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது இரட்டை குதிரை பூட்டிய சாரட் வன்டியில்தான் படிக்க அனுப்பியுள்ளார். தனது மகன்களை கோட்டும், அரைக்கால் டவுசரும் போட்டு சரிகை தொப்பி அணிவித்துதான் பள்ளிக்கு அனுப்பியுள்ளார். விருதுநகர் தெற்கு ரத வீதியில் சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில் உள்ள வீடுதான் சாரட் நிற்குமிடமாக இருந்துள்ளது. இவர்களை அப்பொழுது "லேண்ட் லார்ட்" என்று அழைத்து வந்துள்ளனர்.




1900ல் பிறந்த எனது ஐய்யாப்பா திரு.தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார் அவர்கள் ஒரு அரேபிய குதிரையை வளர்த்து வந்தார். தினமும் அதில் சவாரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இவர் குதிரையில் சவாரி செய்யும் கம்பீரத்தை அந்த காலத்து அரசர்களே வியந்து ரசித்துள்ளனர். இவர் சேவல் சண்டையிலும், சண்டை சேவல் வளர்ப்பிலும் பிரபலம். அதே போல் ராஜாளி பறவை (FALCON) எனும் கழுகு வகையை சேர்ந்த பறவையையும் வேட்டைக்கு வளர்த்து வந்தாராம். விருதுநகர் பொட்டலில் இவரது விசிலுக்கு அது பறப்பதும் வேட்டையாடுவதும், இன்னொரு விசிலுக்கு இவரிடம் வருவதையெல்லாம் காண ஒரு கூட்டம் இருக்கும். விருதுநகருக்கு முதன் முதலில் மின் நிலையம் அமைக்க இடம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பாவாலி ரோட்டில் தற்பொழுது மின் நிலையம் அமைந்திருக்கும் இடத்தை தானமாக குடுத்தவர் இவர். அந்த காலத்தில் பிரபலமான இங்கிலாந்து நிறுவனமான ஜி.இ.சி எனப்படும் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியின் (General Electric Company) தென் தமிழகத்தின் ஏகபோக ஒரே மொத்த விற்பனையாளராக  இருந்துள்ளார்.




மதுரையில் பிரபல கிருத்துவ மிஷன் மருத்துவமனை எதிரில் கீழ வெளி வீதியிலும் கடை நிறுவி விருதுநகர், மதுரை என இரு ஊரிலும் எலக்ட்ரிக் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது குதிரை ஏற்றம், குதிரை வளர்ப்பு ஆகியவற்றை கவனித்த எட்டயபுரம் மன்னர் போன்ற மன்னர்கள் இவரிடம் ஆலோசனை கேட்டே குதிரைகள் வாங்கினார்களாம். இது போல பல மன்னர்களிடம் நெருங்கிய நட்பு வைத்திருந்துள்ளார். இவருக்கு பின்னர் எங்கள் தொ.மு.ந.மு.ந.தனசேகர பெரியய்யாவும், ஜெய்சிங் பெரியய்யாவும் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் வேட்டை என பிரபலமாக இருந்து வந்தனர்.

என் முன்னோர்
முன்னோர் - தோலாண்டி நாடார்
இரண்டாம் தலைமுறை - தொ.முத்து நாடார்
எள்ளுத் தாத்தா - தொ.மு.நல்லதம்பி நாடார்
கொள்ளுத் தாத்தா - தொ.மு.ந.முத்துமாரி நாடார்
ஐய்யாப்பா - தொ.மு.ந.மு.நல்லதம்பி நாடார்
ஐயா - தொ.மு.ந.மு.ந.பாஸ்கரன் நாடார்
நான் - தொ.மு.ந.மு.ந.பா.குமரன் நாடார்

மேலும் தகவல்கள் பரிமாருகிறேன்.

No comments: