Saturday 7 February 2015

மரிய இருதயத்தை தெரியுமா??

இவருடைய பெயர் மரிய இருதயம். இரண்டு முறை ஃகேரம் விளையாட்டில் உலக சாம்பியன், 9 முறை நேஷனல் சாம்பியன் , கேரம் விளையாட்டில் இந்திய விளையாட்டு விருதுகளில் உயர்வான அர்ஜுனா விருது வாங்கியவர்.




இவரை சமீபத்தில் அடையாளம் காட்டியது Vijay TV யின் நீயா நானா.
எத்தனை பேருக்கு இவரை ெரியும்.உண்மையில் வெக்கி தலை கவிழ்கிறேன் ஒரு மிக சிறந்த விளையாட்டு வீரனை மதிக்க தெரியாததால். கிரிகெட்டை மட்டும் நாம் விரும்புவதால் எத்தனையோ விளையாட்டு வீரர்களை அவர்கள் திறமையோடு புதைத்து விடுகிறோம். 
1996ல் மரிய இருதயத்துக்கு இந்திய் அரசு அர்ஜூனா விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. இவர் தற்போது சென்னை பெரியமேடு பகுதியில்தான் வசிக்கிறார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி பிலோமினா. மரிய இருதயம்-பிலோமினா தம்பதிக்கு விண்ணொளி, கிறிஸ்டி, லாசர், ஆஸ்டின் என 4 மகன்கள் இருக்கிறார்கள்.




ஒரு கோரமான விபத்து மூலமே எனக்கு மரிய இருதயம் பற்றி தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. 2012ல் ஒரு விபத்தில் அவர் மனைவியை இழந்து கால் முறிந்த செய்தியை படித்த போதுதான் அவரை அறியும் வாய்ப்பு கிடதை்தது! மரிய இருதயத்துக்குப் பிந்தைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அவரது வயதை ஒத்தவர்களுக்குக் கூட அவர் ஒரு முக்கியமான விளையாட்டுச் சாதனையாளர் என்பது தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஒரு முன்னாள் வீரர் ஒரு விபத்தில் தனது மனைவியைப் பறிகொடுப்பதன் மூலமே சக மனிதர்களுக்கு அறிமுகமாக முடிகிறது என்பது ஆரோக்கியமான சூழலா? ’ ஓ நீங்க ஸ்போர்ட்ஸ் பெர்சனா? நல்லா கேரம் விளையாடுவீங்களா?’ என்ற காலம் கடந்த வியப்பை இன்று காவல் நிலையத்திலும் பொது மருத்துவமனையிலும் துக்க வீட்டிலும் மரிய இருதயம் நிச்சயம் எதிர்கொண்டிருப்பார். மனைவியை இழந்த துயரத்துக்குச் சமமாக, நம்மவர்களின் அதீத ஆச்சர்யம் மரிய இருதயத்தைப் புண்படுத்தியிருக்கும் இல்லையா?



ஒருகாலத்தில் பல்வேறு விளையாட்டுக்களில் வியத்தகு சாதனைகள் படைத்துவிட்டு இன்று புகழ் வெளிச்சம் சிறிதும் இன்றி மௌனமாக நடமாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்கள் மரிய இருதயத்தைப் போல இன்னும் எத்தனை பேரோ? இன்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, விளையாடிய பத்து மேட்ச்களில் ஏதேனும் ஒரே ஒரு மேட்ச்சில் அரை சதம் அடித்து, விஐபியாக கொண்டாடப்படுகிற வீரர்களுக்குக் கொடுக்கும் மரியாதையில் கால்வாசியாவது மரிய இருதயம் போன்றவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோமா? 


கேரம் போன்ற விளையாட்டுக்கள் கிரிக்கெட்டுக்குச் சமமான வணிக ரீதியாக லாபம் தரும் விளையாட்டு இல்லை என்பதால் ஊடகங்கள் இவர்களை சுலபமாக மறந்துவிடுகின்றன. அரசும் அதே தவறைச் செய்வதுதான் கொடுமை. மரிய இருதயம் போன்ற விளையாட்டுச் சாதனையாளர்கள் குறித்த தகவல்கள் மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் நம் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டாமா? இவர்களுக்கு அர்ஜூனா விருது வழங்குவதோடு, இவர்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலமும்தானே இத்தகைய விளையாட்டுக்கள் நம்மூரில் வளர்ச்சி அடைய முடியும்?


மரிய இருதயம் நல்ல வேலையில் இருப்பது மட்டுமே இந்தச் சோக செய்தியில் சின்ன ஆறுதலான விஷயம்.

No comments: